புதன், 30 டிசம்பர், 2009

என்னைப் பாதித்த சினிமா Forest Gump


நாம் சினிமாக்களில் எத்தனையோ பாத்திரங்களைப் பார்த்திருப்போம். ஆனால் அவற்றில் சில மட்டும் எம் மனதை தைத்து நீண்ட நாட்களுக்கு பதிந்திருக்கும். இளந் தாடியுடன் Interview சென்று அங்கே உணர்ச்சிவசப்பட்டு "What else do u want? two horns?" என ஆத்திரப்படும் ரங்கன்,
அதீத புத்திசாலித்தனத்தையும், தன்னம்பிக்கையையும்,வர்க்க உணர்வையும் அப்பாவித் தனத்திற்குள் மறைத்துக் கொள்ளும் கோபத்தையும் பக்குவமாய் வெளிப்படுத்தும் நல்லசிவம்,
தங்கை மேல் பாசமும் அதற்கு சற்றும் குறையாத ரோசமும் கொண்ட காளி, பூக்களை கூட ஒன்று குறையாமல் எண்ணி வைத்து விட்டு பின் "அன்பு காட்டுவதில்தான் கஞ்சத் தனமே கூடாது" என வசனம் பேசும் வித்யாசாகர் என தமிழ் சினிமாவில் என்னைப் பாதித்த பாத்திரங்கள் பல. இப்படி என்னை பாதித்து நீண்ட நாட்களுக்கு என் நினைவை விட்டு அகல மறுத்த ஒருவன்தான் Forest gump.



அவன் நம் எல்லோரையும் போல் ஒரு சாமானியன். ஆம் போலியோவால் பாதிக்கப் பட்டக் கால்களைக் கொண்ட IQ குறைந்தவனாக பாடசாலை அதிபரால் அடையாளப்படுத்தப்படும் அவனிடம் "போறேஸ்ட் நீயும் மற்ற சிறுவர்களைப் போல சாதாரணமானவன்" என்றுதான் அவன் தாய் சொல்கிறாள். அப்படி சாதாரணமானவன் எனச் சொல்லப்படுபவனின் அசாதரணமான வாழ்க்கைத் தொகுப்பே Forest gump.


பேருந்து நிறுத்தமொன்றின் பெஞ்சில் அமர்ந்திருக்கும் Forest gump அங்கிருக்கும் பெண்மணியிடம் தன் கதையை பால்யக்காலத்தில் இருந்து சொல்லத் துவங்குகிறான். அவன் கதையை கேட்கும் நபர்கள் மாறிக் கொண்டேயிருக்கின்றனர். சிலர் அசுவாரசியமாய்,அல்லது நம்பிக்கையின்றி கேட்டப் போதிலும் தனது பால்யம்,சிறு வயதிலிருந்து நேசிக்கும் காதலி ஜெனி,வியட்நாமில் ராணுவத்தில் தன்னோடு இணைந்திருந்த நீக்ரோ நண்பன், தன் வாழ்வில் தான் முகங் கொடுத்த வெற்றித் தோல்விகள், என அனைத்தையும் மீள அசைபோட்டு பார்க்கும் மகிழ்ச்சியில் கதை தொடர்கிறது.


புறக்கணிப்புகள் நிறைந்த அவன் வாழ்வில் தேவதையாக வந்து சேர்பவள் ஜெனி. அவன் கால்கள் குணமானதில் கூட அவள் பங்கிருப்பதாய் கருதுகிறான். அவள் மேல் அளவு கடந்த பிரியத்தை வளர்த்துக் கொள்கிறான். தன் தந்தையால் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் ஜெனி அங்கிருந்து விடுப்பட்டு வெளியேற நினைக்கிறாள்.


காலங்கள் உருண்டோட தன் அபார ஓட்டத் திறமையால் உள்ளூர் ரக்பி அணியில் இடம் பிடிக்கும் Forest gump பின் இராணுவத்தில் சேர்ந்து வியட்நாமிய போரில் பங்கேற்கிறான். அங்கே ராணுவத்தில் தன்னோடு பணியாற்றும் பபா என்ற கறுப்பின வீரனின் கனவான மீன்பிடி தொழிலில் தன்னையும் இணைத்துக் கொள்வதாய் சொல்கிறான்.
எதிர்பாராமல்
போரில் பபா இறக்கும் அதேவேளை இரண்டு கால்களை இழந்ததால் சாக விரும்பும் தன் தலைமை அதிகாரி ஒருவர் உட்பட மிகுதி அனைவரையும் காப்பாற்றும் Forest விருதளித்து கௌரவிக்கப் படுகிறான்.


பின்னாளில் மிகச் சிறந்த பிங் பாங் வீரனாக மாறும் Forest அதன் மூலம் பெற்ற பணத்தொகையைக் கொண்டு பபாவின் கனவான மீன்பிடி தொழிலில் இறங்குகிறான். ஆரம்பத்தில் தன்னைக் காப்பாற்றியதற்காய் வெறுக்கும் அவனது தலைமை அதிகாரி டேன் பின் அவனுடன் இணைந்து மீன்பிடித்துறையில் கிடைக்கும் பணத்தை Apple Computer இல் முதலிடுகிறான். இதன் மூலம் கிடைக்கும் பெரும் பணத்தில் அரைவாசியை பபாவின் குடும்பத்திற்கு வழங்கி அவர்களை திக்கு முக்காடச் செய்கிறான் Forest.


இதற்கிடையில் தன் தந்தையை விட்டு தூரமாய் போகும் ஜெனி கட்டுப் பாடற்ற ஹிப்பிக் கலாச்சாரத்தில் மூழ்கி இலக்கில்லாமல் வாழ்கிறாள். விபச்சாரம் அவளது தொழிலாகிறது. நீண்ட காலத்திற்கு பின் இருவரும் சந்திக்கின்றனர். அவளிடம் தன் காதலை சொல்லும் Forest இடம் மறுக்கும் ஜெனி அன்றிரவு ஆறுதல் பரிசாக செக்ஸ் மட்டும் வைத்துக் கொள்கிறாள். காலையில் அவனிடம் சொல்லாமலே கிளம்பிப் போகிறாள். அதன் பின் காரணமில்லாமலேயே நாட்டைச் சுற்றி ஓடும் Forest அதன் மூலம் ஒரு கவனிப்பை பெறுகிறான். அவனும் ஜெனியும் மீள வாழ்வில் சந்தித்தார்களா? இருவரும் இணைந்தார்களா? என்பதை மனதைப் பிசையும் வண்ணம் சொன்னப் படம்தான் Forest gump.


ம்ம் நான் எழுத ரொம்ப சிரமப்பட்ட பதிவு இதுதான். ஏதோ ஆசையில் ஆரம்பித்து விட்டு வார்த்தைகளை சிக்கனப் படுத்தி எழுத ரொம்ப சிரமப்பட்டேன். யாரேனும் படத்தை பற்றி எழுதி இருக்கிறார்களா எனத் தேடித் பார்த்தேன். ம்ஹ்ம் Hollywood bala, ஜாக்கி சேகர், கேபிள் சங்கர் போன்ற பெருந் தலைகளே தொடல. தேவையான்னு கேட்டுக்கிட்டேன்.
நான் நினைத்ததை விட பதிவு கொஞ்சம் நீண்டு விட்டது. படத்தின் கதையை இங்கே சொல்லியிருக்கிறேன். படத்தில் நான் ரசித்த சில சுவாரசியங்கள் அடுத்த பாகமாக எழுதுகிறேன். சிரமம் பாராமல் வந்து வாசித்து ஆதரவு தாருங்கள் .

திங்கள், 28 டிசம்பர், 2009

சபிக்கப்பட்ட தேவதை


சபிக்கப்பட்டிருப்பேன் போலும்
போன ஜென்மத்தில்
தனிமை தவிர்க்க
காமம் தணிக்க
கனவுகள் வளர்க்க
ஒரு காதல் இல்லாமல் போகக் கடவதென

உன் விழிகளின் ஸ்பரிசத்தால்
சாபவிமோசனம் கிட்டுமென
நம்பிய போதுதான் தெரிந்தது
நீயும் இதயம்
கல்லாய் போக
சபிக்கப்பட்டிருக்கிறாய் என

புதன், 23 டிசம்பர், 2009

பின் வரிசை மாணவனின் புலம்பல்



எனது வகுப்பில் எனக்கு மிகுந்த தொல்லைக் கொடுப்பவர்கள். எழுத்தே அறியாமல் இப்போது யாரையும் Fail பண்ணுவதில்லை என்ற நடைமுறையால் வகுப்பேற்றப்பட்டு இடைநிலை வகுப்புகளில் இருந்துக் கொண்டு மற்றவர்களுக்கும் இடைஞ்சலாய் இருப்பவர்கள். எழுத்தே தெரியாதவனுக்கு என்னவென்று விஞ்ஞானம் படிப்பிப்பது. இருந்த போதிலும் பரிதாபமாய் இருக்கும். மிகுதி உள்ள மாணவர்களை பாதிக்கும் என்பதால் எனக்கு அவர்களுக்கு எழுத்து சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கவும் முடியாது. உண்மையில் ஆரம்ப வகுப்புகளில் Primary Teachers என்ன செய்தார்களோ தெரியாது. அவர்களிடம் கேட்டால் மலையக சூழலை காரணம் காட்டி தப்பித்துக் கொள்கின்றனர். ஆசிரியப் பயிற்சியில் Education psychology எல்லாம் இதற்குத்தானே ஐயா கற்ப்பிக்கிறார்கள். ம்ம் அப்படி ஒரு மாணவனின் ஆதங்கத்தை சில வரிகளில் சொல்ல நினைத்தேன். கொஞ்சம் வாசித்துப் பாருங்களேன்.



பின் வரிசை மாணவன் நான்
கைகலப்புகளின் போது
மட்டும் கையுயர்த்தும்
காகிதக் கப்பல் செய்யவே
பேப்பர் எடுக்கும்
மேசையில் கிறுக்க மட்டும்
பேனா தொடும்

உங்கள் கவனம் பெறத்தான்
எத்தனை போராட்டங்கள்
ஆனாலும்
உங்களுக்கு பிடித்ததென்னவோ
எனக்கு சற்றும் பிடிக்காத
அந்த முன்வரிசை
அதிமேதாவிகளைத்தான்

மூக்கொழுகும்
என்னைப் பார்த்து
அசூயையுடன் ஒதுங்கினீர்களே
மன்னியுங்கள்
மற்றவனை எள்ளும்
உங்கள் நாசுக்கும் நாகரிகமும்
எனக்கின்னும் கைவரவில்லை

"" கூடவா தெரியவில்லை
அடுத்தமுறை அடிக்க
கை ஓங்க முன்
ஒருகணம் யோசியுங்கள்
எனக்கு எழுத்தறிவிக்கா
உங்களுக்கு என்ன
தண்டனை தரலாம்

நம்பக் கடினமாய் இருந்தாலும் ஒரு தகவல் மேல உள்ளப் படத்தில் இருப்போர் தம் பள்ளிப் பருவத்தில் Dyslexia வால் பாதிக்கப் பட்டிருந்தனர்.

செவ்வாய், 22 டிசம்பர், 2009

இரண்டு சினிமாக்களும் ஒரு ட்ரைலரும்


ரெண்டு படங்கள் பார்த்தேன். ஒரு படம் இப்படி எல்லாம்தான் இருக்கும் இதுதான் நடக்கும் என்று நன்கு தெரிந்து பதிவர்களின் விமர்சனம் எல்லாம் படித்த பின்னும் போய் பார்த்தது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதற்கு ஒப்பானது. அந்தப் படம் பற்றிய விமர்சனங்கள் அதிகம் நீங்கள் படித்திருக்கக் கூடிய வாய்ப்பிருப்பதால் அதைப் பற்றி ஏதும் சொல்லப் போவதில்லை. என்ன இருந்தாலும் படத்தின் வெற்றி உறுதி. நான் போனது காலை நேரக்காட்சிக்கு அதுவும் நேற்று (கிட்டத் தட்ட படம் வெளிவந்து மூன்று நாட்கள் கடந்த நிலையில்) யப்பப்பா என்னக் கூட்டம் படம் முடிந்து வெளியே வருகையில் அதற்கு சற்றும் குறையாத கூட்டம் அடுத்தக் காட்சிக்கு. முதல் காட்சி முடிந்து போகும் ஒருவர் அப்பிடியே போய் அந்த க்யூவிலும் நிற்கத் தொடங்கினார். பிரபு நின்றிருந்தால் சொல்லியிருப்பார். (என்னா கொடுமை சரவணன் இதெல்லாம்?)



அடுத்த படம் நம்ம ஊரில் தியேட்டரில் எல்லாம் போடவில்லை. இங்கு நான் மேலே சொன்ன டைப் படங்கள்தான் போடுவார்கள். ஆக மனசாட்சியை எல்லாம் தூக்கி தூரமாய் வைத்து விட்டு குறுந்தகட்டில்தான் பார்த்தேன். அந்தப் படம் ரேணிகுண்டா. படத்தை பற்றிய விமர்சனங்கள் எல்லாம் படித்து விட்டு ஆர்வமாய் பார்த்தால் கொஞ்சம் ஏமாற்றமாய் போய்விட்டது. படம் அத்தனை பெரிதாய் என்னைக் கவரவில்லை.


பருத்திவீரன்,சுப்ரமணியபுரம் வெற்றிக்குப் பின் யதார்த்தமாய் படம் பண்ணுகிறோம் என்ற பெயரில் வன்முறையை பிரதானமாய் கொண்டப் படங்களின் வருகை அதிகரித்து விட்டது. இப்போது கூட மேற்சொன்ன படங்களின் வெற்றிக்கு காரணம் படத்திலிருந்த அழகியல் அம்சமன்றி நம் மக்களின் மனதிலுள்ள வன்முறைக்கு ஆதரவான வக்கிர மனோபாவமா என்ற சந்தேகம் கூட எட்டிப் பார்த்தது.

விஜய்,அஜித் வகையறாக்களின் மசாலா டெம்ப்ளேட் படங்களை விமர்சிக்கும் நாம் அழுக்கான உடையணிந்த ரௌடிகள், அவர்களது வன்முறையான வாழ்க்கை,காதல், போராட்டம் ,இறுதியில் ஒரு சோக முடிவு என வரும் படங்களை விமர்சிக்க மறுத்து விடுகிறோம். அமீரின் யோகி இந்த வகையில் சுட்டக் கதையாக இருந்தாலும் புதிதாக ஒரு விடயத்தை நமக்கு சொன்னது எனலாம். ரேணிகுண்டாவில் விபச்சார அக்கா பாத்திரம் தவிர மிச்சம் எல்லாமே ஏலவே பல முறைப் பார்த்தது.

தென்தமிழகம் சார் ரௌடிக்களின் வாழ்க்கை முறையே பெரும்பாலான படங்களின் காலமாய் உள்ளது. ஆக இதுவும் C center பார்வையாளர்களைக் குறி வைத்த ஒரு வியாபார உத்தியாகவே கருத் வேண்டியுள்ளது. வெவ்வேறான மொழி,பண்பாடு,பொருளாதார வேறுபாடுகளைக் கொண்ட அத்தா பெரிய தமிழகத்தில் படம் பண்ண வேறு களங்களே கிடைக்கவில்லையா?
அதிலும் மத்தியத் தர வர்க்கத்தைப் பற்றிய படம் என்றால் அது பெரும்பாலும் காதல் படங்களாகவே இருக்கும். ஏன் அவர்களுக்கு வேறு பிரச்சினைகளே இல்லையா? ம்ம் புரியவில்லை.


ஆனால் இந்நிலை மாறும் என்ற நம்பிக்கை ஒரு படத்தின் டிரைலரைப் பார்த்தப் போது ஏற்பட்டது. அது செல்வராகவனின் "ஆயிரத்தில் ஒருவன்". தமிழில் வெளியாகும் முதல் fantasy movie இப்படிச் சொல்லலாமா. நம் நடிகர்களில் பெரும்பாலானவர்கள் Hollywood fantasy movieக்களில் super hero செய்வதை நம் சமூகப் படங்களிலேயே செய்வார்கள். செல்வா எனக்கு மிகவும் பிடித்த ஒரு இயக்குனர். ரொம்பவும் பொறுமையை சோதிக்காமல் அதேவேளை தரமும் கெடாமல் கலை,கமர்சியல் என இரண்டுக்கும் இடையிலான மெல்லிய கோட்டில் தடம் புரளாமல் தன படங்களைத் தருபவர். ஆக அதிகம் எதிர்பார்க்கிறேன் பொங்கலுக்கு ஆயிரத்தில் ஒருவனை
படத்தின் ட்ரைலரை இங்கே பாருங்களேன்

திங்கள், 21 டிசம்பர், 2009

காலை வாரிய இலங்கை அணியின் நடு மற்றும் பின்வரிசை

எதிர்பார்த்ததுதான். இந்தியாவில் ஒருநாள் தொடர்களை அது வேறு அணிகளிடம் இழப்பது மிக அரிதாக நடக்கும் ஒரு விடயம். இருந்தாலும் தோனி இல்லாத இந்திய அணியுடன் ஏதேனும் வாய்ப்புகள் இருக்கும் என நம்பினேன். ம்ம் நான் போன பதிவில் குறிப்பிட்டது போலவே மிகப் பலவீனமான இலங்கை அணியின் பின்வரிசை காலை வாரி விட்டது.

முன்பு சனத்தை நம்பியது போல இப்போதெல்லாம் டில்ஷான் அவர் அடிக்கா விட்டால் அவ்வளவுதான் என்ற நிலைமை. டில்ஷான் நுட்பத்திலோ அல்லது ஒவ்வோர் பந்துக்குமான ஆட்டத் தெரிவுகளிலோ பிழை விடாதவர் ஏன் அவ்வளவு அவசரப்படுகிறார் எனத் தெரியவில்லை. தினேஷ் கார்த்திக் வழங்கிய அருமையான வாய்ப்பை அடுத்த ஓவரிலேயே அநியாயமாக்கி விட்டார்.

உபுல் தரங்க நன்றாக ஆடுகிறார் எனினும் மெதுவாக வரும் பந்துகளை கணிக்கத் தவறுகிறார் leading edge பட்டு ஆட்டமிழக்கும் வாய்ப்புகள் உண்டு.
டெஸ்ட் போட்டிகளில் அத்தனை சாதித்த மகேலவா அது ஒரு நாள் போட்டிகள் என்றால் பெட்டிப் பாம்பாய்மாறி விடுகிறார் . மாத்யூஸ் இருந்திருந்தால் இறுதி நேரத்தில் பொறுப்பாய் ஆடியிருப்பார் என நினைக்கிறேன்.மற்றவர்களைப் பற்றி சொல்லி என்ன ஆகப் போகிறது. சரி அடுத்த போட்டியிலாவது ஏதாவது நடக்கின்றதா எனப் பார்ப்போம்.

பலரும் கிசுகிசுப்பது போல தில்ஷன்,தரங்க பிரச்சினை உண்மைதான் போலிருக்கிறது. களத்தில் அவர்கள் ஆடும் போது அது வெளிப்படையாக தெரிகிறது.லோஷன் அண்ணா பதிவிட்டு தெளிவுப் படுத்துவார் என நம்புகிறேன்.


துடுப்பாட்ட வீரர்களுக்கு மட்டுமேயானதாக ஒருநாள் போட்டிகளின் விதிமுறைகள் மாற்றப்பட்டதன் பின்னர் பந்துவீச்சாளர்களின் Economy rate ரொம்பவும் அதிகரித்து விட்டது. கிரிக்கெட் என்றால் ஒருவர் பந்து வீச வேண்டுமென்பதற்காக மட்டுமே இப்போதெல்லாம் பந்துவீச்சாளர்களோ எனத் தோன்றுகிறது. இப்படியே போனால் அணியொன்று வெறும் துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பகுதி நேரப் பந்துவீச்சாளர்களோடு களமிறங்கும் எனத் தோன்றுகிறது. இந்நிலையில் நம் வீரர்கள் பயன் படுத்திக் கொள்ளவில்லை எனினும் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான இன்னுமொரு ஆடுகளம்தான் இன்றும். எனினும் இன்றைய போட்டியில் சகல சுழற்பந்து வீச்சாளர்களின் முயற்சியும் பாராட்டத் தக்கதே. ரவீந்திர ஜடேஜா,சுராஜ் ரண்டீவ் என புதிய இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களின் வருகையை கட்டியம் கூறியிருக்கிறது இத்தொடர்.

வழமைக்கு மாறாக இன்று Score board இல் தென்பட்ட ஆச்சரியமான ஒன்று சச்சின் ஆட்டமிழக்காமல் 96

ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்யலாம்

அப்படி இப்படி ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்து விட்டது. சரத் பொன்சேகா பிடிக்கப் போனப் பிள்ளையார் குரங்காய் போய்விட்டது. வரும்போது பார்த்தேன் வெள்ளை கொடியுடன் சரணடைய வந்த புலித் தலைவர்களை கொன்றதாய் ராணுவ வீரர்களை காட்டிக் கொடுத்த பொன்சேகாவைத் தோற்கடிப்போம் என போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

போட்டி பிரதானமான இருவரிடையேத்தான் என்பது வெளிப்படையான நிலையிலும் 23 பேர் களமிறங்கி இருக்கிறார்கள். சிறிதுங்க ஜெயசூரியாவின் கட்சி,தோழர் விக்ரமபாஹு கருணாரத்னவின் புதிய இடதுசாரி முன்னணி என்பன தமது கொள்கைப் பரப்புக்காக தேர்தல்களில் போட்டியிடுவது வழமை என்ற போதும் மற்றவர்கள் யாரோ ஒருவருடைய நோக்கத்துக்காக வாக்குகளை பிரிக்கவென போட்டியிடுவதும் வழமை. அதிலும் மையோன் முஸ்தபாவை யார் எதற்காக களமிறக்கி இருக்கிறார், சிவாஜிலிங்கத்தின் நோக்கம் என்ன? என்பதெல்லாம் வெள்ளிடைமலை.



தமிழரை அழித்தோருக்கு தமிழரின் வாக்குகள் செல்லக் கூடாது எனக் கூறும் சிவாஜிலிங்கத்தின் பிரதான இலக்கு அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தல் எனக் கூறினால் நான் தமிழினத் துரோகியாகக் கணிக்கப் படுவேன். என்ன செய்வது அனைவரையும் துரோகி எனத் தூற்றி வீரம் பேசினால்தானே நாம் தமிழர். இப்போதே அடிப்பிடி ஆரம்பமாகி விட்டது அடுத்த பொதுத் தேர்தலில் TNA என ஒன்றிருக்குமா தெரியவில்லை. இவர்களளெல்லாம் யாரேனும் கம்பெடுத்து வாத்தி வேலை செய்தால்தானே ஒன்றாயிருக்கிறார்கள்.
ஒன்று அனைவரும் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி இருக்க வேண்டும் இல்லையா தொடர்ந்து தமிழ் தேசியத்திற்கு ஆதரவளிக்கும் தோழர் விக்ரபாகுவிற்கு ஆதரவளித்திருக்கலாம். அவருக்கு 8 சதவீதத்திற்கும் அதிகமாய் வாக்குகள் கிடைத்திருக்கும் பட்சத்தில் பிரதானமான இருவரும் 50 சதவீதம் வாக்குகளை பெறத் தவறி இருப்பார்.

நானும் பலவாறு யோசித்துப் பார்த்து விட்டேன் எப்படியும் அந்த ரெண்டு பேருக்கும் போட மனம் ஒப்பாது. சிவாஜிலிங்கத்தின் நோக்கம் தெளிவாகத் தெரிவதில் அதிலும் உடன்பாடில்லை. தோழர் விக்ரமபாகு என் தெரிவானப் போதும் அவருக்கு வாக்களித்து பிரயோசனமில்லை. பெரும்பாலும் செல்லுபடியற்றதென சொல்லப்படும் வாக்குகளில் என்னுடையதும்இருக்கலாம்.

வெள்ளி, 18 டிசம்பர், 2009

சாகிர் கானுக்கு நன்றி


அன்றைய ராஜ் கொட்டி போட்டி அனுபவங்களை பாடமாகக் கொண்டு இன்றையப் போட்டியில் அபார வெற்றியை இலங்கைப் பெற்றுள்ளது. முன்வரிசையில் அபாரமாக டில்ஷான் ஆடியப் பின்னும் பின்னாலே பொறுப்பின்றி சொதப்புவதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் இன்று அவ்விதம் செய்யாதது மகிழ்ச்சி.


என்னை கேட்டால் கிரிக்கெட் போட்டிகளில் களத் தடுப்பின் முக்கியம் உணரச் செய்த போட்டிகளில் ஒன்று இது. இலங்கை அணி களத் தடுப்பில் விட்ட சில குறைகள் களையப் பட்டிருந்தால் கணிசமான ஓட்ட எண்ணிக்கையை குறைத்திருக்க முடியும். இறுதி ஓவர்களில் இந்திய அணியின் விளாசல் அதனாலேயே நிகழ்ந்தது. இது போன்ற ஒரு அணி தன்னிடமிருந்தால் உலகக்கிண்ணம் வெல்வது பெரிதில்லை என்று இம்ரான் கான் சொன்ன இலங்கை அணியா இப்படி என்று என்னும் அளவில் களத் தடுப்பு இருப்பது கவலையளிக்கிறது.


அதே போல் விக்கேட்டுகளுக்கிடையிலான ஓட்டமும். வீரகளிடையே புரிந்துணர்வு குறைந்து வருகிறது. சரியான Communication இல்லை.

திலஷானின் ஆட்டம் அருமை. நாளுக்கு நாள் அவரது ஆட்டம் மெருகேறி வருவது உண்மை. அஞ்சலோ மாத்யூஸ் அணியின் தவிர்க்க முடியாத வீரராகி விட்டார். எது எப்படியிருப்பினும் அடுத்த உலகக் கிண்ணத்திற்குள் அணியின் பின் வரிசையை வலுப்படுத்த வேண்டியது முக்கியம். ஒன்று மட்டும் தெளிவாக சொல்லாம் அடுத்த உலகக்கிண்ணம் இதே போன்ற ஆடுகளங்களில் நடைபெறும் பட்சத்தில் கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்பு இவ்விரு அணிகளில் ஒன்றுக்கேஉண்டு.



இறுதி வரை நகம் கடித்து விரலே புண்ணாக நெஞ்சம் பதைத்து பார்த்த போட்டியில் இறுதியில் சொதப்பி விடுவார்களோ என நினைத்த போது ஆபத்பாந்தவனாக காப்பாற்றிய இன்றைய போட்டியின் ஆட்ட நாயகன் சாகிர் கானுக்கு ஞானி பாணியில் இலங்கை ரசிகர்கள் சார்பில் பூச்செண்டு இந்திய ரசிகர்கள் குட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

செவ்வாய், 15 டிசம்பர், 2009

ஏமாற்றமளித்த கிரிக்கெட் போட்டி


அப்படி இப்படி பெரும் ஏமாற்றங்களுடன் ஒரு போட்டி முடிவுக்கு வந்துவிட்டது. சங்கக்காரவின் இலங்கை சாதனைக்குரிய மிக வேகமான சதம், தில்ஷானின் இரட்டைச் சதம்,குறைந்தபட்சம் வெற்றி என எதிர்பார்த்த எதுவுமே நிறைவேற வில்லை.

தம்பி சொன்னான் கம்ப்யூட்டரில் கிரிக்கெட் கேம் விளையாடுவது போல சேவ் செய்து விட்ட இடத்திலருந்து விளையாடினால் எப்படி இருக்கும். நன்றாய்த்தான் இருக்கும். டில்ஷான் ஆட்டமிழந்தவுடன் Undo செய்யச் சொல்கிறான். சரி பரவாயில்லை போராடித்தானே தோற்றோம் என அவனைச் சமாதானம் செய்வது பெரும்பாடாய் போய்விட்டது.
எனக்கு இன்னும் புரியவில்லை இந்தியாவில் ஆடுகளங்களை எதற்காக தயார் செய்கிறார்கள் என

எதிர்பாரா சந்திப்பு

தான் பிரிந்த பழைய காதலியை எதேச்சையாய் சந்தித்த இளைஞன் ஒருவனின் மனப் பதிவுகள்

எதிர்பார்ப்பேயில்லாமல்
ஏதோ சென்று
கொண்டிருந்தவன்
எதிர்பார்ப்பின்றி
திரும்பிப் பார்த்தேனே
எது சொன்னது
எதிரே நீயிருப்பதாய்

நெருங்கி வர மனம்
துடித்தும்
இறுக்கமான மனதுடன்
நான்
இருந்தும் முடியவில்லை
அலையும் மனதைக்
கட்டுப்படுத்த

எனக்கு முன்னே
என்னைக் கண்டு கையசைத்தவளே
இதுபோலவே
கண்டுகொண்டிருக்கக்கூடாதா?
உன் மீதான என் காதலை

"எப்படி இருக்கறீங்க?"
ஆச்சரியப்பட்டுத்தான் போனேன்
நாம் ஒன்றாய்
கேட்டுக்கொண்ட போது
என் இல்லாமல்
போயிற்று
காதல் என்ற புள்ளியில்
மட்டும் இந்த ஒற்றுமை





Related Posts with Thumbnails