வியாழன், 6 அக்டோபர், 2011

சிலிக்கான் சிங்கம்

”எந்தவொரு மனிதனும் இறப்பதற்கு விரும்புவதில்லை. சொர்க்கத்திற்கு செல்ல நினைப்பவர்கள் கூட. என்றாலும் மரணம் யாராலும் வெற்றிக் கொள்ளப்பட முடியாத, நாம் அனைவரும் கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒரு இலக்கு. மரணம் வாழ்வின் மிகச் சிறந்த கண்டுப்பிடிப்பு. பழையதைக் கழித்து புதியதை புகுத்தி வாழ்வை மாற்றும் தூதன். நீங்களும் கிழடு தட்டி இவ்விடத்தை விட்டு அகலும் நாள் வெகு தூரத்தில் இல்லை. நாடகத்தன்மையான வார்த்தைகளாயிருந்தாலும் இதுவே உண்மை.”

என்று நிலையாமையைப் பற்றிக் கூறியவர் இன்றிலிருந்து நம் மத்தியில் இல்லை. ஆம் ஆச்சரியப்படத் தக்க தொழினுட்ப சாதனைகளின் மூலம் எதிர்காலத்தை நிகழ்காலத்திலேயே காணும் சாத்தியங்களை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்து விட்டார். வாக்மனையும், லாப்டாப்பையுமே வாய் பிளந்து பார்க்கும் என்னைப் போன்ற தற்குறிகளுக்கு எல்லாம் ஐப்பாடும், ஐஃபோனும், ஐப்பேடும் பெரும் ஆச்சரியங்கள்தான்.

இந்த பெயரை நான் முதன்முதலில் கேள்விப்பட்டது குமுதத்தில் வந்த “பிஸினஸ் மகாராஜாக்கள்” என்ற தொடரில். அதன் பிறகு “ஃபொரெஸ்ட் கம்ப்” திரைப்படத்தில் டோம் ஹேன்க்ஸ் இறால் பிடித்து சம்பாதிக்கும் பணத்தை டான் அப்பிள் நிறுவனத்தில் முதலிட்டு பெரிதாய் காசு பார்க்கும் போது அத்தனை லாபம் கொழிக்கும் கம்பனியை நடத்துமளவுக்கு இவரென்ன அவ்வளவு பெரிய அப்பாடாக்கரா என யோசித்திருக்கிறேன். ஆப்பிள் நிறுவன CEO ஆக 2006 தொடக்கம் 2010 வரை வருடமொன்றிற்கு அவர் பெற்ற சம்பளம் 1 டொலர் மட்டுமே. இதை படிக்கும் ஒரு ரூபாய் சம்பளம் பெற்ற வேறு யாரேனும் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.

திருமணம் செய்து கொள்ளாத ஒரு இளம் ஜோடிக்குப் பிறந்து பின் தத்துக் கொடுக்கப்பட்டு கல்வியில் நாட்டமின்றி வளர்ந்து பின் தொழினுட்ப புரட்சியின் தலையாய நபராக மாறிய இவரின் வரலாறு ஒரு சினிமா கதையை விட சுவாரசியமானது. வாழ்வில் சடுதியாக முன்னேற்றத்தை சந்தித்த ஜாப்ஸ் அதையொன்றும் நேர்மையான வழியில் அடையவில்லை. நேர்மையாக ஒரே பாட்டில் வெற்றியை சுவைக்க அவர் ஒன்றும் ரஜினிகாந்த் இல்லையே. ஆக சாம,தான, பேத, தண்டங்களைப் பிரயோகித்தும் முடியாத போது ஏகப்பட்ட தகிடு தத்தங்களை செய்துமே அவர் இந்த இடத்திற்கு வந்தார். துரோகம் என்ற வார்த்தைக்கெல்லாம் இந்த வியாபாரக் காந்ததின் அகராதியில் வியாபர நுணுக்கம் என்ற அர்த்தம் இருக்கக்கூடும்.
”முன்னேற்றம் உன் குறிக்கோளாயின் நீ மற்றவர்களைப் பற்றி சிந்திப்பதை விட்டுவிடு” என்ற பில்லா அஜித் பாணியிலான இவரது மேற்கோள் உலகப் பிரசித்தம்.

தரமான பொருட்கள் மலிவான விலையில் இது ஸ்டீவின் தாரக மந்திரம். இதன் மூலம் அதிகமான வாடிக்கையளர்களை கவர்ந்த இவர் பெற்ற லாபமும் பல மில்லியன் டாலர்கள் இருக்கும். ஆனால் அதற்காக உலகெங்கும் இருந்த ஆப்பிள் தொழிற்சாலை பணியாளரகள் அனுபவித்த துன்பம் சொல்லி மாளாது. சீனாவில் ஐபாட் தொழிற்சாலை ஒன்றில் தங்கியிருந்து வாரத்திற்கு 60 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்து மாதமொன்றிற்கு 100 டொலர் அளவில் மட்டுமே சம்பளம் பெற்ற 200,000 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வருவாயில் பாதிக்கு மேல் உணவு மற்றும் வதிவிடத்திற்காக பிடித்தம் செய்யப் பட்டது, எல்சிடி திரைகளை சுத்தம் செய்யப் பயன்படும் இரசாயனப் பொருளால் பல தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டது என்பனவெல்லாம் வண்ணமயமான ஆப்பிளின் சரித்திரத்தின் கறுப்பு அத்தியாயங்கள்.
நம்மை ஒரு நவீன உலகுக்கு வழிநடத்தியவராக ஸ்டீவை கெளரவிக்கும் நாம் அந்த தொழிலாளர்களையும் என்றென்றும் நினைவு கூறுதலே ஞாயமாகும்.


டிஸ்கி:- ஆப்பிளின் லேட்டஸ்ட் தயாரிப்பான ஐஃபோன் 4s எதிர்பார்த்த வர்த்தக வெற்றியைப் பெற தவறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

2 கருத்துகள்:

maruthamooran சொன்னது…

ஸ்டீவ் ஜாப்ஸ்....! நிச்சயமாக ஆச்சரிக்குறி தான்!!

ஆனால், ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் பலரின் தோல்வியும்- இழப்பும் இருக்கின்றது என்பதற்கும் அப்பிளின் வளர்ச்சியும் நல்லதொரு சான்று!

Jana சொன்னது…

ம்ம்ம்... முற்றுப் பெறாத ஆச்சரியக்குறி !

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails