வியாழன், 26 மார்ச், 2009

பழசுக்கு வந்த மதிப்பு

"அரசர் அந்த புலவனுக்கு ஆயிரம் வராகன்களை பரிசாக வழங்கினார்" என அம்புலிமாமாவில் படித்திருப்போம். எதனை பேருக்கு வராகன் என்றால் என்ன அது எவ்விதமான கொடுக்கல் வாங்கலுக்கு உகந்தது எனத் தெரிந்திருக்கும். இது போன்ற பல விடயங்களை அறிந்துக் கொள்ளும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது.

இலங்கை மத்திய வங்கியின் மாத்தளை கிளையில் பணம் மற்றும் அதன் வரலாறு தொடர்பான கண்காட்சி நடைப் பெற்றது.

எவ்வளவுதான் theory ஆக படித்தாலும் நேரடியாக பார்ப்பது போல் வராது என்பார்கள். அந்த வகையில் அங்கே நான் பார்த்தவை படங்களாக























புதன், 25 மார்ச், 2009

பூஜாவின் ஹீரோ மீது கொலை முயற்சி



இலங்கையின் இளம் அரசியல்வாதியும் பிரபல வழக்குரைஞரும் வரும் மாகாண சபை தேர்தல் ஐ .தே.கவின் வேட்பாளருமான சுஜீவ சேனசிங்கவின் அலுவலகம் மீது இன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் சுஜீவ சேனசிங்கவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அட இதற்கேன் மேற்படி தலைப்பு என யோசிக்கின்றீர்களா "யாழுவோ" என்ற சிங்களப் படத்தில் இருவரும் வெவ்வேறு இனங்களை சேர்ந்த தம்பதியராக நடித்திருந்தனர். (பூஜா தமிழராகவும் சுஜீவா சிங்களவராகவும்)

செவ்வாய், 24 மார்ச், 2009

சொதப்புவரா கமல்


அபத்தமான அற்ப விடயங்களை தனது கொள்கைகளாக வரித்துக் கொண்டு அதற்காக ஆயிரக்கணக்கான உயிர்களை உலகளாவிய ரீதியில் காவுக் கொண்டு வருவது தீவிரவாதம்.

அவர்களின் கொள்கைகளில் நம்பிக்கையோ, அபிமானமோ இன்றி பத்திரிகைகளோடு தமது அரசியல் அறிவையும் மடித்து வைத்து விட்டு அன்றாட கடமைகளில் மூழ்கிப் போகும் சாதாரணர்களே அதிகம்.
ஆனால் தமக்கு கிஞ்சித்தும் நிறைவையோ, திருப்தியையோ தராத கொள்கைகளுக்காக தன்னை ஒத்த இன்னும் பல்லாயிரம் சாதாரணர்கள் பாதிப்புறுவதைப் பார்த்த ஒரு சாதாரணன் அசாதாரணமாக செய்யும் ஒரு காரியத்தின் தொகுப்புத்தான் " A Wednesday".

நஸ்ருதீன் ஷாவின் அலட்டலே இல்லாத அருமையான நடிப்பில் வந்துள்ள திரைப்படம். நடிப்பில் அவருக்கு இணையாக கரம் கோர்த்துள்ளார் அனுபம் கேர். கதாநாயகனாக அல்லாமல் கதையின் நாயகனாக வருகிறேன் என்ற வார்த்தையை தமிழ் நட்சத்திரங்களின் பேட்டிகளில் கேட்டிருப்போம். அவ்வார்த்தையின் அர்த்தம் எனக்கு சரியாக புரிந்தது இப்படத்தைப் பார்த்த போதுதான்.

போலிஸ் அதிகாரியான அனுபம் கேர் தான் கையாண்ட ஒரு சுவாரசியமான கேசைப் பற்றி பகிர்வதில் ஆரம்பிக்கின்றது படம். நடுத்தர வயது தாண்டி வயோதிபத்திற்குள் பிரவேசித்துக் கொண்டிருக்கும் சாதாரண ஊழியர் நஸ்ருதீன் ஷா. தினம் ரயிலில் கடமைக்கு சென்று வரும் இவர் ஒரு நாள் காவல் நிலையத்தில் தனது பர்ஸ் தொலைந்ததைப பற்றி புகார் கொடுக்க வருகிறார். தான் கொண்டு வந்த பையோடு பாத்ரூம் போகும் இவர் அதை அங்கேயே விட்டு விட்டு வெளியே வரும்போது சூடு பிடிக்கிறது படம்.

ஒரு சுமையான பையைத் தூக்கி கொண்டு மூச்சிரைக்க ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடியில் ஏறும் ஷா அங்கிருந்து போலிசுக்கு போன் போடுகிறார் . மும்பையின் பல முக்கிய இடங்களில் தான் குண்டு வைத்திருப்பதாகவும் அவை இருக்கும் இடங்களை தான் சொல்ல வேண்டுமெனில் தான் பெயர் குறிப்பிடும் நான்கு தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டுமெனவும் குறிப்பிடுகிறார்.
அதே நேரம் ஆர்வக் கோளாறான ஒரு இளம் பெண் ஊடகவியலாளரையும் தொடர்புக் கொண்டு ஒரு சுவாரசியமான செய்தி போலிஸ் தலைமையகத்தில் கிடைக்கும் எனக் கூறுகிறார்.(அங்கு நடப்பவற்றை உடனுக்குடன் அறிய).
இவரைப் பிடிக்க முடியாததால் இவரது கோரிக்கைக்கு உடன் படுகிறது போலிஸ். வாட்டசாட்டமான, கோபக்கார ஒரு அதிகாரியோடு அனுப்பி வைக்கப்படும் நான்கு தீவிரவாதிகளில் ஒருவனை அவ்வதிகாரி தடுத்து வைத்து மற்றைய மூவரையும் நஸ்ருதீன் ஷா சொல்லும் இடத்தில் விடுகிறார். நம் அனைவரினதும் எதிர்ப்பார்ப்புக்கு மாறாக அங்கே அவர்கள் கொல்லப்படுகின்றனர்.

இதற்கிடையில் கம்பியூட்டர் தொழிநுட்பம் அறிந்த ஒரு டீன் ஏஜ் இளைஞன், நஸ்ருதீன் ஷாவின் கேசை பதிவு செய்த போலிஸ் அதிகாரி, ஷாவுக்கு வெடி மருந்து தந்தவர்களின் உதவியோடு போலிஸ் இவரை நெருங்குகிறது.
நஸ்ருதீன் ஷா யார்? அவரது நோக்கம் என்ன? அவரை போலிஸ் என்ன செய்தது? போன்ற பல கேள்விகளுக்கு உருக்கமும் விறு விறுப்புமாய் அடுத்தடுத்த காட்சிகளில் பதில் சொல்லியிருக்கும் படம்தான் A Wednesday

அட இதெல்லாம் ஒரு நடிப்பா? நவீன தொழிநுட்பங்களும் அதீத புத்திசாலித் தனங்களும் கொண்ட ஒருவனுக்கு அவனது புகழ் கூறும் ஒரு intro பாடல் கூட இல்லை. சரி பாடல்தான் இல்லை அட்லீஸ்ட் அவர் தீவிரவாதிகளுக்கும் போலீசுக்கும் சவால் இடும் காட்சிகளில் கமராவைப் பார்த்து கைகளை ஆட்டி விரல் சொடுக்கி பேச வேண்டாம். எதுவுமில்லாமல் ஏதோ நம்ம பக்கத்து வீட்டு பெருசு போல புலம்புகிறார். தன்னை முபையையே காக்க வந்த ஆபத்பாந்தவனாக சொல்லக் கூடாதா தன்னை common stupid man என்று சொல்கிறார். அனுபம் கேரும் அப்படியே


கமலாவது இக்குறையை தீர்த்து வைப்பாரா பார்ப்போம். எது எப்படியோ நிச்சயமாய் வயதான பாத்திரத்தில் கமல் அவ்வப்போது தன் உச்சந்த்தலையை சொரிவார் என நினைக்கிறேன்.( கடல் மீன்கள், நாயகன் என எத்தனை கமல் படம் பார்த்திருப்போம்.)
கமல் தமிழின் தலை சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லையென்ற போதும் அவரது அவ்வைச்சன்முகி, வசூல் ராஜா போன்றவற்றில் நடிப்பை ராபின் வில்லியம்ஸ் உடனோ சஞ்சய் தத்துடனோ ஒப்பிட்டிப் பார்த்தால் சொதப்பலாகவே தெரிந்தது. இதிலாவது நஸ்ருதீன் ஷாவை மிஞ்ச வாழ்த்துக்கள்.

திங்கள், 23 மார்ச், 2009

அவசரமாய் தேவை ஒரு பெரியார்


எனது சக ஆசிரியர் ஒருவர், அத்தனை கல கல பேர்வழி இல்லையென்றாலும் கடு கடுவென இருக்கும் ரகமும் இல்லை. ஆனால் அன்றொரு நாள் அவரைப் பார்த்த போது இஞ்சி தின்ற ஏதோ போல் வழமையை விடவும் அகோரமாய் இருந்தார்.

சரி வீட்டில் ஏதோ உள்நாட்டு கலவரம் போலும் என எண்ணியவாறே அவரைப் பார்த்து சிரித்து வைத்தேன். பதிலுக்கு சிரிக்க மறுத்தவர் ஆவேசமாக
" பாருங்க sir அநியாயத்த" என்றார்.

இலங்கையில் அநியாயத்துக்கா பஞ்சம் அதில் ஏதோதான் இவர் மனதை வாட்டியிருக்கக் கூடும் என்ற எண்ணத்தோடு
" என்ன sir ஏதும் பிரச்சினையா? " என்றேன்.

" பாருங்க sir இந்த லயத்தான்களே இப்படித்தான் காசு கொடுத்தா பொண்டாட்டிய கூட கூட்டிக் கொடுப்பாங்க போல"
ஆஹா ஆள் ஆவேசப்படுவதைப் பார்த்தால் மேட்டர் பெருசா இருக்கும் போல என எண்ணியவாறே

"என்ன sir" என்றேன்.

" கொஞ்ச நாளா ஏதோ ஒரு கிருத்துவ அமைப்பால இங்க வந்து போதனை எல்லாம் பண்ணுனாங்க இல்ல இப்ப கொத்தா ஒரு இருபது குடும்பம் அப்படியே மதம் மாறிட்டாங்க"
என தலையில் கை வைத்தார்.

அட இதுக்கா இந்த ஆள் ஏதோ தன் வீட்டில் எழவு விழுந்தது போல் பதறினார் என நினைத்த போது சிரிப்புத்தான் வந்தது. உதட்டோரம் அரும்பிய புன்னகையோடு
" இவ்வளவுதானா இதுக்கு போய் நீங்க ஏன் இவ்வளவு கவலைப் படுறீங்க நானும் ஏதோ உங்களோடுதான் ஏதோ பிரச்சினைன்னு நினைத்தேன்"

"என்ன sir கொஞ்சமும் பொறுப்பில்லாம பேசுறீங்க நீங்க எல்லாம் ஒரு ஹிந்துவா எங்கட கலாச்சாரம் என்ன ஆகுறது"

பாவம் ஆரியர் எம்முள் புகுத்திய இந்த மதம்தான் திராவிடராகிய நம் கலாசாரத்தின் அடிப்படை என்ற கருத்தில் அவர் இருந்தார். எங்கே தமிழர்கள் எல்லாம் மதம் மாறி கோடு சூட்டும் நுனி நாக்கு ஆங்கிலமுமாக தேவாலயங்களுக்கு செல்லத் தொடங்கி விடுவரோ என்ற ரீதியில் அதீதமாய் கற்பனை செய்து பயந்தார்.

திடீரென கசிப்பு அடித்தவரை போல் தகாத வார்த்தைகளால் தோட்ட மக்களையும் ஏனைய மதங்களையும் தூஷிக்க தொடங்கினார்.
எப்போதும் தனது மதம் தனக்கு நல்ல விழுமியங்களை கற்றுத் தந்திருக்கிறது என்று பிதற்றும் அவருக்கு சகிப்புத்தன்மை என்று ஒன்று இருப்பது தெரியாமல் போனது எனக்கு ஆச்சரியத்தை தந்தது.

மதம் இத்தனை sensitiveவான விடயமா? அவரது ஆவேசம் சிவசேனா போன்ற கட்சியினரையும் தோற்கடிக்கும் விதத்தில் இருந்தது. ஒரு கணம் பால் தாக்கரே உடன் பேசுவதாகவே உணர்ந்தேன். இவர் என்ன வேதங்களையும் உபநிஷதங்களையும் புராணங்களையும் கரைத்துக் குடித்து அனுபவ வாயிலாக கடவுளை உணர்ந்து அக்கடவுளின் அருட்கடாட்சம் உலக ஜீவராசிகள் அனைத்துக்கும் பாரபட்சமின்றி வழங்கப்படும் அற்புதத்தை உணர்ந்தவர் போல் பேசுகிறாரே என நினைத்த போது கோபம்தான் வந்தது.

" ஏன் அவர்கள் செய்ததில் என்ன தப்பு தனக்கு நிம்மதியை தரவல்லதை கடவுள் என்கிறார்கள். தான் சார்ந்த மதத்தில் அது கிடைக்காத போது மதம் மாறுகிறார்கள். மதங்களால் அழிவுகளேயல்லாமல் ஏதேனும் உபயோகமாய் நடந்ததாய் கேள்விப்பட்டிருப்போமா. அப்படியிருக்க இதை ஏன் இத்தனை பெரிது படுத்த வேண்டும். அதுவும் ஒரு ஆசிரியர் இந்த மாதிரி super natural powerஐ நம்பி சக மனிதர்களை தூஷிப்பது சரியா?"
என்றேன்.

" science teachersஏ இப்படித்தான் சாமியை கிண்டல் பண்றதுல ஒரு பெருமை போங்க sir உங்க விஞ்ஞானத்தால எல்லாம் கடவுளை உணர முடியாது"

" சரி அப்படியே வைத்துக் கொள்வோம் எம்மால் உணர முடியாத கடவுள் பெயரால் சதுர்வர்ணங்கள் ஏற்படுத்தப் பட்டு அதன் பெயரால் இழிநிலைக்கு உள்ளாக்கப்பட்டோர் அதை மீறத் துணிவதில் என்ன குறையைக் கண்டீர்கள். கஷ்ட படுபவனை கைத் தூக்கி விடாது விதி, சஞ்சிதம், ப்ராப்தம், ஆகாமியம் என அவன் துயரத்தை ஞாயப் படுத்துவீர்கள். எங்கேயடா கடவுள் என்றால் இது கலியுகம் வரமாட்டார் அது இது என மழுப்புவீர்கள். ஏதோ ஒரு காட்டுமிராண்டி காலத்தில் சொல்லப்பட்ட படு பிற்போக்கான சாத்திரங்கள் எல்லாவற்றையும் ஆதி அந்தம் இல்லா ஆண்டவன் அருளியது என தலையில் வைத்து கொண்டாடுவீர்கள். அர்த்தமே தெரியாத மொழியில் யாரோ அர்ச்சிக்க தட்சனை மட்டும் போட்டுவிட்டு வருவீர்கள்.
குறைந்த பட்சம் அங்கே ஞான ஸ்நானம் செய்வித்து தன் மதத்திலாவது சேர்த்துக் கொள்கிறான். நீ சூத்திரன் ஒரு பிறப்பாளன் தீட்சை எல்லாம் பெற முடியாது என சொல்லும் மதத்தில் என்னா மயிருக்கு sir இருக்கணும்."

இத்தனை ஆவேசத்தை அவர் என்னிடம் எதிர்பார்க்க வில்லை. என்னை மிக வெறுப்பாய் பார்த்தவர் சொன்னார்.

" நம்ம அம்மா ஒரு ****** ஆகவே இருந்தாலும் அம்மா அம்மாதானே"
இதனை கேவலமாய் ஒரு உவமை சொல்லவும் அவருக்கு மதம்தான் கற்றுக் கொடுத்திருக்கிறது போல. இதற்கு மேல் அவருக்கு விளக்கம் சொல்ல என் மனம் இடம் கொடுக்கவில்லை. எனக்கென்றால் புரியவில்லை இதற்கெல்லாம் ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்று. என் மனம் சொன்னது இங்கேயும் தேவை உடனடியாய் ஒரு பெரியார்

புதன், 18 மார்ச், 2009

" என்னா கொடுமை மென்டிஸ் இதெல்லாம்"


cricket பற்றி பேசும் காலமா இது என பலரும் முகம் சுளிக்கக் கூடும். பாரதியே ODI விளையாடு பாப்பா என்று பாடி இருக்கிறாரே என மனதை தேற்றிக் கொண்டேன்.
ஒருநாள் போட்டி முடிவுகள்தான் சுவாரசியமாயிருக்கும் என்பது தெரிந்தது ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலும் ஆச்சரியத்தை தரும் என நேற்றுதான் தெரிந்தது.

அட ஒருநாள் பந்து வீச்சாளர் தரவரிசையில் நம்ம நுவன் குலசேகர முதலிடம். M & M magic தான் இலங்கை அணியின் பலம் எனத் தெரியும். அட இதற்கிடையில் இவர் எப்படி என்று தேடிய போதுதான் தெரிந்தது. ஐயாவும் லேசுப்பட்ட ஆளில்லை என்பது

தரவரிசைக்குட் படுத்திய குறித்த காலப்பகுதியில் இவர் அதாவது இவர் மீள அணிக்குத்திரும்பிய 2008 ஏப்ரல் தொடக்கம் இன்று வரை 29 போட்டிகளில் 47 விக்கெட்டுகளை 20.97 என்ற சராசரியுடனும் கிட்டத்தட்ட ஓவருக்கு 4.45 என்ற வகையில் சிக்கனமாகவும் ( economy rateஐ வேறெப்படி தமிழ் படுத்தலாம்) பந்து வீசி கொய்திருக்கிறார்.

இதைப் பற்றி இவரிடம் கேட்டால்
இது தனக்கு மிக மகிழ்ச்சி அளிப்பதாகவும் தான் சென்ற வருடத்தில் அதிக சிரத்தை எடுத்து பந்து வீசியதாகவும் இருப்பினும் வெறும் இருபத்தாறே வயதான தான் கிரிக்கெட்டில் இன்னமும் கற்றுக் கொண்டிருப்பதாகவும் நல்லதொரு பந்துவீச்ச்சாளராக வர உறுதிப் பூண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
(அட என்னவொரு அவையடக்கம்)

இது பரவாயில்லை 8ஆம் இழக்க துடுப்பாட்ட வீரராக ஆடி வரும் இவர் கடந்த 12 மாதங்களாக தான் பேணி வந்துள்ள 20.36 என்ற துடுப்பாட்ட சராசரியை 25 ஆக மாற்றுவதன் மூலம் அணிக்கு ஒரு ஸ்திர தன்மையை கொடுப்பது தனது நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டுக்கு துடுப்பாட்டத்தில் பல புதிய நுணுக்கங்களை கற்றுத்தந்த ( பந்து எங்கே வருகிறது எனப் பார்க்காமலே ஆறு ஓட்டங்கள் பெறுவது எப்படி போன்ற) முரளி இதை கேள்விப்பட்டு மென்டிசிடம் இப்படி சொன்னாராம்.
" என்னா கொடுமை மென்டிஸ் இதெல்லாம்"

செவ்வாய், 17 மார்ச், 2009

தமிழகச் சொந்தங்களுக்கு மலையகத்திலிருந்து ஓர் விண்ணப்பம்



பெருமையாக இருக்கிறது
நாங்கள் செய்ய வேண்டியதை எங்களால் செய்ய முடியாததை நீங்கள் செய்யும் போது
வெட்கத்தோடு ஒத்துக் கொள்கிறோம் நாங்கள் கோழைகள்

நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் ஆப்பு என்று சர்வ நிச்சயமாய் தெரிந்தும் அவசரக் காலச் சட்டத்துக்கு ஆதரவாய் கையுயர்த்தியவர்களை தலைவர்களை கொண்டவர்களில் நானும் ஒருவன்.

95 சதவீதம் எழுத்தறிவுள்ள தேசத்தில் தற்குறிகள் அதிகம் எனக் கூறப்படும் பிரிவினரில் நானும் ஒருவன்.

எமக்கான உரிமைகள் என்னவென்றே அறியாமல் அற்ப சலுகைகளில் திருப்தியுறும் கையாலகாதவர்களில் நானும் ஒருவன்.

ஏதோ இப்போதுதான் எம்மை இத்தனைக் காலமாய் ஏய்த்த தலைமைகளை நிராகரிக்கும் துணிவே தட்டு தடுமாறி எட்டிப் பார்த்திருக்கிறது

தமிழகத்தில் இது தேர்தல் காலம் கூட்டணி அமைக்கும் முயற்சியில் கட்சிகள் மும்முரமாய் உள்ளன. கூட்டணிகள் அமைந்த பின் வாக்குறுதிகளும் இலவசங்களும் அள்ளி வீசப்படலாம்.

ஒன்று செய்வீர்களா
வெளியில் மட்டும் தீரமாய் திராவிடம் பேசி தமிழன் கொல்லப்படும் போது மௌனமாவோரையும் அவரோடு கூட்டுச் சேரும் மதச் சார்பின்மையும் தேசியமும் பேசும் பார்ப்பனிய கட்சிகளையும் நிராகரித்து தேசம் மாறினாலும் தமிழுணர்வால் நாம் ஒன்றுப் பட்டவர்கள் என்பதை உலகுக்கு காட்டுவீர்களா?


என்ன செய்வது வலிமை குறைந்த சின்னத் தம்பிகள் மூத்த சகோதரனிடம்தானே உதவிக்கு இறைஞ்ச முடியும்.

பிக்குவின் ஆசை

எவனொருவன் ஆசையை அழிக்கிறானோ அவன் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபடுகிறான்

என்று புத்தர் தம்மா பதத்தில் சொல்கிறார் புத்தர் கூறிய படி ஆசையை துறந்த இந்த பிக்குவால் செல்போன் மீதுள்ள பிடிப்பை மட்டும் விட முடியவில்லைப் போலும்

வியாழன், 12 மார்ச், 2009

ரஜினி


ரஜினி
என்னதான் பதிவர்கள் வருத்தெடுத்தாலும் தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் இவர்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் தேவையில்லை. சினிமா பற்றிய தீவிரமான பிரக்ஞை இல்லாத காலத்தில் திரைப்படங்கள் எனக்கு அறிமுகமான ஆரம்ப கால கட்டத்தில் அப்பாவின் மடியிலமர்ந்து நான் திரைக்கூடங்களில் பார்த்த பல படங்களில் இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கும் பல படங்கள் இவர் நடித்தது. என் தந்தை காலமான பின் தியேட்டர் சென்று படம் பார்க்கும் வழக்கம் குறைந்து போனாலும் நான் வளர்ந்து நண்பர்களோடு மீண்டும் திரையரங்குகளுக்கு செல்லும் காலம் வந்த போது(கிட்ட தட்ட பத்து வருடங்களுக்கு பின்) பலரின் ஏகோபித்த தெரிவாக அதே பொலிவோடு அவரே திரையை நிறைத்திருந்தார்.

எல்லோரையும் போல ஆரம்ப கலக் கட்டங்களில் அவரது ஸ்டைல் நடிப்புக்கும் சண்டை காட்சிகளுக்கும் மட்டுமே நானும் ரசிகனாயிருந்தேன். இவரது படம் பார்த்து நண்பர்களுக்கு கதை சொல்வது அலாதியான சந்தோஷத்தை தருவதாக இருந்தது. சற்றே வளர்ந்து நடிகர்களின் உடல் மொழியையும் வசன வெளிப்படுத்துகையையும் ஊன்றி கவனிக்க தொடங்கிய காலத்திலும் ரஜினி எனக்கு ஒரு நல்ல நடிகராகவே காட்சி தந்தார்.

முக்கியமாக முள்ளும் மலரும் படத்தின் உச்சக் காட்சியில் அனைவரும் இவரை நிராகரித்து அவரது தங்கையின் திருமணத்தை நடத்த முயலும் போது தனித்து ஒதுங்கியிருப்பதும் தங்கையோ அனைவரையும் புறந்த்தள்ளி விட்டு இவரை நாடி வரும் போது கம்பீரமாக தங்கையை இவரே அவளது காதலனோடு சேர்த்து வைக்கும் காட்சியில் இவரது நடிப்பு

தில்லு முல்லு திரைப்படத்தின் அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரனை அத்தனை எளிதாய் மறக்க முடியுமா? ஒரு காட்சியில் தன் தங்கையிடம் சொல்வார் " அம்மா இனிமே நா காதலிக்கவே மாட்டேம்மா அப்படியே காதலித்தாலும் கல்யாணமாகாத பொண்ணை காதலிக்கவே மாடேம்மா" என்பார். படத்தில் இவ்வசனம் வரும் கட்டத்தில் அவர் இதை கூறும் விதம் எளிதில் சிரிப்பை ஏற்படுத்துவதாக அமையும்.


நம்பியார், P.S. வீரப்பா என் ரசிகர்கள் வில்லனைக் கண்டு பயந்திருந்த சந்தர்ப்பத்தில் மிக ஸ்டைலிஷாக அவர்கள் திரைப்படத்தில் குத்தல் பேச்சுக்களால் சுஜாதாவையும் மூன்று முடிச்சில் ஸ்ரீதேவியையும் மிரட்டி ரசிகர் மனங்களை கொள்ளைக் கொண்ட முதல் வில்லன் இவராய்தானிருக்கும்.

suppose கமலும் இவரும் எழுபதுகளின் இறுதியில் தமிழ் திரையுலகம் வராதிருந்தால் அப்படியே சிவாஜியை அடியொட்டி நடித்த தமிழ் நடிகர்கள் சினிமாவை எங்கு கொண்டு சென்றிருப்பர். நினைக்கவே பயமாயில்லை. அது காலத்தின் தேவை என்பவர்கள் அதே காலக் கட்டத்தில் வந்த சிங்களப் படங்களையோ திலிப் குமாரின் ஹிந்திப் படங்களையோ பாருங்கள் இப்படியெல்லாம் உதடு துடிக்க பாடல்களுக்கு வாயசைத்து, வாய் பொத்தி ஆச்சர்யப்பட்டு, தூண்களில் சாய்ந்து கதறி, கன்னச் சதைகளைஎல்லாம் ஆட்டி இப்படி தம்மையும் நம்மையும் ஒரு சேர வருத்தியிருக்க மாட்டார்கள். எனக்கு தெரிந்து ரஜினி படையப்பாவில் இப்படி நடித்து பார்த்திருக்கிறேன். நடிப்புலக மேதையை மிஞ்சும் ஆவேசம் போலும்.
சிவகுமார் கூட ரஜினி,கமலின் வருகையின் பின்தான் அக்னி சாட்சி, சிந்து பைரவி போன்ற படங்களில் நடித்தார். மற்றவர்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

ரஜினியைப் பற்றிய பிரதான குற்றச்சாட்டு மசாலாப் படங்களில் மட்டும் நடிப்பது. அவரது படங்கள் யதார்த்த பூர்வமற்றவையாக இருப்பினும் அவரது நடிப்பு அதில் சோடை போனதில்லை என்பது என் அபிப்பிராயம்

நடிகர் என்பது தவிர்ந்து அவரது ஏனைய முகங்களும் ரசனைக்குரியவை. அவரது ஆன்மீகத் தேடல் பலரின் கேலிக்கு உள்ளானாலும் பாபா படத்தின் படு மசாலாவான அந்த அரசியல் காட்சிகள் தவிர்ந்து ஏனைய காட்சிகளும் திரைக்கதையோட்டமும் ராமநாராயணன் வகையறாக்களின் போலல்லாது ஒரு தத்துவ விசாரணம் போல் அமைந்திருந்தமை அவரது ஆன்மீக அறிவை பறை சாற்றுகிறது எனலாம். என் கணிப்பு சரியாயிருந்தால் படத்தையும் magical realism என்ற வகைக்குள் உள்ளடக்கலாம் என நினைக்கிறேன்.



சரி இதுவெல்லாம் நான் சொல்ல வந்த விஷயத்துக்கான முன்னோட்டம் மட்டுமே

விஷயம் என்னவென்றால் இத்தனை தூரம் ரஜினி ரசிகரை இருந்தாலும் அவர் அரசியலுக்கு வருவதை மட்டும் மனம் ஒப்புக் கொள்ளாமல் இருந்தது. இதற்கு பிரதான காரணம் தமிழின எதிர்ப்பாளரான சோ அவரோடு ஒட்டியிருந்ததுதான். எங்கே அவர் அரசியலுக்கு வந்தால் ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழ் தேசியத்திற்கு எதிராய் குரல் எழுப்புவாரோ என்ற பயம் இருந்தது.
ஆனால் நடிகர்கள் உண்ணாவிரதம் இருந்த போது ஆவேசமாய் மஹிந்தவை நோக்கி குரல் எழுப்பியவர் பின்பு தன் பிறந்த நாள் கொண்டாட்டங்களையும் நிறுத்த சொல்லி இலங்கை தமிழர் மத்தியில் தமக்கிருக்கும் இடத்தை மேலும் வலுவாக்கிக் கொண்டார். இத்தனையும் போதாதென்று நேற்று வீரகேசரியின் இணையத்தளத்தில் பார்த்த செய்தி ஒன்று மனதை பேருவகைக் கொள்ள செய்தது.

அச் செய்தி

தமிழர்களுக்கு ஆதரவாக கர்நாடக ரஜினி ரசிகர்கள் அமைதிப் போராட்டம் நடத்தினர். இலங்கைப் பிரச்சினை முன்னெப்போதும் இல்லாத உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தங்களையும் அதில் ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். கர்நாடக மாநில ரஜினி சேவா சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் மகாத்மா காந்தி சாலையில் உள்ள காந்தி சிலை அருகே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து அமைதிப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ரஜினி ரசிகர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி(அட !!!!) உலகத் தமிழ் கழகம், அகில இந்திய மனித உரிமைக் கழகம், திராவிடர் கழகம், கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றவர்கள்.

தலைவர் படத்தை பார்ப்பது போல விசிலடித்துக் கொண்டேதான் செய்தியை ரசித்தேன்.
கலக்குங்க தலைவா











செவ்வாய், 10 மார்ச், 2009

எங்கள் ஊர் திருவிழா

எங்கள் ஊரில் தேர்த் திருவிழா மிகப் பிரசித்தம்.
திருவிழா ஆரம்பமானால் அன்றாடம் மகேஸ்வர பூஜை முடிய நடைபெறும் அன்னதானத்தின் போது நம்மவர்கள் டார்வினின் survival of fittest ஐப் பரீட்சித்துப் பார்ப்பது தனிச்சிறப்பு.

ஊரில் திருவிழா என்றால் ஒரு மாதம் பிள்ளைகள் பள்ளிப் பக்கமே செல்ல மாட்டார்கள்.( அட எதுக்கு போகணும் அதான் சாமி பார்த்துக்குமில்லசரணாகதி தத்துவமாம்)

இதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல் நம் மாகாண தமிழ் கல்வி அமைச்சர் தான் பதவியேற்றவுடன் செய்த பெரிய சாதனையாக நேற்று பாடசாலைகளுக்கு விடுமுறை வாங்கி கொடுத்ததை பற்றி நாளேடுகளில் அறிக்கை விட்டிருந்தார். (இன்னும் என்னெல்லாம் சாதிப்பாரோ)

இலங்கையில் வேறெங்கும் சென்று மாத்தளைக்காரர் என்றால் கோயில் பற்றித்தான் விசாரிப்பார்.
ஒரு மாதத்திற்கு முன் ஆரம்பித்த திருவிழாவின் உச்சக்கட்டமான தேர் பவனி நேற்று ஆரம்பித்து நான் இதை பதிவிடும் இக்கணம் வரை விமர்சையாக நடைபெற்று வருகிறது.

அட இதே ஊரில் இருந்து போகல்லேன்னா எப்படி என்று நானும் நேற்றிரவு கொஞ்ச நேரம் போனேன் எதையாவது பார்த்து எழுதி பதிவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்ற நப்பாசைதான்.
பெருசா எதுவும் தேறவில்லை
சரி பார்த்து ரசிக்க சில படங்கள்

கடைசியாக ஒன்று காலம் காலமாகவே நம்ம ஊர் ஆன்மிகம்பால் ஆழ்ந்த பற்றுக் கொண்டது அட ஆமாங்க ஒரு காலத்தில் தமிழ்நாட்டையே கலக்கிய சுவாமி பிரேமானந்தா நம்மூர் காரர்தான் இங்கே ஆசிரமம் வைத்திருந்தவர் சிங்களவன் புண்ணியத்தில் 83 வன்செயலோடு தமிழகம் ஓடி விட்டார்










ஞாயிறு, 8 மார்ச், 2009

பெண்ணியமும் பெரியாரும்


இன்று மார்ச் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம்
உண்மையில் பெரும்பான்மை பெண்கள் இன்றும் பெண்ணியம் என்ற பதத்தினை தமக்கு மிகவும் அந்நியமானதாகவே கருதுகின்றனர். மகளிர் தினங்களில் மாத்திரமே ஊடகங்களில் அதுவும் பெரும்பான்மையாக ஆண்களாலேயே இதுதான் பெண்ணியம் என்ற ரீதியில் வழங்கப்படும் விடயங்களை மேலோட்டமாக அறிவதோடு சரி மீள அடுக்களையிலேயே தமது வாழ்வினை தொலைத்து விடுகிறார்கள்.

காலத்திற்கு காலம் பெண்ணியம் தொடர்பில் பல்வேறு விளக்கங்களை நாம் அறிந்திருக்கிறோம். பெண்ணியச் சிந்தனையானது முதலாளியத்திற்கு எதிரான வர்க்கப் போர் தீவீரம் பெற்ற காலங்களில் முதலாளியத்தில் காணப்பட்ட பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்த மார்க்சிய சிந்தனையாளர்களாலேயே முதன்முதலில் முன்வைக்கப் பட்டது எனலாம்.

பெண்ணியம் தொடர்பில் மேன்னாட்டு அறிஞர்கள் கூறிய சில கூற்றுக்களை எடுத்து பார்க்கும் போது கார்டன் என்ற அறிஞர் " பெண்ணின் தாழ்நிலையை ஆராய்ந்து, அதை மாற்ற எடுக்கும் வழிமுறைகள் பெண்ணியம் எனப்படும்." என்றார். ஜெயின் என்பவர் " பெண்கள் தன்மையில் ஆண்களில் இருந்து வேறுபடினும் அவர்களும் தமக்குள் இணைந்து தாம் ஆணுக்கு நிகரானவர்கள் என்பதை உறுதிப்படுத்தலே பெண்ணியம்" என்பார். புட்சர் என்பவரோ " பாலினப் பாகுபாட்டால் பெண்களை எதிர்த்து இடம்பெறும் கொடுமைகளை எதிர்த்து மேற்கொள்ளப்படும் இயக்கம்" என்றார். பார்பரா ஸ்மித் மிக எளிமையாக "எல்லாத் தரப்பு பெண்களுக்கும் உரிமை பெற்றுத் தருவது பெண்ணியம்" என்றார்.

மேன்னாட்டு அறிஞர் கூற்று எவ்வாறு அமையினும் எம் பெண்களுக்கு பொருத்தமான எம் பெண்களுக்கு தேவையான சீரிய கருத்துக்களை தெளிவாக எடுத்துரைத்தவர் தந்தை பெரியார் என்று கூறினால் அது மிகையாகாது.
தமிழரிடையே பெண்ணடிமைத்தனம் பரவக் காரணமே இந்த கற்பு என்கிற கருமாந்திரம்தான். ஆண் மிகத் தந்திரமாக இயற்கையாக உடற்கூறியல் ரீதியில் தனக்கு இருந்த பலத்தினால் பெண்ணை அடிமை படுத்தியதோடு நில்லாமல் கற்பு என்றும் உயிரைக் கொடுத்தேனும் அதனைக் காக்கவேண்டும் என்றும் ஏற்பாடுகள் செய்து பெண் எப்போதும் தன்னை சார்ந்து தனக்கு அடிமையாய் இருக்கும்படியான நிலையை ஏற்படுத்தினான்.

இதை கடுமையாய் சாடும் பெரியார் "ஆண்-பெண் இருபாலாரும் சரி சமமமான சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்ற நிலைமை ஏற்பட வேண்டுமென்றால் கற்பு என்பதன் அடிப்படை இலட்சியமும் கொள்கையும் மாற்றப்பட்டு ஆண்-பெண் அனைவருக்கும் ஒரே நீதி ஏற்பட வேண்டும்" என்றார்.

இத்துடன் நில்லாது பெண்ணின் இந்நிலையை ஞாயப்படுத்தும் புராணங்களையும் இலக்கியங்களையும் எள்ளலுடன் விமர்சித்தார்.
மேல்சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்துவதைவிட, ஆண்டான் தனது அடிமையை நடத்துவதைவிட மோசமாக ஆண்கள் பெண்களை நடத்துவதாக கூறி மனம் வெதும்பிய அவர் இதை உணராது ஆணுக்கு சேவகம் செய்யும் அடிமை வாழ்விலும் அலங்காரங்களிலும மாத்திரம் திருப்தி அடையும் பெண்களை பார்த்து மிகுந்த வருத்தமுற்றார்.

பால்ய விவாகம், தேவதாசி முறைமை, என்பன ஒழிய வேண்டுமெனவும் விதவை மணம், கலப்பு மணம், என்பன ஊக்குவிக்கப் பட வேண்டுமென்பதிலும் தீவிரமாய் அவருக்கு ஆர்வமிருந்தது.

அவர் இறந்து இத்தனை வருடங்களின் பின் அவரது அயராத முயற்சியின் பலன் இன்றைய பெண்களுக்கு கிட்டியுல்லாத எனப் பார்த்தால் ம்ஹ்ம் ஒரு சில விடயங்கள் தவிர்ந்து ஏமாற்றமே மிச்சமுள்ளது. 21 ஆம் நூற்றாண்டான இன்றும் பெண்கள் தம்மடிமைத் தனத்திற்கு காரணமான கொள்கைகளை வகுத்த பார்ப்பனனின் சாமிகளை பயபக்தியோடு பட்டுச் சேலை சர சரக்க சென்று கும்பிடுவதிலும் திருமணம் செய்து குழந்தை குட்டிகள் பெற்று கணவனை குஷிப் படுத்துவதிலுமே மிகுந்த திருப்தி கொள்கின்றனர்.
சினிமாக்களிலும் விளம்பரங்களிலும் ஆண்களுக்கு போகமூட்ட என உருவான அற்ப பிண்டங்களாகவே பெண்கள் சித்தரிக்கப் படுகின்றனர்.

இன்று உண்மையான பெண் விடுதலை உள்ள ஒரே இடம் தமிழீழம். ஆணுக்கு பெண் சரி நிகராய் ஆயுதம் தூக்கி தன் நிலத்தை மீட்டெடுக்க சமர் செய்யும் புனிதக் களம். அதை விடுத்துப் பார்த்தால் நம் தமிழ்ப் பெண்கள் இன்னமும் அடிமைகளாகவே இருக்கிறார்கள்.

அதிலும் மலையகத்தில் பெண்களின் நிலை இன்னும் ஒரு படி கீழே தேயிலைச் செடியினிலே தன் வாழ்வினைத் தொலைத்து விட்டு தன் சுயம் இழந்து வாழ்கிறாள்.

பெண்கள் தினம் கொண்டாடப்படும் இன்றைய நாளிலாவது அவர்தம் நிலை தொடர்பில் எண்ணிப் பார்ப்பது அவசியமாகும்.
பெண்களுக்கான விடுதலை பெண்களாலேயே அடையப்பட வேண்டும். tv searial பார்ப்பதும் நேரத்திற்கு உண்டு உறங்குவதும் தன்னை அலங்கரித்துக் கொள்வதுமே விடுதலை என அவர்கள் கருதினால் அது பெரும் பிழையாகவே முடியும்.
பெண்கள் சமுகத்தில் தங்கள் நிலை, அதற்கான காரணம் என்பவற்றை அறிந்து அதை நிவர்த்திக்க்க முன்வர வேண்டும்.
பெரியார் பாதையில் பெண்கள் உரிமை பெற வாழ்த்துவோம்.
"போற்றித தாயென்று தாளங்கள் கொட்டடா
போற்றித தாயென்று பொற்குழல் ஊதடா"

புதன், 4 மார்ச், 2009

வினையான விளையாட்டு


பாகிஸ்தானில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி கை விடப்பட்டுள்ளது. போட்டிகள் கைவிடப் படுவது இயல்பு எனினும் இப்போட்டி கைவிடப்படுவதற்கான காரணம் சற்று வித்தியாசமானது.

பலஸ்தீன விடுதலை போராளிகளால் Munich ஒலிம்பிக் போட்டியின் போது நடத்தப் பட்ட black september தாக்குதல் உட்பட விளையாட்டு வீரர்கள் மீது நடத்தப் பட்ட பல தாக்குதல்கள் தொடர்பில் நாம் கேள்வியுற்றிருந்தாலும் கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல்கள் நமக்கு புதிய விடயமாகும்.

தங்களுடையது மட்டும்தான் உயிரு மத்ததெல்லாம் ***** என்ற எண்ணமுள்ள ஆஸ்திரேலியா அணி பாதுகாப்பின்மையையும் மும்பை தாக்குதலை காரணம் காட்டி இந்தியாவும் பாக் வர மறுத்த நிலையில் பாக் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுக்கவும் முன்னரே தங்களை அழைத்தால் பரிசீலிக்க தயார் என முந்திரி கொட்டை தனமாய் அறிக்கை விட்டார் முன்னால் Srilankan cricket இன் தலைவர் அர்ஜுன

பின் இது மேலிடத்திற்கு போனாலும் பாகிஸ்தான் மூலம் கிடைக்கும் பல ஆதாயங்கள் காரணமாக இலங்கை அணியை பாகிஸ்தான் அனுப்பியது இலங்கை கிரிக்கெட் நிர்வாகம். இன்று அதற்கான பலன் கிட்டியுள்ளது. பாவம் இலங்கை அரசின் சுயநல அரசியலுக்கு பலியானது என்னவோ அப்பாவி இலங்கை கிரிக்கெட் வீரர்கள்தான்.



















பொதுவில் மேலைதேயத்திற்கும் இஸ்லாமிய உலகுக்கும் இருக்கும் முறுகலின் வெளிப்பாடு என இந்நிகழ்வு கருதப்பட்டாலும் இச்சம்பவம் அதற்கு சற்றேனும் தொடர்புறாத இலங்கை மீது ஏன் பாய்ந்திருக்க வேண்டுமென்பதே எமது கவலையாகும்.

பெரும்பாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு குடை பிடிக்கும் பாகிஸ்தான் அரசை பயமுறுத்தி அடிபணியச் செய்யும் நோக்கோடு தீவிரவாதிகளால் இத்தாக்குதல் இடம் பெற்றிருக்கலாம்.

அல்லது சிலர் சொல்வது போல இது Raw இன் கைங்காரியம் என்றால் வெட்கப்பட வேண்டியது உலகின் மிகப்பெரிய ஜனநாயகமே. இந்தியா என்று இம்மாதிரியான தன்னலம் சார்ந்த செயற்பாடுகளை மாத்திரம் செய்வதை நிறுத்துமோ.

வட கிழக்கு தமிழர்கள் தம்மை தமிழீழத்தவர்கள் எனக் கூறிக் கொள்கின்றனர். தமிழீழத்திற்கும் உரித்தில்லாது தம்மை இலங்கயராயும் உணர முடியாது மீள இந்தியாவிற்கும் செல்ல முடியாது தவிக்கும் மலையகத்தவர் இது நம்ம நாடுடா என சந்தோஷப் படும் தருணங்களில் இலங்கை கிரிக்கெட் போட்டிகளில் வெல்லும் சந்தர்ப்பங்களும் உண்டு. அதற்காக அவர்கள் தமிழுணர்வு அற்றவர்கள் என கூறுவது அபத்தமான வாதமாகும்.

நேற்றைய சம்பவத்தை தமிழ் தேசியத்தின் வெற்றியாகவும் ஏதோ கடவுளின் செயலாகவும் வர்ணித்த சில பதிவுகளை பார்த்த போது உண்மையில் எரிச்சலாக இருந்தது. இச்சம்பவத்திற்காக நாம் வருந்தவில்லையெனில் சகோதரர் கம்பெனிக்கும் எமக்கும் பெரிய வித்தியாசமில்லை.

இத்தனை போர் நடந்தும் கட்டுநாயக வரை வந்து தாக்கி விட்டு போன புலிகள் ஒரு முறையும் இவ்வாறான பேடித் தனமான தாக்குதல்களில் ஈடுப்பட்டதில்லை. இது கொஞ்சமாவது சிந்தனையாளரின் சிந்தையை கிளரியிருக்கும் என்றே நம்புகிறேன். அதை விடுத்தது இதற்கும் புலிகளுக்கும் தொடர்புண்டு என பழைய பல்லவியையே பாடினால் ம்ஹ்ம் இது என்ன சினப்புள்ளத் தனமா என சிரித்து விட்டு இருக்க வேண்டியதுதான்
Related Posts with Thumbnails