
2009 ம் வருடம் கடந்து செல்ல இன்னும் சில மணித்துளிகளே இருக்கும் நிலையில் இந்த வருடத்தின் என் கடைசிப் பதிவு. எப்போதும் போல இந்த 2009 உம் எதிர்ப்பார்ப்போடுதான் ஆரம்பித்தது. தனிப்பட்ட முறையில் என் மகிழ்வுக்கு காரணம் நான் வலைப்பதிவு ஆரம்பித்து எழுத ஆரம்பித்தது. எழுதி குவித்த விட வேண்டுமென ஆசையுடன் ஆரம்பித்து சென்று கொண்டிருந்தாலும் மே மாதமளவில் ஒரு பெருந் தேக்கம். இத்தேக்க நிலைமை எனக்கு மட்டுமல்ல கிட்டத்தட்ட இலங்கையில் இருந்து பதிவிடும் அனைவருக்குமே இருந்தது. இதற்கான காரணம் பரகசியம். பதிவெழுதுவதற்கான மனநிலையை இழந்திருந்தோம். அந்த மே மாதத்திற்கு பிறகு நான் மீண்டும் எழுத வந்ததே ஆகஸ்ட்டில்தான். ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் சில இழப்புகள் தாங்கவொண்ணா மனத்துயரை ஏற்படுத்தி விடுகின்றன.

ஆரம்பத்தில் ஏற்க மறுத்து சாட்டு சொல்லிய மனம் பின் ஏற்றுக்கொண்டாலும் இன்னமும் சில வீராவேச வலைப்பதிவுகளில் சொல்லப்படும் விடயங்கள் உண்மையாகிவிடாதா என்ற நப்பாசையும் மனதின் மூலையில் தொக்கி நிற்கிறது. இது சென்ற வருடத்தின் மனதில் தோன்றிய பெரும் வலி இன்னமும் மாறா வலி. மூன்றரை லட்சம் பேரின் கதி என்ன என இதற்கு காரணமான பங்குதாரர்களைக் கேட்டால் 84 இல் ஆலமரம் கதை சொன்னவர்களின் வாரிசுகள் இதற்கும் அழகான உவமைகள் சொல்லக் கூடும்.

இந்த மாபெரும் இழப்பைத் தவிர்த்து என்னை பாதித்த மற்றைய இரு இழப்புகள். ஒன்று மைக்கேல் ஜக்சனுடையது மற்றையது நாகேஷுடையது.
மைக்கேல் ஜாக்சனின் தனிப்பட்ட வாழ்கையை விட்டு விடுவோம். அவரது சாகா வரம் பெற்ற பாடல்களும் நடனமும்மறக்க இயலாதவை . எல்லோரும் வாழ்க்கையில் கடக்கும் காதல் தோல்வி என்னை கடந்த போது அந்தப் பிரிவை அவரின் "You are not alone" பாடலின் துணைக் கொண்டே தவிர்த்தேன்.

நாகேஷ் அவரது பழைய சில படங்களில் அவரும் சில சேட்டைகள் செய்திருக்கிறார். ஆனால் அதையும் தாண்டி அவர் நடிகர் திலகத்தை எல்லாம் தாண்டிய அற்புத நடிகர் (என் கருத்தில்). கமலிடமே அவரின் பாதிப்பு இருப்பதாய் எனக்கு படும்.

ஆகா என மனதுக்கு உவகை ஊட்டிய செய்திகள் எனப் பார்த்தால் முதன்மையானது இசைப்புயல் கண்டம் கடந்து வீசியது. அந்த ஆஸ்கார் கணங்கள் மறக்க முடியாதவை. எவ்வளவு யோசித்து பார்த்தாலும் சந்தோஷக் கணங்கள் வேறெதுவும் ஞாபகம் வரவே இல்லை.

கிரிக்கெட்டில் என்னை சந்தோஷப் படுத்தியது டில்ஷானின் விஸ்வரூபம், வருத்தம் முரளியின் முன்கூட்டிய ஒய்வு அறிவிப்பு. டில்ஷான் அடுத்த வருடம் இன்னும் கலக்குவார் என நம்புவோம்.

சினிமாவை பொறுத்தவரை போன வருடம் சப்பென இருந்தது. பதிவர்களுக்கு நல்லத் தீனிப் போட்ட படங்கள் பாலாவின் நான் கடவுள், கமலின் உன்னைப் போல் ஒருவன், ஜனநாதனின் பேராண்மை மூன்றும் என நினைக்கிறேன். இம்மூன்று படங்களிலும் பாராட்டவோ தூற்றவோ ஏதோ இருந்தன. ஆனால் அப்படி இல்லாமல் வருகைக்கு முன் இருந்தே பட்டையைக் கிளப்பிய படம் சந்தேகமில்லாமல் வேட்டைக்காரன்.
பரபரப்பாய் தேடி தேடி படிக்க வைத்தவர்கள் நடுவில் தேவநாதனும் வருட இறுதியில் என்.டி. திவாரியும். அதாவது சென்டிமென்ட்டும் அக்க்ஷனும் நிரம்பிய சென்ற வருடத்தின் கிளுகிளுப்புக்கள். அதிலும் திவாரி கல்யாணத்தை தள்ளிப் போடாதே என சொன்ன நண்பர்கள் மத்தியில் இன்னும் அறுபது வருடங்களுக்கு வேண்டுமானாலும் தள்ளிப் போடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய மகான்.
சென்ற வருட ஆச்சரியம் பராக் ஒபாமாவும் அவருக்கு கிடைத்த நோபெல் பரிசும். பார்ப்போம் 2010 என்னென்ன ஆச்சரியங்களை தன்னுள் ஒளித்து வைத்திருக்கிறதென.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.