செவ்வாய், 22 டிசம்பர், 2009

இரண்டு சினிமாக்களும் ஒரு ட்ரைலரும்


ரெண்டு படங்கள் பார்த்தேன். ஒரு படம் இப்படி எல்லாம்தான் இருக்கும் இதுதான் நடக்கும் என்று நன்கு தெரிந்து பதிவர்களின் விமர்சனம் எல்லாம் படித்த பின்னும் போய் பார்த்தது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதற்கு ஒப்பானது. அந்தப் படம் பற்றிய விமர்சனங்கள் அதிகம் நீங்கள் படித்திருக்கக் கூடிய வாய்ப்பிருப்பதால் அதைப் பற்றி ஏதும் சொல்லப் போவதில்லை. என்ன இருந்தாலும் படத்தின் வெற்றி உறுதி. நான் போனது காலை நேரக்காட்சிக்கு அதுவும் நேற்று (கிட்டத் தட்ட படம் வெளிவந்து மூன்று நாட்கள் கடந்த நிலையில்) யப்பப்பா என்னக் கூட்டம் படம் முடிந்து வெளியே வருகையில் அதற்கு சற்றும் குறையாத கூட்டம் அடுத்தக் காட்சிக்கு. முதல் காட்சி முடிந்து போகும் ஒருவர் அப்பிடியே போய் அந்த க்யூவிலும் நிற்கத் தொடங்கினார். பிரபு நின்றிருந்தால் சொல்லியிருப்பார். (என்னா கொடுமை சரவணன் இதெல்லாம்?)



அடுத்த படம் நம்ம ஊரில் தியேட்டரில் எல்லாம் போடவில்லை. இங்கு நான் மேலே சொன்ன டைப் படங்கள்தான் போடுவார்கள். ஆக மனசாட்சியை எல்லாம் தூக்கி தூரமாய் வைத்து விட்டு குறுந்தகட்டில்தான் பார்த்தேன். அந்தப் படம் ரேணிகுண்டா. படத்தை பற்றிய விமர்சனங்கள் எல்லாம் படித்து விட்டு ஆர்வமாய் பார்த்தால் கொஞ்சம் ஏமாற்றமாய் போய்விட்டது. படம் அத்தனை பெரிதாய் என்னைக் கவரவில்லை.


பருத்திவீரன்,சுப்ரமணியபுரம் வெற்றிக்குப் பின் யதார்த்தமாய் படம் பண்ணுகிறோம் என்ற பெயரில் வன்முறையை பிரதானமாய் கொண்டப் படங்களின் வருகை அதிகரித்து விட்டது. இப்போது கூட மேற்சொன்ன படங்களின் வெற்றிக்கு காரணம் படத்திலிருந்த அழகியல் அம்சமன்றி நம் மக்களின் மனதிலுள்ள வன்முறைக்கு ஆதரவான வக்கிர மனோபாவமா என்ற சந்தேகம் கூட எட்டிப் பார்த்தது.

விஜய்,அஜித் வகையறாக்களின் மசாலா டெம்ப்ளேட் படங்களை விமர்சிக்கும் நாம் அழுக்கான உடையணிந்த ரௌடிகள், அவர்களது வன்முறையான வாழ்க்கை,காதல், போராட்டம் ,இறுதியில் ஒரு சோக முடிவு என வரும் படங்களை விமர்சிக்க மறுத்து விடுகிறோம். அமீரின் யோகி இந்த வகையில் சுட்டக் கதையாக இருந்தாலும் புதிதாக ஒரு விடயத்தை நமக்கு சொன்னது எனலாம். ரேணிகுண்டாவில் விபச்சார அக்கா பாத்திரம் தவிர மிச்சம் எல்லாமே ஏலவே பல முறைப் பார்த்தது.

தென்தமிழகம் சார் ரௌடிக்களின் வாழ்க்கை முறையே பெரும்பாலான படங்களின் காலமாய் உள்ளது. ஆக இதுவும் C center பார்வையாளர்களைக் குறி வைத்த ஒரு வியாபார உத்தியாகவே கருத் வேண்டியுள்ளது. வெவ்வேறான மொழி,பண்பாடு,பொருளாதார வேறுபாடுகளைக் கொண்ட அத்தா பெரிய தமிழகத்தில் படம் பண்ண வேறு களங்களே கிடைக்கவில்லையா?
அதிலும் மத்தியத் தர வர்க்கத்தைப் பற்றிய படம் என்றால் அது பெரும்பாலும் காதல் படங்களாகவே இருக்கும். ஏன் அவர்களுக்கு வேறு பிரச்சினைகளே இல்லையா? ம்ம் புரியவில்லை.


ஆனால் இந்நிலை மாறும் என்ற நம்பிக்கை ஒரு படத்தின் டிரைலரைப் பார்த்தப் போது ஏற்பட்டது. அது செல்வராகவனின் "ஆயிரத்தில் ஒருவன்". தமிழில் வெளியாகும் முதல் fantasy movie இப்படிச் சொல்லலாமா. நம் நடிகர்களில் பெரும்பாலானவர்கள் Hollywood fantasy movieக்களில் super hero செய்வதை நம் சமூகப் படங்களிலேயே செய்வார்கள். செல்வா எனக்கு மிகவும் பிடித்த ஒரு இயக்குனர். ரொம்பவும் பொறுமையை சோதிக்காமல் அதேவேளை தரமும் கெடாமல் கலை,கமர்சியல் என இரண்டுக்கும் இடையிலான மெல்லிய கோட்டில் தடம் புரளாமல் தன படங்களைத் தருபவர். ஆக அதிகம் எதிர்பார்க்கிறேன் பொங்கலுக்கு ஆயிரத்தில் ஒருவனை
படத்தின் ட்ரைலரை இங்கே பாருங்களேன்

திங்கள், 21 டிசம்பர், 2009

காலை வாரிய இலங்கை அணியின் நடு மற்றும் பின்வரிசை

எதிர்பார்த்ததுதான். இந்தியாவில் ஒருநாள் தொடர்களை அது வேறு அணிகளிடம் இழப்பது மிக அரிதாக நடக்கும் ஒரு விடயம். இருந்தாலும் தோனி இல்லாத இந்திய அணியுடன் ஏதேனும் வாய்ப்புகள் இருக்கும் என நம்பினேன். ம்ம் நான் போன பதிவில் குறிப்பிட்டது போலவே மிகப் பலவீனமான இலங்கை அணியின் பின்வரிசை காலை வாரி விட்டது.

முன்பு சனத்தை நம்பியது போல இப்போதெல்லாம் டில்ஷான் அவர் அடிக்கா விட்டால் அவ்வளவுதான் என்ற நிலைமை. டில்ஷான் நுட்பத்திலோ அல்லது ஒவ்வோர் பந்துக்குமான ஆட்டத் தெரிவுகளிலோ பிழை விடாதவர் ஏன் அவ்வளவு அவசரப்படுகிறார் எனத் தெரியவில்லை. தினேஷ் கார்த்திக் வழங்கிய அருமையான வாய்ப்பை அடுத்த ஓவரிலேயே அநியாயமாக்கி விட்டார்.

உபுல் தரங்க நன்றாக ஆடுகிறார் எனினும் மெதுவாக வரும் பந்துகளை கணிக்கத் தவறுகிறார் leading edge பட்டு ஆட்டமிழக்கும் வாய்ப்புகள் உண்டு.
டெஸ்ட் போட்டிகளில் அத்தனை சாதித்த மகேலவா அது ஒரு நாள் போட்டிகள் என்றால் பெட்டிப் பாம்பாய்மாறி விடுகிறார் . மாத்யூஸ் இருந்திருந்தால் இறுதி நேரத்தில் பொறுப்பாய் ஆடியிருப்பார் என நினைக்கிறேன்.மற்றவர்களைப் பற்றி சொல்லி என்ன ஆகப் போகிறது. சரி அடுத்த போட்டியிலாவது ஏதாவது நடக்கின்றதா எனப் பார்ப்போம்.

பலரும் கிசுகிசுப்பது போல தில்ஷன்,தரங்க பிரச்சினை உண்மைதான் போலிருக்கிறது. களத்தில் அவர்கள் ஆடும் போது அது வெளிப்படையாக தெரிகிறது.லோஷன் அண்ணா பதிவிட்டு தெளிவுப் படுத்துவார் என நம்புகிறேன்.


துடுப்பாட்ட வீரர்களுக்கு மட்டுமேயானதாக ஒருநாள் போட்டிகளின் விதிமுறைகள் மாற்றப்பட்டதன் பின்னர் பந்துவீச்சாளர்களின் Economy rate ரொம்பவும் அதிகரித்து விட்டது. கிரிக்கெட் என்றால் ஒருவர் பந்து வீச வேண்டுமென்பதற்காக மட்டுமே இப்போதெல்லாம் பந்துவீச்சாளர்களோ எனத் தோன்றுகிறது. இப்படியே போனால் அணியொன்று வெறும் துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பகுதி நேரப் பந்துவீச்சாளர்களோடு களமிறங்கும் எனத் தோன்றுகிறது. இந்நிலையில் நம் வீரர்கள் பயன் படுத்திக் கொள்ளவில்லை எனினும் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான இன்னுமொரு ஆடுகளம்தான் இன்றும். எனினும் இன்றைய போட்டியில் சகல சுழற்பந்து வீச்சாளர்களின் முயற்சியும் பாராட்டத் தக்கதே. ரவீந்திர ஜடேஜா,சுராஜ் ரண்டீவ் என புதிய இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களின் வருகையை கட்டியம் கூறியிருக்கிறது இத்தொடர்.

வழமைக்கு மாறாக இன்று Score board இல் தென்பட்ட ஆச்சரியமான ஒன்று சச்சின் ஆட்டமிழக்காமல் 96

ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்யலாம்

அப்படி இப்படி ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்து விட்டது. சரத் பொன்சேகா பிடிக்கப் போனப் பிள்ளையார் குரங்காய் போய்விட்டது. வரும்போது பார்த்தேன் வெள்ளை கொடியுடன் சரணடைய வந்த புலித் தலைவர்களை கொன்றதாய் ராணுவ வீரர்களை காட்டிக் கொடுத்த பொன்சேகாவைத் தோற்கடிப்போம் என போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

போட்டி பிரதானமான இருவரிடையேத்தான் என்பது வெளிப்படையான நிலையிலும் 23 பேர் களமிறங்கி இருக்கிறார்கள். சிறிதுங்க ஜெயசூரியாவின் கட்சி,தோழர் விக்ரமபாஹு கருணாரத்னவின் புதிய இடதுசாரி முன்னணி என்பன தமது கொள்கைப் பரப்புக்காக தேர்தல்களில் போட்டியிடுவது வழமை என்ற போதும் மற்றவர்கள் யாரோ ஒருவருடைய நோக்கத்துக்காக வாக்குகளை பிரிக்கவென போட்டியிடுவதும் வழமை. அதிலும் மையோன் முஸ்தபாவை யார் எதற்காக களமிறக்கி இருக்கிறார், சிவாஜிலிங்கத்தின் நோக்கம் என்ன? என்பதெல்லாம் வெள்ளிடைமலை.



தமிழரை அழித்தோருக்கு தமிழரின் வாக்குகள் செல்லக் கூடாது எனக் கூறும் சிவாஜிலிங்கத்தின் பிரதான இலக்கு அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தல் எனக் கூறினால் நான் தமிழினத் துரோகியாகக் கணிக்கப் படுவேன். என்ன செய்வது அனைவரையும் துரோகி எனத் தூற்றி வீரம் பேசினால்தானே நாம் தமிழர். இப்போதே அடிப்பிடி ஆரம்பமாகி விட்டது அடுத்த பொதுத் தேர்தலில் TNA என ஒன்றிருக்குமா தெரியவில்லை. இவர்களளெல்லாம் யாரேனும் கம்பெடுத்து வாத்தி வேலை செய்தால்தானே ஒன்றாயிருக்கிறார்கள்.
ஒன்று அனைவரும் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி இருக்க வேண்டும் இல்லையா தொடர்ந்து தமிழ் தேசியத்திற்கு ஆதரவளிக்கும் தோழர் விக்ரபாகுவிற்கு ஆதரவளித்திருக்கலாம். அவருக்கு 8 சதவீதத்திற்கும் அதிகமாய் வாக்குகள் கிடைத்திருக்கும் பட்சத்தில் பிரதானமான இருவரும் 50 சதவீதம் வாக்குகளை பெறத் தவறி இருப்பார்.

நானும் பலவாறு யோசித்துப் பார்த்து விட்டேன் எப்படியும் அந்த ரெண்டு பேருக்கும் போட மனம் ஒப்பாது. சிவாஜிலிங்கத்தின் நோக்கம் தெளிவாகத் தெரிவதில் அதிலும் உடன்பாடில்லை. தோழர் விக்ரமபாகு என் தெரிவானப் போதும் அவருக்கு வாக்களித்து பிரயோசனமில்லை. பெரும்பாலும் செல்லுபடியற்றதென சொல்லப்படும் வாக்குகளில் என்னுடையதும்இருக்கலாம்.

வெள்ளி, 18 டிசம்பர், 2009

சாகிர் கானுக்கு நன்றி


அன்றைய ராஜ் கொட்டி போட்டி அனுபவங்களை பாடமாகக் கொண்டு இன்றையப் போட்டியில் அபார வெற்றியை இலங்கைப் பெற்றுள்ளது. முன்வரிசையில் அபாரமாக டில்ஷான் ஆடியப் பின்னும் பின்னாலே பொறுப்பின்றி சொதப்புவதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் இன்று அவ்விதம் செய்யாதது மகிழ்ச்சி.


என்னை கேட்டால் கிரிக்கெட் போட்டிகளில் களத் தடுப்பின் முக்கியம் உணரச் செய்த போட்டிகளில் ஒன்று இது. இலங்கை அணி களத் தடுப்பில் விட்ட சில குறைகள் களையப் பட்டிருந்தால் கணிசமான ஓட்ட எண்ணிக்கையை குறைத்திருக்க முடியும். இறுதி ஓவர்களில் இந்திய அணியின் விளாசல் அதனாலேயே நிகழ்ந்தது. இது போன்ற ஒரு அணி தன்னிடமிருந்தால் உலகக்கிண்ணம் வெல்வது பெரிதில்லை என்று இம்ரான் கான் சொன்ன இலங்கை அணியா இப்படி என்று என்னும் அளவில் களத் தடுப்பு இருப்பது கவலையளிக்கிறது.


அதே போல் விக்கேட்டுகளுக்கிடையிலான ஓட்டமும். வீரகளிடையே புரிந்துணர்வு குறைந்து வருகிறது. சரியான Communication இல்லை.

திலஷானின் ஆட்டம் அருமை. நாளுக்கு நாள் அவரது ஆட்டம் மெருகேறி வருவது உண்மை. அஞ்சலோ மாத்யூஸ் அணியின் தவிர்க்க முடியாத வீரராகி விட்டார். எது எப்படியிருப்பினும் அடுத்த உலகக் கிண்ணத்திற்குள் அணியின் பின் வரிசையை வலுப்படுத்த வேண்டியது முக்கியம். ஒன்று மட்டும் தெளிவாக சொல்லாம் அடுத்த உலகக்கிண்ணம் இதே போன்ற ஆடுகளங்களில் நடைபெறும் பட்சத்தில் கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்பு இவ்விரு அணிகளில் ஒன்றுக்கேஉண்டு.



இறுதி வரை நகம் கடித்து விரலே புண்ணாக நெஞ்சம் பதைத்து பார்த்த போட்டியில் இறுதியில் சொதப்பி விடுவார்களோ என நினைத்த போது ஆபத்பாந்தவனாக காப்பாற்றிய இன்றைய போட்டியின் ஆட்ட நாயகன் சாகிர் கானுக்கு ஞானி பாணியில் இலங்கை ரசிகர்கள் சார்பில் பூச்செண்டு இந்திய ரசிகர்கள் குட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

செவ்வாய், 15 டிசம்பர், 2009

ஏமாற்றமளித்த கிரிக்கெட் போட்டி


அப்படி இப்படி பெரும் ஏமாற்றங்களுடன் ஒரு போட்டி முடிவுக்கு வந்துவிட்டது. சங்கக்காரவின் இலங்கை சாதனைக்குரிய மிக வேகமான சதம், தில்ஷானின் இரட்டைச் சதம்,குறைந்தபட்சம் வெற்றி என எதிர்பார்த்த எதுவுமே நிறைவேற வில்லை.

தம்பி சொன்னான் கம்ப்யூட்டரில் கிரிக்கெட் கேம் விளையாடுவது போல சேவ் செய்து விட்ட இடத்திலருந்து விளையாடினால் எப்படி இருக்கும். நன்றாய்த்தான் இருக்கும். டில்ஷான் ஆட்டமிழந்தவுடன் Undo செய்யச் சொல்கிறான். சரி பரவாயில்லை போராடித்தானே தோற்றோம் என அவனைச் சமாதானம் செய்வது பெரும்பாடாய் போய்விட்டது.
எனக்கு இன்னும் புரியவில்லை இந்தியாவில் ஆடுகளங்களை எதற்காக தயார் செய்கிறார்கள் என

எதிர்பாரா சந்திப்பு

தான் பிரிந்த பழைய காதலியை எதேச்சையாய் சந்தித்த இளைஞன் ஒருவனின் மனப் பதிவுகள்

எதிர்பார்ப்பேயில்லாமல்
ஏதோ சென்று
கொண்டிருந்தவன்
எதிர்பார்ப்பின்றி
திரும்பிப் பார்த்தேனே
எது சொன்னது
எதிரே நீயிருப்பதாய்

நெருங்கி வர மனம்
துடித்தும்
இறுக்கமான மனதுடன்
நான்
இருந்தும் முடியவில்லை
அலையும் மனதைக்
கட்டுப்படுத்த

எனக்கு முன்னே
என்னைக் கண்டு கையசைத்தவளே
இதுபோலவே
கண்டுகொண்டிருக்கக்கூடாதா?
உன் மீதான என் காதலை

"எப்படி இருக்கறீங்க?"
ஆச்சரியப்பட்டுத்தான் போனேன்
நாம் ஒன்றாய்
கேட்டுக்கொண்ட போது
என் இல்லாமல்
போயிற்று
காதல் என்ற புள்ளியில்
மட்டும் இந்த ஒற்றுமை





திங்கள், 14 டிசம்பர், 2009

வேட்டைக்காரனை எதிர்க்கத்தான் வேண்டுமா?


இலங்கை திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவர் ஜேக்சன் என்தனி இயக்குனர் ,மேடை நாடக நெறியாளர்,தொலைகாட்சி அறிவிப்பாளர் எனப் பன்முகங்களையும் கொண்டவர். ஒருமுறை நேத்ரா டிவியின் நான்காம் பரிமாணம் நிகழ்ச்சியில் கேள்வியொன்றுக்கு தான் உலகிலேயே சிறந்த நடிகர் என்று கருதுபவரும் சிறந்த இயக்குனர் என்று கருதுபவரும் தமிழ்நாட்டிலேயே உள்ளனர் என்றார். அவ்வாறு அவரால் சுட்டப்பட்டவர்கள் கமல் மற்றும் மணிரத்னம்.


ரஞ்சன் ராமநாயக்க சிங்கள சினியுலகின் சூப்பர் ஸ்டார், சப்ரகமுவ மாகாண எதிர்க்கட்சி தலைவர் ஒவ்வொரு முறை ரஜினி படங்களை ரீமேக்கி என்னைப் போன்றவர்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகுபவர். ஒருமுறை அவரது பிரபலம் தொடர்பிலான கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் அவர் சொன்னது Popularity என்றால் என்னவென்று ரஜினி படங்களைத் திரையரங்கில் பாருங்கள் தெரியும் என்பதாக இருந்தது. இன்னொருமுறை தமிழகத்தில் ஏதோ ஷூட்டிங்கில் பங்குபற்றிய அவர் ரஜினி நடிக்கும் மண்ணில் நான் நடித்தேன் என்பதே பெருமை என இங்கு நெகிழ்ந்திருந்தார்.
இவ்வளவு ஏன் நாம் பெரிதாக Mind பண்ணாத சப்பை பிகர்களான பூஜா,மோனிகா போன்றோருக்கு எல்லாம் இங்குள்ளப் படங்களில் எல்லாம் Title role.


இராஜ் வீரரத்ன என்பவர் இங்குள்ள இளம் தலைமுறை இசைக்கலைஞர். ஒரு பாடகர்,Composer என்பதையும் தாண்டி நல்லதொரு Sound engineer இவரது mixing இல் வரும் பாடல்கள் அவற்றின் தொழிநுட்பநேர்த்திக்காகவே ரசிக்கப்படுபவை. ஒருமுறை சிங்கள டிவி நிகழ்ச்சியில் W.D. அமரதேவவுக்கான பாராட்டு விழா, ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்வு எதற்கு போவீர்கள் என்ற கேள்விக்கு இவர் சற்றும் யோசிக்காமல் தந்த பதில் ரஹ்மானின் இசை கச்சேரிக்கு. அமரதேவ லேசுப்பட்ட ஆளில்லை இலங்கையின் மிக மூத்த முதிர்ந்த இசைக்கலைஞர். இந்திய மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுப் பெற்ற ஒரே ஒரு இலங்கையர். ஆனால் இராஜின் பதிலால் இங்கு எவரும் உணர்ச்சி வசப்பட்டு பேசவில்லை. கலை அரசியல் இரண்டையும் வேறுப்படுத்தி பார்க்கும் மன முதிர்ச்சி அவர்களுக்குஇருக்கிறது.

ஆனால் இராஜ விஜய் ஆண்டனியோடு சேர்ந்து பங்காற்றுகின்றார் என்றவுடனே ஏராளம் எதிர்ப்புகள் இவ்விதமான எதிர்ப்புகளுக்கு எல்லாம் அஞ்சி நம் சமூகம் படம் பார்க்காமல் இருக்காது. ஏன் இலங்கையில் மட்டும் அறியப்பட்டிருந்த இராஜுக்கு இது நல்லதொரு விளம்பரமும் கூட . நான் மேற்சொன்ன சிங்களவருக்கு இருக்கும் பெருந்தன்மை ஏன் இல்லாமல் போனது நமக்கு? அதுவும் இது தொடர்பான பதிவுகளில் உள்ள வாசகங்களைப் பாருங்களேன் எத்தனை துவேசம். அவர் ராணுவ வீரர்களை பாராட்டி பாடல் பாடி விட்டாராம். தீர்க்கமான சந்தர்ப்பமொன்றில் தான் சார்ந்த தேசத்துக்கு அவர் செய்தது அது. நாமும்தான் அப்படியான விடயங்களைச் செய்தோம். இராஜ் வேண்டாம் என்கிறார்களே. சீமான் கூடத்தான் இரட்டை அர்த்தப்பட தம்பி எனப் பெயரிட்டு படமெடுத்தார். மாதவனும் புலியும் ஒன்றாய் உறுமுவது போல பானருடன் படம் இலங்கையிலும் திரையிடப்பட்டதுதானே. அதில் நடித்த பூஜா பின் சிங்களப் படங்கள் நடிக்க வில்லையா?


தமிழருக்காய் மேடைகளில் மௌன விரதமிருந்த பாரதிராஜா "கண்களால் கைது செய்" படமெடுத்த பின் படப்பிடிப்பில் தந்த ஒத்துழைப்புக்காக அரசு சார்பு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கும் ஏனையோருக்கும் நன்றி எல்லாம் தெரிவிக்கவில்லையா. அந்த படத்தில் சனத் குணத்திலக்க நடிக்க வில்லையா? என் ஞாபகம் சரியாக இருந்தால் பதிவர் லோஷன் அண்ணா அந்நேரம் பாரதிராஜாவை பேட்டிக் கண்டிருந்தார்.

இது எல்லாம் கலை ஐயா தயவு செய்து இதை அரசியலாக்காதீர்கள் நாம் தமிழர்கள் வெறுப்பு என்றால் மிக ஆக்ரோஷமாகக் காட்டுகின்றோம். சில நேரங்களில் ரொம்பவும் குழைந்து உணர்வு ரீதியான அடிமைகளாய் மாறி விடுகிறோம். இது மட்டுமில்லாமல் கல் தோன்றி மண் தோன்றா என்கிற உயர் மனோபாவமும் இருக்கின்றது ( அல்லது இது மித மிஞ்சிய தாழ்வுச் சிக்கலின் பிரிதொரு வகையான வெளிப்பாடு) . தனியே தமிழரின் வரலாறு,சாதனைகள், என்பவற்றை அவர்களது உயர் மனோபாவத்தொடு ஒப்பிட்டு ஆய்வுக்குட்படுத்தினால் நகைப்புக்குரியதாக இருக்கும் என்பது என் எண்ணம்.

வேட்டைக்காரன் பிடிக்கவில்லையா அதை நிராகரிக்க அவரவருக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கும். பார்க்காமல் விடுங்கள். இவ்வாறான பிரசுரங்கள் எனக்கென்றால் உடன்பாடில்லை. கருத்து திணிப்புகள் நம் நிலைக்கு பிரதான காரணங்களில் ஒன்று. கிட்டத் தட்ட சுயச் சிந்தனையே மறந்து விட்ட நிலையில் இனியேனும் அவனை சிந்திக்க விடுங்கள் ஐயா. இதை விடுங்க சின்ன விடயம் அடுத்து ஜனாதிபதி தேர்தலில் பாருங்களேன் அவனுக்கு போடு இவனுக்கு போடுன்னு ஏக களேபரமாக இருக்கும்

அப்புறம் ஒன்று நானும் இராஜின் ரசிகன்தான் எனக்கு பிடித்த சிலப் பாடல்களின் தொடுப்பு. கீழே பாடல் மட்டுமல்ல காட்சியமைப்புகளைப் பாருங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறும்படம் போல அத்தனை அழகு. வரிகள் புரியா விட்டாலும் இசை மற்றும் காட்சிகள் பொருளுணர்த்தும். அதிலும் அந்த மூன்றாவது பாடலின் காட்சிகளை பாருங்களேன் எனக்கு ரொம்பப்பிடிக்கும். நான்காவது பாடல்தான் தங்கத் தாமரை ஆனது. இதிலே தினேஷ் கனகரத்தினம் அமைச்சர் புத்திரசிகாமணியின் மகன் Bone killer ஆகியோரும்தான் இதில் பங்கேற்றுள்ளனர் அப்ப அவர்களுக்கும் ஆப்பா?


http://www.youtube.com/watch?v=y7Rin2vAzSM

http://www.youtube.com/watch?v=oeOGAiz24RU

http://www.youtube.com/watch?v=TLigScK6C3g

http://www.youtube.com/watch?v=jHWlRsIKnv8

சனி, 12 டிசம்பர், 2009

ரஜினி என் பார்வையில் சிறந்த 10 படங்கள் பாகம் 2

நெற்றிக்கண்


சிவப்பு ரோஜாக்கள், சொல்லத்தான் நினைக்கிறேன் போன்ற படங்களில் கமல், மன்மதனில் சிம்பு என பல play boy பாத்திரங்கள் பார்த்திருப்போம். அவர்கள் இளமையும் சில அசாத்திய திறமைகளும் கொண்டவர்களாக அதில் சித்தரிக்கப் பட்டிருப்பார்கள். ஆனால் அறுபதைக் கடந்த ஒருவர் இளம்பெண்களை எல்லாம் மடக்குகிறார் என்ற கதைக்கு நம்பகத் தன்மையை ஏற்படுத்த வேண்டுமென்றால் அவர் எத்தனை அசாதாரணமான கவர்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும். அதற்கு நம்ம தலைவரை விட்டால் பொருந்திப் போகக் கூடிய இன்னொருவர் இருந்தால் சொல்லுங்கள்


நல்லவனுக்கு நல்லவன்


அதிரடி நாயகன் ரஜினி கொஞ்சம் அமைதியாகவும் நடித்திருப்பார். தலைவருக்கு வயதான வேடமும் கோட் சூட்டும் போட்டு விட்டால் ஒரு தனி மிடுக்கு வந்து விடும் அதற்கு இந்தப் படமும் விதி விலக்கல்ல. எதிர் நாயகனாக கார்த்திக். முத்துராமனும் போக்கிரி ராஜாவில் வில்லனாய் நடித்திருப்பார் அப்பா,மகன் இருவருமே ரஜினிக்கு வில்லனாகி இருக்கிறார்கள். தலைவருக்கு சிறந்த
நடிகருக்கான Film fair விருது கிடைத்த படம்.

தளபதி


தனிப்பட்ட ரீதியில் எனக்கு பிடித்த ரஜினிப் படம். பல ரஜினி படங்கள் அவருக்காக மட்டுமே பார்க்கத்தக்கது. இதிலோ மம்முட்டி,இளையராஜா,சந்தோஷ்சிவன்,மணிரத்னம் எனப் பெரும் படை. தலைவர் அதற்கு தளபதி. சினிமா ஒரு Visual media வசனங்கள் அல்லாமல் பல விடயங்கள் காட்சிகளிலேயே சொல்லப் பட வேண்டியது அவசியம். சிவாஜி காலத்தில் மேடை நாடகங்கள் அப்படியே எடுக்கப் பட்டாலும் அவ்வாறில்லாமல் ஒரு சினிமா பார்க்கும் உணர்வைத் தந்த தமிழ்ப் படம். பல காட்சிகளில் வசனமே இல்லாமல் Close up ஷாட்களில் வேறு தலைவர் நடித்திருப்பார்.சின்ன சின்ன முகப்பாவனைகளால் மட்டும். இந்த நடிகரை சரியில்லை என்று சொல்பவர்கள் மேலும் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

அண்ணாமலை


இப்போது பார்த்தாலும் Fresh ஆகா இருக்கும் படம். எப்படியும் முப்பது தடவைகளுக்கு மேல் பார்த்திருப்பேன். ஒரு commercial படம் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு சிறந்த உதாரணம். ஜிப்பா அணிந்து பட்டை அடித்த அந்த கெட் அப்பை எத்தனை பேர் கொலை வெறியோடு மீள போட்டு சந்தோஷப் பட்டிருக்கிறார்கள். 96 தேர்தலிலே தமிழ் நாட்டையே கலக்கிய கெட் அப் அல்லவா? சுரேஷ் கிருஷ்ணாவின் சிறந்தப் படைப்புகளில் ஒன்று. முதல் பாதி நகைச்சுவை பின்பாதி அதிரடி என சிறப்பாய் போகும். படத்தில் எதுவும் அவசியமின்றி எதுவும் இருக்காது. படத்தின் வேகத்திற்கு தடை ஏற்படுத்தக் கூடிய ரஜினி குஷ்பூ காதல் காட்சிகளை நகைச்சுவையாய் ஒரு சில காட்சிகளிலே சாமர்த்தியமாய் முடித்திருப்பார் இயக்குனர். அது எப்படி கல கலவென பேசும் அப்பாவித் தனத்தையும் பிறகு ஒரு சீரியசான முகத்தையும் இவரால் மட்டும் இத்தனை இலகுவாய் கொண்டு வர முடிகிறது. இந்த ரகசியத்தைப் பிடிக்கத்தானே பல வான்கோழிகள் சிறகு விரித்து ஆடுகின்றன. இதை எல்லாம் உணராதவர் போல பரத்தை வைத்து சுரேஷ் கிருஷ்ணா தன் படத்தை தானே கொலை செய்தது ம்ம்.

பாட்ஷா

Same Suresh krishna இப்போதெல்லாம் நிறைய நடிகர்கள் இந்தப் படப் பாதிப்பில் நடிப்பை மறந்து விட்டு கூட்டமாய் நடப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அண்ணாமலைக்கு சொன்னவை நிறைய இந்தப் படத்திற்கும் பொருந்தும். நிறைய பேரின் All time favourite இல் இந்தப் படம் கட்டாயம் இருக்கும். "ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" காலத்தை வென்ற பஞ்ச். ரகுவரன்,ரஜினி compination இல் காட்சிகள் அசத்தல் ரகம். ரஜினியை தெரியாத ஒரு குழந்தை படத்தைப் பார்த்தால் அடுத்த நாள் அதன் வாயில் ஆட்டோக்காரன் பாடல்தான்.

முதல் பாகம் கிளாஸ் என்றால் இரண்டாம் பாகம் மாஸ் என்று நினைக்கிறேன். இவ்வாறான கலவையான ரசனைகள் ஒவ்வொருவருக்கும் தேவைதான். ரஜினி ஒரு சிறந்த பூரணமான நடிகர் இன்றைய பிறந்த நாளில் அவரிடம் ஒரே விண்ணப்பம்.
மசாலாவையும் தாண்டி அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தக் கூடியவர் ரஜினிகாந்த். ஆரம்பத்தில் மசாலாப் படங்களிலேயே நடித்த அமிதாப் சூர்யவம்சத்துக்கு பிறகு தன் பாதையை மாற்றியது போல தலைவரிடம் இருந்தும் அவர் விருதுகளை வாங்கிக் குவிக்கும் அந்த அற்புதமான Second innings ஆரம்பிக்க வேண்டும்அவ்வளவே.

ரஜினி என் பார்வையில் சிறந்த 10 படங்கள்

ரஜினி


என்னதான் பதிவர்கள் வருத்தெடுத்தாலும் தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் இவர்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் தேவையில்லை. சினிமா பற்றிய தீவிரமான பிரக்ஞை இல்லாத காலத்தில் திரைப்படங்கள் எனக்கு அறிமுகமான ஆரம்ப கால கட்டத்தில் அப்பாவின் மடியிலமர்ந்து நான் திரைக்கூடங்களில் பார்த்த பல படங்களில் இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கும் பல படங்கள் இவர் நடித்தது. என் தந்தை காலமான பின் தியேட்டர் சென்று படம் பார்க்கும் வழக்கம் குறைந்து போனாலும் நான் வளர்ந்து நண்பர்களோடு மீண்டும் திரையரங்குகளுக்கு செல்லும் காலம் வந்த போது(கிட்ட தட்ட பத்து வருடங்களுக்கு பின்) பலரின் ஏகோபித்த தெரிவாக அதே பொலிவோடு அவரே திரையை நிறைத்திருந்தார்.

எல்லோரையும் போல ஆரம்ப காலக் கட்டங்களில் அவரது ஸ்டைல் நடிப்புக்கும் சண்டை காட்சிகளுக்கும் மட்டுமே நானும் ரசிகனாயிருந்தேன். இவரது படம் பார்த்து நண்பர்களுக்கு கதை சொல்வது அலாதியான சந்தோஷத்தை தருவதாக இருந்தது. சற்றே வளர்ந்து நடிகர்களின் உடல் மொழியையும் வசன வெளிப்படுத்துகையையும் ஊன்றி கவனிக்க தொடங்கிய காலத்திலும் ரஜினி எனக்கு ஒரு நல்ல நடிகராகவே காட்சி தந்தார்.

அப்படி அவர் நடிப்பால் என்னைக் கவர்ந்தப் பத்துப் படங்கள். படங்கள் வெளிவந்த கால வரிசைப்படி பிறகு தரத்தை வைத்து எல்லாம் தலைவர் படங்களை வரிசைப்படுத்த இயலுமா

மூன்று முடிச்சு


நம்பியார், P.S. வீரப்பா என் ரசிகர்கள் வில்லனைக் கண்டு பயந்திருந்த சந்தர்ப்பத்தில் மிக ஸ்டைலிஷாக குத்தல் பேச்சுக்களால் மூன்று முடிச்சில் ஸ்ரீதேவியையும் மிரட்டி ரசிகர் மனங்களை கொள்ளைக் கொண்ட முதல் வில்லன் இவராய்தானிருக்கும்.கொஞ்சம் வன்மம்,காமம்,பொறாமை,குற்றவுணர்வு,எப்போதாவது தலைதூக்கும் கொஞ்சமே கொஞ்சம் மனிதாபிமானம் எனக் கலவையான உணர்வுகளை கலந்துக் கட்டிஅடித்திருப்பார்


புவனா ஒரு கேள்விக்குறி


படமே நாம் எதிர்பார்க்காததுதான்
பிறகு பால் வடியும் முகமுடைய சிவகுமார் வில்லன் அதுவரை பெண்களை மிரட்டிய கருப்பு ரஜினி நல்லவர் படம் ஆரம்பிக்கும் போது ரஜினிதான் சிவகுமார் வேடம் செய்வதாக இருந்ததாம் அப்போது பெரிய நடிகரான சிவகுமார் சொன்னாராம் வில்லன் வேடமென்றால் இந்த மனுஷன் ஸ்கோர் செய்து விடுவார். அதை நான் செய்கிறேன் என. ஆனால் எல்லாம் எதிர்மாறாய் நடந்து விட்டது.

முள்ளும் மலரும்


இதுவும் தங்கைப் பாசத்தைப் பற்றிய படம்தான். ஆனால் பாசமலர் அபத்தங்கள் இதிலில்லை. இன்றளவும் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனராக கருதப்படும் மகேந்திரனின் படம். படம் வெளிவந்தக் காலத்தில் மகேந்திரன் சொன்னது ரஜினி அளவு இயல்பாக நடிக்கக் கூடிய நடிகர் இந்தியாவிலேயே கிடையாது. கையிழந்த ரஜினியை சரத்பாபு வேலையை விட்டு நிறுத்தும் போது கண் கலங்க குரல் பிசிற ஆனாலும் ஈகோவை விட்டுக் கொடுக்காமல் " ஒரு கையும் ஒரு காலும் இல்லனாலும் இந்த காளி பொழச்சுக்குவான் கெட்டப் பய சார் அவன்" என்பாரே இன்று ரஜினி வழியில் சூப்பர் ஸ்டார் ஆகிறோம் என்று சொல்லும் நடிகர்களில் யாரேனும் ஒருவர் இதைப் போல நடித்தால் ம்ம் வாய்ப்பிருப்பதாய் எனக்குப்படவில்லை

ஜானி


இதுவும் மகேந்திரன் படம்தான். ஆனால் முள்ளும் மலரும் போல் அல்லாமல் சில வர்த்தக சமரசங்கள் உண்டு. தன் தாய்க்காக சட்டத்துக்கு புறம்பாக,மனசாட்சிக்கு விரோதமாக காரியமாற்றும்,தன்னை ஒத்த ரசனைகளைக் கொண்ட ஸ்ரீதேவியை காதலிக்கும் மென்னுனர்வுகளைக் கொண்ட இளைஞன் ஜானியாகவும்
தனிமையில் உழலும், சுயநலம் மிகுந்த,கஞ்சத்தனமான, பெண்களை வெறுக்கும் வித்தியாசாகராகவும் தலைவர் இரு வேடங்களில் நுணுக்கமான வேறுபாடுகள் காட்டிநடித்திருப்பார்.
படத்தின் உச்சக்காட்சியில் ஸ்ரீதேவிக்கு தன் திருட்டுத் தனம் தெரியும் என்பதால் அவரை பார்க்கையில் வெட்கம் கலந்து சிரிப்போடு குனிந்துக் கொள்வார். ரிஷியில் சரத் இதை கொப்பி செய்ய முயன்றிருப்பார் அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் வெறுத்துப்போய்விடும்.

தில்லு முல்லு


இந்தப் படம் பார்க்க பிரத்தியேகமான மனநிலை எல்லாம் தேவையில்லை. எப்போது பார்த்தாலும் மனதில் குதுகலம் ஒட்டிக் கொள்ளும். இன்று வரை வெளியான மிகச் சிறந்த காமெடி படங்களில் இதுவும் ஒன்று. வசனங்கள் படத்தின் பெரிய பலம் கூடவே தேங்காய் ஸ்ரீனிவாசன். தலைவரின் Dialogue delivery மிகச் சிறப்பாய் இருக்கும்.அங்கங்கே மிகை நடிப்பு எட்டிப் பார்த்தாலும் comedy படத்தில் அதை தவிர்க்க முடியாது பலதடவை சலிக்காமற் பார்க்கச் செய்யும் படம்


ஒரு ஐந்து இதோ இருக்கிறது டைப் செய்து முடித்து அடுத்த பதிவாக இன்னும் சற்று நேரத்தில் பாகம் ரெண்டு

வியாழன், 10 டிசம்பர், 2009

இரயில் பயணங்களில்



தலைப்பு டி.ஆர் படப் பெயராக இருப்பதால் கரடியைக் கண்டவர்களைப போல ஓடி விட வேண்டாம்.

இது நம்ம கதை
நாம் என்னதான் நிகழ்காலத்தில் வாழ வேண்டுமென கூறிக் கொண்டிருந்தாலும் எதிர் காலத்தை பற்றி கனவு காண்பதிலும் இறந்த காலத்தை எண்ணிப் பார்ப்பதிலும் உள்ள சுகம் வேறெதிலும் இருப்பதாக தெரியவில்லை.

அதிலும் காதல் ஒருதலை, இருதலை ,முக்கோண அட கள்ளக் காதலாயிருந்தாலும் அந்தளவிற்கு மகிழ்ச்சி தரும் வேறெதுவும் இருப்பதாக தெரியவில்லை. நாம் Testosterone, oxytocin, என்பவற்றின் ஆக்கிரமிப்பில் கவலை மறந்திருக்கும் அந்த இனிமையான காலம்

அண்மையில் தனியார் வகுப்புக்கு Notes தயார் செய்ய பழைய A/L notes நோண்டிய போது ஒரு கொப்பியில் இருந்தது இந்த கவிதை(அப்பெல்லாம் இத அப்படிதான் சொன்னேன் இப்ப அது சரியான்னு நீங்க பார்த்து சொல்லுங்க )
இன்னமும் கொஞ்சம் இருந்தது இதற்கான வரவேற்பை பார்த்து அவற்றையும் மெல்ல பதிவிடலாம் என நினைக்கிறேன்.


அலாரம்
இன்றியே
அலறிப்
புடைத்து எழுந்தேன்

காலைக் கடன் தொடங்கி

அனைத்துமே வெகு அவசரமாய்

என் வீட்டு நிலைக் கண்ணாடிக்கோ

அன்று வேலைப் பளு அதிகம்

இன்று உன்னைப் பார்க்கப் போவதால்


அவசரமாகவே வந்துவிட்டேனோ

பார்க்கும் போதெல்லாம்

கடிகார முள் அதே இடத்தில்

அசையாமல்

காத்திருப்பும் சுகம்தான்

உனக்காக காத்திருப்பதால்


வலது தோளில் புத்தகப்பை
நிலத்தை அளக்கும் விழிகள்

எண்ணி எண்ணி அளவாய்

எடுத்து வைக்கும் அடிகள்

அன்னம் உன்னிடம்தான்

நடை பழகி இருக்கும்


நன்றாயிருப்பதாய் பொய்
சொன்னேன்
நீ நலம் விசாரிக்கும் போது

மலர்ந்த உன் முகம்

சிநேகமாய் வருடும் உன் புன்னகை

இசையாய் தாலாட்டும் உன் வார்த்தை

இன்னும் கொஞ்ச நேரம்
தொடரட்டுமே

உலகையே வென்ற கர்வம்
நான் பிடித்த ஆசனத்தில்

நீ அமர்ந்த போது

நிச்சயமாய் சொர்க்கம்
வெகு தொலைவிலில்லை

ரயிலோசை இரைச்சலாம்
யார் சொன்னது
எனக்கோ சங்கீதமாய்
இனிக்கிறது
உன் வார்த்தைகளுக்கு

பின்னணி இசைப்பதால்


உன் கைவிரல்களுக்கிடையில்
கசங்கிய கைக்குட்டையில்
கூட
சுருக்கங்கள் குறைவுதான்
உன் விழிவீச்சால் கசங்கிய

என் இதயத்தோடு ஒப்பிட்டால்

ஒவ்வோர் தரிப்பிலும்
என்
இதயமே நின்று போகிறது
உன்னோடு நானிருக்கும்

நொடிப்பொழுதுகள்

வேகமாய் கரைவதால்


நீ இறங்கப்போகும்
தரிப்பு
உனக்கும் வருத்தமா

உன் விழியில் விடை

தேடித் தோற்றேன்

எனக்கோ பெருங்கவலை

சந்தோஷமான நாளில் ஒன்று

சீக்கிரமாய் தீர்ந்ததால்


நீ கையசைத்து
விடைப்
பெற்றாய்
உன் தலை மறைந்த
அடுத்தக்
கணமே அவசரமாய்
பத்திரப் படுத்தினேன்

நீ ஆசனத்தில் போட்டமர்ந்த
காகிதத்தை

கட்டில் விரிப்பை நூறாவது
தடவையாகவும் சரிசெய்தேன்
இன்றைய நாளை
எண்ணிப்
புரண்டதில்
தூக்கம் கண்களிநின்று
தொலைதூரமாய் எங்கோ

ஆனாலும் படுத்திருந்தேன்

உன் நினைவுகளோடும்
கைகளுக்குள்
சிறைப்பட்ட
தலையணையோடும்

எட்டு வருடங்களுக்கு முன் எழுதியது. இதைப் பதிவிட முன் நண்பரொருவரிடம் காட்டினேன். அதைப் பார்த்து அவன் கேட்டான்.
"இப்போதெல்லாம் அந்த காலத்தை நினைக்க அபத்தமாய் இருக்குமில்லையா?"
அவனுக்கு சுஜாதாவின் வசனமொன்றைதான் பதிலாய் சொன்னேன்.
" VCR போல லைப்லயும் ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தா நல்ல இருக்கும்ல"


புதன், 9 டிசம்பர், 2009

தூக்கம் திருடிய கனவுக் கன்னியர் - ஒரு ஜொள் பதிவு பாகம் 2

ஏலவே எழுதிய தூக்கம் திருடிய கனவுக் கன்னியர் - ஒரு ஜொள் பதிவு இன் பாகம் இரண்டு மேலுள்ள இணைப்பை அழுத்தி கொஞ்சம் அங்கேயும் போய் பாருங்கள்.

5. Angelina Jolie


ஆரஞ்சு சுளை போன்ற உதடுகள் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள் பார்த்திருக்கிறீர்களா? அஞ்சலினா ஜூலியின் உதடுகள் அதை ஒத்தவை(ம்ம் ....). வீடியோ கேம் பாத்திரம் லாரா க்ரோப்ட் ஆக இவர் சாகசம் செய்யும் Tomb raider, தனது கணவர் பிரட் பிட்டுடன் நடித்த Mr & Mrs Smith, Beowulf,Wanted போன்ற படங்கள் ரசித்துப் பார்க்கக் கூடிய ரகம் இல்லை என்றாலும் ஜூலி க்காகப் பார்க்கலாம்.
அழகு மட்டுமில்லை மிகுந்த திறமையும் கொண்டவர். ஒரு முறை சிறந்த துணை நடிகைக்கான அகாடமி அவார்டும் பெற்றுள்ளார்.
அதையும் விட குறிப்பிட்டாக வேண்டிய விடயம் அவரது தாராள மனம். உடனே படத்தில் அவரது கழுத்துக்கு கீழே பார்வையை கொண்டு போக வேண்டாம். நான் சொன்னது நிஜமாகவே அவரது நல்ல மனதை UNHCR இன் நல்லெண்ணத் தூதுவராக உலகளாவிய அளவில் செய்யும் சேவைகளுக்காகவும் அறியப்படுகிறார்.


4. Katrina Kaif



பெரும்பாலும் என் லிஸ்ட்டில் உள்ள ஒரே Latest figure இவராய்த்தான் இருக்கும். மிகுந்த தயக்கத்துடன் சல்மான்கான் என் பதிவைப் பார்க்க மாட்டார் என்ற நம்பிக்கையின் பின்தான் இவரைச் சேர்த்தேன். பார்க்க கொஞ்சம் கூட இந்திய சாயல் இருக்காது. காஷ்மீரித் தந்தைக்கும் பிரித்தானிய தாய்க்கும் பிறந்தவர். என்னதான் சல்மானை இவருக்கு பிடித்திருந்தாலும் எனக்கேதோ இவர் அக்ஷய் குமாருக்கு ஏற்ற ஜோடியாகத்தான் படுகிறது. விக்ரம்தான் இவரை நீண்ட நாட்களாக தமிழுக்கு அழைத்து வரப்போவதாக சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். ம்ம் ஆனால் விஜய் அதிஷ்டக்காரர் குறைந்தபட்சம் கோகோகோலா விளம்பரத்திலாவது சேர்ந்து நடித்து விட்டார்தானே .


3.Madhuri Dixit


நான் என் ச்ச்ச்சின்ன வயதில் ITN தொலைக்காட்சியில் போடும் ஹிந்தி படங்களை பார்க்கத் தொடங்கிய காலத்தில் நிறைய படங்களில் இவர் அல்லது ஜூஹி சாவ்லாதான் இருப்பார்கள். ஜுஹியை எனக்கு பிடிக்கவே பிடிக்காது so இவர்தான் என் choice. இவர் அணில்கபூரோடு நடித்த படங்களில் எல்லாம் எங்கள் கமல்- ஸ்ரீதேவி போல ஒரு அன்னியோன்னியம் இருக்கும். தேவலோக மங்கையர் என்றெல்லாம் சொல்வோமல்லவா அதற்கு நிகரான ஒரு அழகு இவரிடம் உண்டு. ஓவியர் ஹுசைனும் என் கருத்தோடு உடன்படுவார் என நினைக்கிறேன். நாயகன் படத்தின் ஹிந்தி பதிப்பு பார்த்திருக்கீர்களா? வினோத் கண்ணாவுக்கு கமல் மேல் ஏதும் கோபமா எனத் தெரியவில்லை கிட்டத் தட்ட அந்தப் பாத்திரத்தை கொலை செய்திருப்பார். இருப்பினும் நாயகனில் கமல் செய்யாத ஒரு காட்சி இந்த படத்திலுண்டு(ஆனால் கமலோடு தொடர்புடையது). இந்தக் காட்சியில் மட்டும் மாதுரி டிக்சித்தொடு ஒன்றி நடித்திருப்பார். பார்த்தால் உங்களுக்கும் மாதுரியைப் பிடிக்கும். இன்னுமொன்று வினோத் கன்னாவுடன் இப்படி எல்லாம் நடித்து விட்டு பின் அவரது மகன் அக்ஷய் கன்னாவுடனும் ஜோடியாக நடித்தார்.


2. Monica Bellucci



சில அழகான நடிகைகள் ஆரம்பத்தில் மிகுந்த பிரமிப்பைக் கொடுத்திருந்தாலும் அவர்களை ஏதேனும் படங்களில் Topless ஆக பார்த்து விட்டால் அவர் மீதான ஆச்சரியம் அடங்கி விடும். Sean penn உடன் jennifer Lopez நடித்த U turn படத்தில் கண்ணிமைக்கும் நேரத்திற்கு அப்படி வந்த பின்னே எனக்கு Jennifer Lopez ஐயே பிடிக்காமல் போய் விட்டது.
ஆனால் பல படங்களில் இப்படி பலான பலான மாதிரி பார்த்த பின்னும் அலுக்காதவர் Monica Bellucci இத்தாலிய நடிகை.
Matrix என்றில்லை பொதுவாகவே Keanu reeves இன் Action படங்கள் என்றாலே எனக்கு அலர்ஜி Speed உட்பட. அதை விட Clive Oven இவரது Shoot em up படத்தை பார்ப்பதும் ஒன்றுதான் ஐந்து விஜய் படங்கள் பார்ப்பதும் ஒன்றுதான். அப்படியிருந்தும் அந்த படங்களை Fast foward செய்து செய்து சிலக் காட்சிகளையேனும் பார்த்திருக்கிறேன் என்றால் அது மோனிக்கா பெல்லுச்சிக்காக மட்டுமே. இதையெல்லாம் விட கொடுமை இவர் நடித்த சில இத்தாலி மற்றும் பிரெஞ்சு படங்களை வேறு பார்த்து தொலைத்திருக்கிறேன். அந்த வகையில் Malena குறிப்பிடத் தக்க ஒரு படைப்பு. நான் படத்தை பார்க்க முனைந்தது வேறு நோக்கத்துடன் என்றாலும் ஈற்றில் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியும் இருந்தது. Asterix and cleopatra Chanel Eye இல் அவ்வப்போது போடுவார்கள் இதை அவருக்காக மட்டுமில்லாமல் ஒரு குழந்தையின் மனநிலையோடு என் பிரியத்துக்குரிய அந்த காமிக்ஸ் கதாநாயகர்களுக்காகவும் பார்த்தேன். சிம்பு இவரை தமிழில் நடிக்க கூட்டி வருகிறேன் என்றார். பார்ப்போம் நடக்கின்றதா என்று. இவர் ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் இடையிலான Agnostic எனத் தன்னை அறிவித்துக் கொண்டவர். இத்தனை அழகை கடவுளால்தான் படைக்க முடியுமென்றால் பேசாமல்கடவுளை நம்பி விடலாம் எனத்தான் தோன்றுகிறது.



1. Meena



என்னிடம் ஒரு கெட்டப் பழக்கம். சில விடயங்கள் மனதுக்கு பிடித்து விட்டால் அது மாறுவதேயில்லை. பொதுவாக பத்து பதினொரு வயதுகளில் நமக்கு நடிகைகள் மேல் ஈர்ப்பு இருப்பதில்லை. அது Sigmund frued சொன்ன பாலியல் மறைநிலை பருவம் என்பதால் இருக்கலாம். அதிலருந்து மெல்ல நான் பதின்ம வயதுகளுக்குள் பிரவேசித்த போது என்னை கவர்ந்தவர் இவர்தான். அந்தக் கண்கள், ஹோம்லியான தோற்றம், அத்தோடு இருந்த ஏதோ சொல்ல முடியாத கவர்ச்சி இதெல்லாவற்றையும் விட அந்நேரம் வந்த தலைவர் படங்களில் இவர்தான் கதாநாயகி என்பனவெல்லாம் இவர் பிடித்துப் போகக் காரணங்கள். இன்று வரை மீள முடியவில்லை இவர் விழி வீச்சில் இருந்து. இப்போதெல்லாம் பரவாயில்லை முன்பெல்லாம் பத்திரிகைகளில் இவர் தொடர்பான கிசு கிசுக்கள் கண்டாலோ அல்லது இவர் கவர்ச்சியாய் நடித்திருக்கிறார் என்று செய்தி படித்தாலோ கஷ்டமாய் போய்விடும். ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய விடயம்தான் ஒரு நடிகை மேல் ஏன் இத்தனை Possessive ஆக இருக்கின்றோம் என்பது.
நிச்சயம் திறமையான நடிகைதான் ஆனால் நடிப்பதை விடவும் குழந்தைத்தனமாக பேசி ஒரு கவர்ச்சிப் பதுமையாக வலம் வருவதில் மாத்திரமே திருப்தி அடைந்து விட்டார். ரிதம் படத்தில் இவர் பாத்திரமும் நடிப்பும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆரம்பக் கால சேரன் படங்களிலும்.

திங்கள், 7 டிசம்பர், 2009

என்னை ஏமாற்றாத சாரு


இலங்கையர்களுக்கு இப்போதெல்லாம் இதைத் தவிர்த்தால் பேச எதுவுமே இல்லை போலும். அந்த அளவிற்கு அனைத்து தரப்பினரிடையேயும் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் பற்றிய எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறியிருக்கிறது. இந்தியத் தலைவர்களை பார்த்து கூல் செய்ய முயன்றிருக்கிறார் ஜெனரல் பொன்சேகா. இங்கே இன்று மகிந்த எஸ்பியின் வீட்டுக்கு போயிருப்பது கட்சித் தாவலொன்றுக்கான அறிகுறிகளை காட்டியிருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அரசு எதிர்பாராத பல அதிரடிகள் அடுத்த வாரம் அரங்கேறும் எனக் கூறியிருப்பது நிஜமா அல்லது புலி வருது கதையா என்பது இனிதான் தெரியும்.



புலி வருது என்றவுடன்தான் ஞாபகம் வருகிறது. எந்த புலியும் வராமலே மாவீரர் தினம் நடந்து முடிந்திருக்கிறது. தமிழக பத்திரிகைகள் இனி வேறு விதமான உளவுத் தகவல்கள் தர வேண்டியதுதான். அவர்கள் வியாபாரத்திற்கு சீமான் பக்கப்பலமிருப்பார் என நம்புகிறேன். சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு தலைவர் பெயர் வைத்தாராம். என்ன கொடுமை சீமான் இதெல்லாம்? தயவு செய்து மக்களின் உணர்வுகளை இப்படி மலினப் படுத்தி ஆதாயம் தேடாதீர்கள். திராவிடம் பேசும் மஞ்சள் துண்டு தலைவர்கள், தலித்துக்களுக்காக முழங்கிய சிறுத்தைகள் என பலரையும் நம்பி ஏமாந்த பின் இவர்.


மஞ்சள் துண்டுத் தலைவர் அரசியல் வாழ்க்கையில் இருந்து ஓய்வுப் பெறப் போகிறாராம். பெரும்பாலான தனது இலக்குகளை எட்டியிருப்பதாக தெரிவித்திருக்கிறார். ம்ம் ஒரு மகன் மத்திய அரசில் அமைச்சர், மகள் எதிர்காலத்தில் அமைச்சராக வாய்ப்புள்ள பாராளுமன்ற உறுப்பினர், ஒரு மகனை தமிழக மக்களுக்கென தாரை வார்த்தாகி விட்டது, மருமகனின் பிள்ளைகள் இந்தியாவின் முக்கிய புள்ளிகள் ஆமாம் இதெல்லாம் ticket இல்லாமல் train ஏறி வரும் போதே Plan பண்ணி வந்ததா? இல்லை பிற்காலத்தில் உண்டானா ஆசையால் விளைந்ததா?


"அளவுக்கதிகமா ஆசை படுற ஆம்பிள்ளை நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை" என்றார் தலைவர். மண்ணாசை,பொன்னாசை கூட பரவாயில்லை பெண்ணாசையால் நொந்து நூடுல்ஸ் ஆன காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகர் தேவநாதன் பற்றி அறிந்திருப்பீர்கள். கருவறையில் பெண்களுடன்ஆபாசமாக இருந்ததோடு அதை செல்போனில் படமெடுத்து பிறகு பார்த்து ரசித்திருக்கிறார். பொதுவாகவே நம்ம சாமிகளுக்கு கொஞ்சம் கிளு கிளு உணர்வு ஜாஸ்திதான். புராணக் கதைகளை படியிங்களேன் Straight தொடங்கி incest வரையான பலான கதைகள் ஏராளம். என்ன சொல்லி என்ன இனி மேலும் நம் பெண்கள் சாமி புள்ளை வரம் கொடு என்று யாரேனும் ஒரு சாமி பின் போகத்தான் போகின்றார்கள்.


நான் சொன்ன ஒரு விடயம் பலித்திருக்கிறது. "பா" பாடல்கள் பற்றிய என் பதிவில் நிச்சயம் இந்த இசையை சாரு மட்டம் தட்டி எழுதுவார் என எழுதியிருந்தது பலித்தே விட்டது( ஆமா இதை ஊகிக்க பெரிய தீர்க்கதரிசனம் எல்லாம் வேணுமாக்கும்). ஆனால் நானே எதிர்பார்த்திராத ஆச்சரியம் அவரது நேற்றைய பதிவில். கிட்டத் தட்ட ஒரு நல்ல சிறுகதையின் முடிவில் வரும் Twist ஐப் போல. நந்தலாலாவில் இளையராஜாவின் இசை அவருக்கு ஆச்சரியமோ இல்லையோ அவர் பதிவை வாசித்த போதோ எனக்கு பெரும் ஆச்சரியம். இளையராஜா தவிர்ந்து சாருவின் ரசனையில் எனக்கு அபார நம்பிக்கையுண்டு. அதனடிப்படையில் ஏலவே மிஷ்கினில் கொண்டிருந்த நம்பிக்கையை அதிகப்படுத்தி முதலில்கமலும் இப்போது சாருவும் படம் பார்க்கும் ஆவலை அதிகப் படுத்தியிருக்கிறார்கள்.

வியாழன், 26 நவம்பர், 2009

முத்தம்


பதிவிட ஏதும் இல்லாததால் இது
குசும்பன் பாணியில் சொல்வதென்றால் Enter தட்டி தட்டி ஒரு கவிதை(?!)

உன் இதழ்களைத்தான் முத்தமிட
நினைத்தேன்

ஆனால் என் உதடுகள்

தினம் ஷ்பரிசிப்பதோ

சிகரட் பில்டரைத்தான்


Related Posts with Thumbnails