செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

அடித்து துவைக்கவேனும் ஒரு காதலி - My sassy girl


காதலித்திருக்கிறீர்களா? இல்லையென்று சொல்லும் வெகு சொற்பமானவர்கள் இங்கேயே கழண்டுக் கொள்ளுவது உத்தமம். எஞ்சியவர்களில் சில பேர் காதலை ப்ரொபோஸ் செய்யும் முயற்சியில் இருந்த போது காதலி லேசாக முறைத்ததற்கே "போடி நீயும் உன் முகரையும்" என்று இந்தப் பழம் புளிக்கும் கதையாய் திரும்பி நடையைக் கட்டியவர்களா? இந்தப் படம் உங்களுக்குப் பைத்தியக்காரத்தனமாய் தோன்றலாம் (அதுதான் உண்மையும் கூட).

இப்போது எஞ்சியிருப்போரைப் பற்றிதான் எனக்குத் தெரியுமே. ஒரு நாள் சிரித்து இனிக்கப் பேசும் காதலி (அதாவது நீங்களாக சொல்லிக் கொள்வது) மறுநாள் நீங்கள் யாரென்றே தெரியாதது போல இருக்கும் பார்வையின் மர்மம் புரியாமல் தலையைப் பிய்த்துக் கொள்வீர்கள். அவளது குறைந்த பட்ச அங்கீகாரத்துக்காக நீங்கள் செய்யும் காரியங்கள் அவளால் வெகு எளிதாக அலட்சியப் படுத்தப்படும் போது சொரணை என்பது கொஞ்சமாவது எட்டிப்பார்க்க வேண்டுமே ம்ஹ்ம் அசடு வழிய மறு நாளும் தொடர்வீர்கள். திடிரென I LOVE YOU என SMS வரும் அவளோடு செட்டில் ஆகும் வாழ்க்கைப் பற்றி கலர் கலராய் கனவுகள் கண்டு விட்டு அவளிடம் செல்லும் போது "அய்யய்யோ இது அவருக்கு அனுப்ப வேண்டியது சொறி" என ஒற்றை வார்த்தையில் முடிப்பாள். இத்தனைக்குப் பிறகும் குடித்தழிவதும் புகை வளையங்களாய் ஊதித் தள்ளுவதும் நீங்கள்தானே ஒழிய அவளை வெறுக்கவே முடியாது. ஏன் என்று மனதிற்குள் கேட்டுப் பார்த்தால் காரணம் காதல் என்றுதான் தோன்றும் இதையும் " இல்லப்பா காதலை எல்லாம் உணர நீ இன்னும் வளரனும் இது வெறும் Infatuation " என்று சொல்லி விட்டு அவளுக்கு சரியான காலத்தில் வந்தக் காதலை கொண்டாடிக் கொண்டிருப்பாள். இத்தனைக்கும் பிறகு அவளை என்ன செய்ய தோன்றும்????? வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் அதிகமாய்க் காதலிக்கலாம்.

இதேதான் நடக்கிறது நம்ம ஹீரோ Gyeon-woo வுக்கும். பெற்றோருக்கு கட்டுப்பட்ட அமைதியான சுபாவம் கொண்ட அப்பாவியான இளைஞன். ரயில் நிலையமொன்றின் platform இல் நன்றாக குடித்து விட்டு தள்ளாடிய படி ரயிலில் அடிபடப் போகும் இளம்பெண்ணை தெரியாத்தனமாய் காப்பாற்றுகிறான். ரயிலுக்குள்ளும் அடாவடியாய் நடப்பவளிடமிருந்து தள்ளியே நிற்கிறான். இருந்தாலும் விதி விளையாடுகிறது. இவனைப் பார்த்து Honey என சொல்லி விட்டு மயக்கமாகிறாள். பிடித்தது ஏழரை சனி எல்லோரும் இவனை அவளது காதலன் என நினைப்பதால் உப்புமூட்டை தூக்கி கொண்டு போய் ஒரு லொட்ஜில் அவளுடன் தங்குகிறான். அத்தோடு விட்டால் பரவாயில்லை.

அடுத்தடுத்த
நாட்களில் இவனை தேடி வந்து இம்சிக்கிறாள். அவள் எழுதிய திரைக்கதைகளை கஷ்டப்பட்டாவது வாசிக்க வைப்பது. அவளது வகுப்பறைக்கு வந்து பூ கொடுக்கச் சொல்வது இப்படி கட்டாயப் படுத்தி செய்ய வைக்கிறாள். மறுத்தால் ரொம்ப சிம்பிள் அடி உதை துவைத்தெடுத்து விடுவாள். அவளது ஹை ஹீல்ஸ் காலனியை இவனை அணியச் செய்து நடு ரோட்டில் தன்னைத் துரத்திப் பிடிக்கச் சொல்கிறாள். அடிப்பதை பந்தயமாக கொண்டு ஒரு போட்டி. முதலில் அவள் தோற்க செல்லமாய் நெற்றியில் சுண்டுகிறான். அடுத்து இவன் தோற்க அத்தனை பேர் முன்னிலையிலும் இவன் காலரைப் பிடித்து இரண்டு கன்னத்திலும் மாறி மாறி பளார் பளார். பேசாமல் விட்டுத் தொலையலாம்தானே நம்மைப் போலவே அவனும் நினைத்தாலும் முடியவில்லை காரணம் நான் மேலே சொன்ன அந்தப் பாழாய்ப் போனக் காதல்.

பிறிதொரு நாளில் பெற்றோர் அவளுக்கு பார்த்து வைத்திருப்பவனோடு Dating சென்ற இடத்தில் இவனும் வர அவள் பாத்ரூம் போன நேரம் பார்த்து இவனிடம் அவளைப் பற்றிக் கேட்கும் மாப்பிளையிடம் அவளுக்குப் பிடித்தமானவனாய் இருக்க 10 Rule களை சொல்கிறான். அடி வாங்கினாலும் வலிப்பதை காட்டிக் கொள்ளாதே, வலிக்கா விட்டால் வலிப்பதை போல நடி இத்யாதி இத்யாதிகள் அதைக் கேட்டு உருகிப் போகின்றவள் இவனைத் தேடி ஓடுகிறாள்.(பார்த்தது போல் இருக்கா இதைத்தான் SMS இல் சுட்டு இருந்தார்கள்). இவன் மேல் தனக்கும் பீலிங்க்ஸ் இருக்கா என குழப்பமாய் இருப்பதாய் சொல்பவள் தான் அவனுக்கு சொல்ல விரும்புவதையும் அவன் தனக்கு சொல்ல விரும்புவதையும் கடிதமாய் எழுதி ஒரு முட்டை வடிவ போத்தலில் இட்டு மலையுச்சி ஒன்றின் மேலிருக்கும் மரத்தின் கீழ் புதைக்கிறார்கள். இரண்டு வருடம் கழித்து வந்து வாசிப்பதாயும் அப்போதும் ஏதேனும் பீலிங்க்ஸ் மிச்சமிருந்தால் காதலிப்பதாயும் ஏற்பாடு. இரண்டு வருடம் கழித்து பார்த்தால் ஹீரோ மட்டும் வந்திருக்க அவளைக் காணோம். பொறுமையிழப்பவன் கடித்தத்தை எடுத்துப் படித்தால் இறந்துப் போன அவளது முன்னாள் காதலன் போல இவன் இருந்ததால்தான் Honey என்றாளாம். அவனுக்கு கொடுத்த இம்சைகளெல்லாம் தன பழைய காதல் ஞாபகங்களை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ளத்தானாம். அவன் அப்படி எல்லாம்தான் அவர்கள் காதலிக்கும் காலத்தில் செய்தானாம். "என்னா கொடுமை சரவணன் இதெல்லாம்" என நாம் சந்திரமுகி பிரபு கணக்காய் தலையிலடித்துக் கொள்ள அதற்கப்புறம் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதை Youtube இலோ வேறேதும் தளத்திலேயோ 2001 ஆம் ஆண்டு வெளிவந்த My sassy girl கொரியத் திரைப்படத்தைப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஹாலிவுட்,பாலிவுட் அட நம்ம தமிழ்ப்படம் அளவுக்கு கூட ஒரு ரிச்னெஸ் இருக்காது. ரொம்ப யதார்த்தமான கதையோ அல்லது உயர்ந்த கலானுபூர்வ அனுபவத்தைத் தரும் படைப்போக் கிடையாது. புனிதமெனக் கூறப்படும் காதலின் மகத்துவம் கூறி பார்வையாளர்களை உணர்ச்சிவசப் படச் செய்யும் இன்னுமொரு மெலோட்ராமா. மிகையுணர்வை வெளிக்காட்டும் நடிப்பு, கொஞ்சமும் யதார்த்தமற்ற காட்சிகள், பார்வையாளனை திருப்திப் படுத்தவெனவே திணிக்கப் பட்ட திருப்பங்கள், இறுதியில் சுபம் என ரொம்பவும் வழமையான படமாயிருந்தாலும் அதெல்லாம் படம் பார்த்து முடிந்து யோசித்தால் மட்டுமே உறுத்துகிறது. மற்றும் படி படம் ஆரம்பித்து முடியும் வரை உதட்டோரம் சிரிப்போடு பார்த்து கொண்டிருந்த எனக்கு இறுதியில் தோன்றியது ச்சே இப்படி அடித்து துவைக்கவேனும் ஒரு காதலி இருந்திருக்கலாம். ஒருவேளை படத்தின் வெற்றியும் இதுவாய் இருக்கலாம்.

படம் பார்க்க விரும்புவோர் கட்டாயம் பாருங்கள் ஒரு நல்ல டைம் பாஸ் படம். அய்யய்யோ கொரியன் படமா எனக்கு அவங்க மூஞ்சே பிடிக்காது, சப் டைட்டில் படிக்கிறதா, படம் பார்க்கிறதா எனவெல்லாம் அங்கலாய்ப்போர் 2008 இல் வந்த இதன் ஆங்கில ரீமேக் பார்க்கலாம். Elisha cuthbert நடித்தது நான் பார்த்ததில்லை இருந்தாலும் ஒரிஜினல் அளவு இல்லை என்பது நண்பர்கள் கருத்து.

இப்படியும் ஒரு தமிழினம் 1



தமிழனுக்கென்று ஒரு தேசம் இல்லையாயினும் இன்று உலகெங்கும் அவனில்லாத நாடே இல்லை எனுமளவுக்கு பரந்து வாழ்வது நம்மெல்லோருக்கும் தெரியும். தமிழகம் உலகத் தமிழரனைவரதும் தாயகம். பக்கத்திலேயே ஈழத்தில் தமிழர் நிலை எல்லோரும் அறிந்தது. ஆங்கிலேய ஆட்சியில் கரையோரங்களை அண்டி அமைந்த கிறிஸ்தவ மிஷனரிகளின் கல்விக்கூடங்களை சரியாகப் பயன்படுத்தி கல்வியின் மூலம் உயர்நிலைக்கு வந்து இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் உயர் நிலையில் இருந்தவர்கள் சுதந்திரத்தின் போது சரியாக தமக்குரியதைப் பெற்றுக் கொள்ளாமல் தவற விட்டு பின் பெரும்பான்மையினரின் சதி புரிந்து, விட்ட தவறை திருத்த முயன்றாலும் முடியாது, முதலில் அகிம்சை வழியிலும் பின் ஆயுதப் போராட்டம் மூலமாகவும் ஞாயமாய் தமக்குரிய அதிகாரத்தை பெற முயன்று, இயலாமல் இன்று நேர்ந்திருக்கும் அவலம் உங்களெல்லோருக்கும் தெரியும்.

ஆனால் அதிகாரத்திற்காய் போராடிய ஈழத் தமிழர் அல்லாது இதே இலங்கையில் வாழும் அதிகாரத்திற்காய் அல்லாது அன்றாடம் சோற்றுக்கே அல்லாடும் மலையகத் தமிழினம் பற்றி எந்தளவு அறிந்துள்ளீர்கள். 90 வீதத்திற்கும் மேல் எழுத்தறிவுள்ள தேசத்தில் தற்குறிகள் அதிகம் உள்ள பிரிவினர் என புள்ளி விபரங்கள் சொல்லும் பிரிவைச் சார்ந்த ஒருவன் என்ற முறையில் எங்களைப் பற்றியும் கொஞ்சம் சொல்லலாம் என விழைகிறேன்.

ஈழத் தமிழர் போல் எமக்கு இலங்கையில் நூறாண்டுகளாய் நீடித்த நெடிய வரலாறு இல்லை. ஒரு இருநூறு வருடங்களுக்கு முன்னர் ஆங்கிலேயரால் இங்கு கோப்பி,தேயிலை என்பன பயிரிடப்பட்ட போது கூலியாட்களாய் தமிழகத்தின் தென் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள். இவர்களை இங்கு கொணர்ந்த விதம் பற்றி ஒரு கதை சொல்வர் தேயிலைத் தூரின் கீழே மாசியும் தேங்காயும் இருக்கின்றதெனக் கூறியே இவர்கள் இங்கே வரவழைக்கப் பட்டர்களாம். இதன் உண்மைத்தன்மை எப்படியானதாயிருந்தாலும் சற்று மிகைப்படுத்தியேனும் அவர்களது அப்பாவித் தனத்தையே இது சொல்கின்றது எனலாம்.

மலையகத்தவரின் வாழிடம் உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம். வெள்ளைக்கார துரைமார் குதிரைகளைக் கட்டப் பயன்படுத்திய குதிரை லாயத்தில் நம் மக்கள் ஒடுங்கிப் படுப்பதைக் கண்டு இதையே அவர்களின் குடியிருப்பாக்கி விட்டனர் என்றும் ஒரு கதையுண்டு. இந்த லயன் காம்பராக்கள் என்று அழைக்கப் படும் இக்குடியிருப்புகள் ஏதோ சில தசாப்தங்களுக்கு முந்தியதல்ல. பெரும்பான்மையானோரின் வாழ்க்கை இன்னும் இந்த லயன்களில்தான்.

இந்த ஹைக்கூவை வாசித்துப் பாருங்கள் மலையகத்தின் பிரபல கவிஞர்களில் ஒருவரான சு.முரளிதரன் எழுதியது நான் ஆசிரியப் பயிற்சி பெற்றக் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி. சுஜாதா கூட கற்றதும் பெற்றதுமில் இவரது கவிதையொன்றை குறிப்பிட்டிருப்பார்.
இதுதான் லயன்களில் நம்மக்களின் வாழ்க்கை

போதுமான ஆட்களேறியும்
புறப்படவில்லையே
புகையிரதம்!

லயன்கள்
.


நேற்றைய என் பதிவுக்கு அனானியாக வந்து பின்னூட்டமிட்டவருக்கே நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் ஏன் உங்கள் மக்களின் அரசியல் அபிலாஷைகள்,வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், கல்வி போன்றவை பற்றி பதிவிடக் கூடாது என ஞாயமாக கேட்டிருந்தார். அதைப் படித்தப் பின் சொரணை வந்து அவசரமாய் டைப்பியது. ஆக இந்த வாரம் மட்டுமில்லாமல் தொடர்ந்தும் நம் மக்களின் வாழ்வாதரப் பிரச்சினைகளை பதிவுகள் வாயிலாக வெளிக்கொணர எண்ணியுள்ளேன். வந்துப் பார்ப்பதோடு நில்லாமல் மலையகத் தமிழர் பற்றி அறிந்திராத உங்கள் நண்பர்களுக்கும் அறியத் தந்தால் மகிழ்வேன்.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

யாழ்தேவி,கோவா,தமிழ்ப்படம் இன்னும்பிற

இந்த வாரத்திற்கான யாழ்தேவியின் நட்ச்சத்திர பதிவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறேன். ஏதோ கிறுக்கிக் கொண்டிருக்கும் எனக்கும் இவ்வங்கீகாரத்தை தர முன்வந்த யாழ்தேவி நிர்வாகத்திற்கு முதற்கண் நன்றிகள். நாளொன்றின் பெரும்பாலான நேரம் ஆணி பிடுங்குவதிலேயே கழிவதில் பதிவிட இப்போதெல்லாம் நேரம் கிடைப்பது மிகவும் அரிதாகவே இருக்கின்றது. அதுவும் இல்லாமல் இப்போதெல்லாம் ஏதேனும் எழுத அமர்ந்தால் ஒன்றும் தோன்றாமல் வெறுமையாக இருக்கின்றது. இருந்தாலும் ஏதோ எழுதி ஒப்பேற்றலாம் என்ற நம்பிக்கையோடு சவாலை சந்திக்கத் தயாராகி இருக்கின்றேன். கொஞ்சம் வந்து வாசித்து என்னை செப்பனிட உதவுவீர்கள் என நம்புகிறேன்.

கோவா, தமிழ்ப்படம் இரண்டும் பார்க்கக் கிடைத்தது. இரண்டுமே இலங்கையில் அருகாமையில் எத்திரையரங்கிலும் திரையிடப் படாமையால் டிவிடியில்தான் பார்த்தேன். அசல் இங்கே திரையிடப் பட்டிருப்பினும் ட்ரைலர் பார்த்த போது ஏலவே ரஜினியின் பில்லாவை ரீமேக் செய்த அஜித் மீண்டும் தான் நடித்த பில்லாவை ரீமேக் செய்திருப்பதாய் தோன்றியதால் தவிர்த்து விட்டேன்.

கோவா அத்தனை அருமையான படம் இல்லை என்ற போதிலும் நல்லதொரு டைம் பாஸ் படம். முதற் பாதிக் கிராமக் காட்சிகள் சுவாரசியம். பின்பாதி மகா இழுவை,அறுவை அதிலும் சிநேகா தேவையே இல்லாத Extra fitting . படத்தின் ஆச்சரியம் சம்பத். இன்னுமொரு பிரகாஷ்ராஜ் தமிழ் சினிமாவுக்குத் தயார் என நினைக்கிறேன். முன்னவர் போல அவ்வப்போது மிகையாய் நடிக்காமல் இருந்தால் சரி. அதிலும் இதுவரை தமிழ் சினிமா பேசத் துணியாத விடயத்தை தொட்டமைக்காகவும் அதை நாகரீகமாய் படமாக்கி இருந்ததற்காகவும் வெங்கட்ப்ரபுவுக்கு வாழ்த்துக்கள். நண்பர் ஒருவர் அவரும் வீட்டில்தான் பார்த்திருக்கிறார் ரொம்ப சங்கடமாய் போய்விட்டதாய் சொன்னார். ஒரு வாரத்திற்கு முன்னர்தான் என்னுடைய Forrest gump பற்றிய பதிவைப் பார்த்து விட்து எனக்கு philadelphia தான் பிடிக்கும் என்று சொன்னவர் அவர். மாமியார் உடைச்சா மண்குடம் பழமொழிதான் ஞாபகம் வந்தது. ஆனாலும் சென்னை 28 இல் நாம் பார்த்த இயல்பான இளைஞர்கள் இங்கு இல்லை ரொம்பவும் செயற்கையாய் இருக்கிறது படத்தோடு ஒன்ற முடியவில்லை.

தமிழ்ப் படம் ம்ம் அருமை. ஆனால் இதனால் தமிழில் மசாலா படங்கள் குறைந்து விடுமெனத் தோன்றவில்லை. இன்னுமொன்று இப்படம் என்னை போன்ற சினிமாப் பைத்தியங்களுக்கு சரி அட இது அதைதானே சொல்றான் என ஒப்பிட்டு சிரிக்க. நிறைய சினிமா பார்க்காதவர்களோ அல்லது தமிழ் சினிமாவின் வழமையான க்ளிஷேக்களை உணர்ந்திராதவர்களோ படத்தை ரசிக்க முடியாது. படத்தில் தனித் தனியே ஒவ்வொருக் காட்சியும் மிகுந்த பரவசத்தைக் கொடுத்தாலும் முழுமையாக படம் ஒரு நிறைவைக் கொடுக்காத உணர்வு. சில வேலை எனக்கு மட்டுமாய் இருக்கலாம்.

அப்படியே அடுத்த தேர்தலும் வந்து விட்டது. புதுமுகங்கள் நிறையப் பேர் ஆளுங் கட்சி சார்பில் களமிறங்க இருப்பதாகத் தெரிகிறது. அதில் பிரபலங்களும் அடக்கம் சனத் ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுசந்திகா ஆகியோர் போட்டியிட தயாராகி உள்ள நிலையில் முரளிப் பற்றியும் பேசப்படுகிறது. ஆளுங் கூட்டணியில் போட்டியிட்டால் தமிழனும் போடமாட்டான் தமிழனாய் பிறந்த பாவத்திற்காய் சிங்களவனும் போடமாட்டான். வேண்டாமே முரளி எதற்கு வீணாக தோற்று பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்த வரை கிரிக்கெட் விளையாடுவோம். முடியாதக் காலத்தில் டொக்டர் அம்மாவின் ஊருக்கு போய் ஏதேனும் கிரிக்கெட் அகாடமி வைத்து பிழைத்துக் கொள்ளலாம்.

வேலைக்கு போகும் அவசரத்தில் இந்த அதிகாலையிலேயே பதிவிடுகிறேன். இனி மீண்டும் இரவு ஒன்பது மணியளவிலேயே இந்தப் பக்கம் வரமுடியும். வந்துப் பார்க்கும் போது பரவாயில்லை நமக்கும் பின்னூட்டம் வருது எனுமளவுக்கேனும் பின்னூட்டங்கள் இருக்கும் என நம்புகிறேன்.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

ஒரு ஸ்கூல் மாணவனின் காதல் கவிதைகள்

பள்ளிப் படிப்பில் மட்டுமே மூழ்கியிருக்கும் ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் இன்றைய காதலர் தினத்தை சரியாக பயன்படுத்த நினைத்து எழுதிய சில கிறுக்கல்கள். success ஆகும்னு நினைக்கிறீங்க!

நியூட்டனின் மூன்றாம் விதி

சரியாய்த்தான் இருக்கிறது
நியூட்டனின் மூன்றாம் விதி
அளவற்ற என் காதலுக்கு
சமனாய் மட்டுமல்ல
எதிராகவும்
வெறுப்பைத்தானே உமிழ்கிறாய்


சமாந்தரக் கோடுகள்

நெருங்கியும் வராமல்
விலகியும் போகாமல்
அப்படியே தொடர்கிறாய்
நமக்கிடையேயான இடைவெளியை
சளைக்காமல் தொடர்கிறேன் - நானும்
முடிவிலியிலேனும் சேரும்
சாத்தியத்தை உத்தேசித்து

Survival Of fittest

வகுப்பில் மிகையாகவே இருந்தோம்
உன் பின்னால் சுற்றுவோர்
உன்னைக் கவர
நாம் எடுக்கும் முயற்சியில்தான்
எத்தனை மாறல்கள்
உன்னை அடைவதற்கான
காதற் போட்டியில்
தக்கவன் அவனென்ற உன் முடிவில்
சொல்லவும் திராணியற்று
தகாததாய் மடிந்தது
என் ஊமைக் காதல்

திங்கள், 18 ஜனவரி, 2010

என்னைப் பாதித்த சினிமா Forest Gump

மிகத் தாமதமாக எழுதும் Forest gump படத்தைப் பற்றிய என் கருத்துக்களின் இரண்டாம் பாகம் இது. இப்போது முதலில் வாசிப்பவர்கள் இதன் முதற்பாகத்தையும் அப்படியே வாசித்து விடுங்கள்.


ஹாலிவுட் நடிகர்கள் எனும் போது நமக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த ரசிகர்களில் ஒரு சாரார் சீன் கானரி யை சிலாகிக்கும் அதேவேளை நடிப்பில் இவர்களை விஞ்ச யாருமில்லை என மார்லன் பிராண்டோ,ராபர்ட் டீ நீரோ, அல்பசினோ ஆகியோரைப் போற்றும் பிறிதொரு கூட்டத்தினரும் இருப்பார். மேற்சொன்ன ஒருவருக்கும் சற்றும் குறையாத நடிகர்களில் ஒருவராகவே நான் டோம் ஹான்க்சை காண்கிறேன். மேற்சொன்னவர்களின் பெரும்பாலான படங்களை நான் பார்த்ததில்லை. படத்தில் பாத்திரமாகவே மாறி விட்டார் என்று சொல்வதன் முழுமையான அர்த்தம் எனக்கு அப்போதுதான் புரிந்தது. இத்திரைப்படம் வெளிவந்த அதே வருடத்தில்தான் The shawshank redemption,Pulp fiction போன்ற படங்கள் வெளிவந்தது. இம்மூன்று படங்களில் எனக்குப் பிடித்த படம் The shawshank redemption. Pulp fiction முதற்றடவை புரியவில்லை. அண்மையில் பார்த்த போதும் அந்த கதை சொன்ன உத்தி அடடா என்ற பரவசத்தை படம் பார்த்து முடிந்த அந்தக்கணத்தில் ஏற்படுத்தியதே தவிர மனதை எல்லாம் தொடவில்லை. சில நேரம் எனது ரசனையின் போதாமையால் இருக்கலாம். எனினும் அம்மூன்று படங்களிலும் நடிப்பில் கவர்ந்தவர் Tom hanks தான். சின்ன சின்ன அசைவுகளிலே ஒரு அபார நடிப்பை அவர் வழங்கியிருந்தார்.பொருத்தமாக அந்த வருடத்திற்கான அகாடமி விருதும் அவருக்கே தரப்பட்டதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.


ஏலவே இறந்துப் போயிருந்த அமெரிக்க அதிபர்கள் மூவர் இந்தப் படத்தில் தம் நடிப்பு பங்களிப்பை வழங்கியிருந்தனர். கணணி வரைகலை நிபுணர்களின் உதவியோடு. இதே நுட்பம்தான் இந்தியன் படத்தில் நேதாஜி கமலுக்கு பதக்கம் அணிவிப்பதாக வரும் காட்சியில் பயன்பட்டது என நினைக்கிறேன். ஹாலிவுட் இலும் அந்நாட்களில் அது பெரிய தொழிநுட்ப வளர்ச்சியாக கருதப்பட்டிருக்கும்.

படத்தின் கதை நிகழ்வதாக காட்டப்படும் காலத்தில் நிகழ்ந்த முக்கியத்துவமிக்க சில சம்பவங்கள் படத்தின் கதையோட்டத்தில் வந்து செல்வது சிறப்பாக இருக்கும். சிறு வயதில் Forrest இன் வீட்டுக்கு வரும் விருந்தினர் எல்விஸ் ப்ரெஸ்லி ஆக இருப்பார். பின்னாளில் தாம் வாழும் காலக்கட்டங்களில் பதவியில் இருந்த அதிபர்களை எதேச்சையாக சந்திப்பார். அமெரிக்கா வியட்நாம் போரில் ஈடுபடுவதும் பின் போருக்கு எதிரான உணர்வு அமெரிக்காவிலேயே உருவாவது, சீனாவுடன் உறவைவலுப்படுத்த ராஜதந்திர நடவடிக்கையாக ping pong ஆட்டக் குழு சீன செல்வது. அமெரிக்காவையே ஆட்டிப் படைத்த ஹிப்பி கலாச்சாரம், ஆப்பிள் கம்பனியின் வளர்ச்சி, AIDS என்பன அவற்றுள் சில.


படம் பாரம்பரியமாய் தொடரும் மரபுகளுக்கும் அதற்கெதிரான எதிர் பண்பாட்டு வாழ்க்கை முறைக்கும் இடையிலான முரண்களைக் கூறி மரபுகளின் பெருமையையும் அவ்வாறான வாழ்க்கை முறையின் அவசியத்தையும் கூறுகின்றது எனலாம். இவ்வாறன புனிதக் கற்பிதங்களின் மீது நம்பிக்கையற்ற இப்படித்தான் வாழ வேண்டுமென்ற வரையறைகளை எல்லாம் மீறுதலே வாழ்க்கை என்ற எண்ணம் கொண்ட எனக்கு இந்தப் படம் பிடித்ததற்கான காரணம் எனக்கு இன்னமும் புரியவே இல்லை.

படத்தை பார்த்த போது எப்படி இந்தப் படத்தை கமல் தவற விட்டார். நிச்சயம் அவர் Remake செய்திருக்கக் கூடிய படம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதுவும் இந்தியனில் சந்துரு பாத்திரம் இந்த forrest பாத்திரத்தின் தோற்றத்திற்கு பொருத்தமான ஒன்றும் கூட. ஆனால் கமல் சொன்ன விடயம் இன்னமும் ஆச்சரியமான ஒன்று. அதாவது Forrest gump படத்திற்கு எதிராக அவர் வழக்கு கூட போட்டிருக்க முடியுமாம். அவர் நடித்த "சுவாதி முத்யம்" படத்திற்கும் அதற்கும் தொடர்புண்டாம் என்று சொல்லியிருக்கிறார். நான் அந்தப் படத்தை பார்த்ததில்லை. இப்போது ஷாருக்கின் My Name is Khan Trailer பார்த்த போது பாதிப்பில் எடுத்திருப்பதாகவே தோன்றியது. ம்ம் பெப்ரவரியில் பார்ப்போம் நான் நினைத்தது சரியா என.

வியாழன், 14 ஜனவரி, 2010

ஆயிரத்தில் ஒருவன்- என் பார்வையில்

கதையை நான் சொல்லப் போவதில்லை So பயமில்லாமல் படியுங்கள்


செல்வராகவன் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களை வரிசைப்படுத்தினால் நிச்சயம் அவருக்கு இடமுண்டு. துள்ளவதோ இளமை பாடல்களைக் கேட்டு விட்டு அதை டிவியில் பார்த்த போது எரிச்சலாக இருந்தது இவனெல்லாம் ஒரு ஹீரோ என சலிப்பு வேறு. அந்தக் கடுப்பில் படமே பார்க்கவில்லை. 2003 ஆம் வருடம் அதே ஹீரோ நடித்து ஒரு படம் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. நண்பர்களின் வற்புறுத்தலுக்காக அந்தப் படத்தைப் போய் பார்த்தேன் பார்த்த நாளில் இருந்து தனுஷ் என் விருப்பத்துக்குரிய நடிகர்களில் ஒருவராகி விட்டார். இவனைப் பிடிக்காது என்ற முன் முடிவுடன் படம் பார்க்கச் சென்றவனைஅவரது ரசிகனாக்கிய திறமைக்கு சொந்தக்காரர் செல்வராகவனே.


இதோ கிட்டத் தட்ட மூன்று வருடங்களாக இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என போக்குக் காட்டிய செல்வராகவனின் புதியப் படைப்பு ஆயிரத்தில் ஒருவன். நிச்சயமாக தமிழிலே இது ஒரு புதிய முயற்சி. செல்வராகவன் படங்களில் என்னவெல்லாம் நாம் எதிர்ப்பார்ப்போமோ, என்னவெல்லாம் இருக்குமோ அத்தனையும் இருக்கிறது ஆனால் முற்றிலும் புதிய களத்தில்.
கிபி 13 ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது கதை. சோழ பாண்டிய மன்னரிடையே ஏற்படும் போர் உக்கிரமடைய சோழ இளவரசன் பெரும் படை புடைசூழ குறித்த சிலரோடு பெயரறியா தீவொன்றைச் சென்றடைகிறான். அவனைப் பின்தொடரும் ஒரு பாண்டிய நாட்டவனின் குறிப்புக்கள் அடங்கிய ஓலைச் சுவடிகளின் ஆதாரத்தோடு அந்த சோழன் தஞ்சமடைந்த இடத்தை கண்டறிய முயலும் ஒரு தொல்பொருள் ஆய்வுக் குழுவின் முயற்சியே ஆயிரத்தில் ஒருவன்.
தொல்பொருள் ஆய்வுக்குழுவின் தலைவி ரீமா சென், ஏலவே இப்பணியில் ஈடுப்பட்ட தன தந்தையைப் பறிக்கொடுத்த அண்ட்ரியா, இராணுவ உதவி வழங்கும் அழகம் பெருமாள் இவர்களோடு தன குழுவினருடன் பயணத்தில் இணைந்துக் கொள்ளும் போர்ட்டர் கார்த்தி. இவர்களே பிரதானப் பாத்திரங்கள்.


கார்த்தி நன்றாக நடித்திருக்கிறார். என்ன இன்னமும் பருத்தி வீரன் தாக்கம் இவரை விட்டுப் போகவில்லை என நினைக்கிறேன். கொஞ்சம் ஸ்டைலை மாற்றுங்கள் கார்த்தி. செல்வராகவன் படங்களில் வழமையாக கதாநாயகி சோகம் ததும்ப வலம் வருவார். இதிலே அண்ட்ரியா அந்த வேலையைக் கச்சிதமாக செய்கிறார். அழகம் பெருமாள் வழமைப் போலவே சிறப்பாகச் செய்திருக்கிறார். பார்த்திபன் சஸ்பென்சில் வைக்கப்பட்டிருந்த பாத்திரம் படம் வெளிவரும் வரை ஸ்டில் ஒன்று கூட வெளியிடப்படவில்லை. நானும் சஸ்பென்சை உடைக்க விரும்பவில்லை ஆடியோ ரிலீசில் பார்த்திபன் பேசிய அதே வார்த்தைகளில் சொல்வதென்றால் ஒரு ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் பார்த்திபன்.


அடுத்தது ரீமா சென் பார்க்க அத்தனை அழகாய் இருக்க மாட்டார். முதிர்ச்சி தட்டிய முகம். ஒரு ஆண் போன்ற பாவனைகள் இவரா கிடைத்தார் செல்வராகவனுக்கு என நானும் யோசித்தேன். இதற்கெல்லாம் தன நடிப்பால் பதில் சொல்லியிருக்கிறார் ரீமா. முதல் படத்திலேயே தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப் பட்ட கார்த்தி, 25 வருடத்திற்கு மேலே நடிப்பனுபவம் கொண்ட பார்த்திபன் எல்லாமே இவர் நடிப்புக்கு முன்னாள் ஒன்றுமே இல்லை என்னுமளவுக்கு அசத்துகிறார் ரீமா சென். ரீமா தவிர்ந்து இன்னுமொருவரை அந்தப் பாத்திரத்தில் நினைத்தும் பார்க்க முடியவில்லை. விடுங்கள் விட்டால் ரீமா சென்னுக்கு ரசிகர் மன்றமே ஆரம்பித்து விடுவேன். உண்மையை சொன்னால் சிம்ரனுக்கு பிறகு எந்தப் பாத்திரம் என்றாலும் செய்யக் கூடியவர் இவராயத்தான் இருக்கும்.


இசை ஜி.வி.பிரகாஷ் பாடல்கள் ஏலவே ஹிட் ஆயிற்றே. பின்னணி இசையிலும் பெரிதாக குறை வைக்கவில்லை. பார்த்திபனும் ரீமா சென்னும் ஆவேசமாய் சண்டையிடுவார்கள் திடிரென ரீமா அவரை வேறு விதமாக சீண்ட அது ஒரு சிருங்கார விளையாட்டாக மாறும் அவ்விடத்தில் பிரகாஷின் இசை அருமை மாமாவின் பெயரைக் காப்பாற்றி விடுவார். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு மிக முக்கியமானதொன்று. அமெச்சூர் தனமான சில கிராபிக் காட்சிகளின் குறையை மறைப்பதிலும் சோழப் பேரரசு தொடர்பான காட்சிகளிலும் ஒளிப்பதிவு அருமை. செல்வாவுக்கு தன மேல் நம்பிக்கையும் தன படைப்புக்களில் காதலும் அதிகம் என நினைக்கிறேன். அதனால்தானோ என்னவோ எடிட்டருக்கு வேலையே வைக்கவில்லை. சில இடங்களில் கத்தரி வைத்திருந்தாள் கச்சிதமாய் இருந்திருக்கும்.


தான் ஒரு நல்ல இயக்குனரா என்று தனக்குத் தெரியவில்லை எனினும் தான் ஒரு சிறந்த திரைக்கதாசிரியர் எனவும் செல்வா ஒரு முறை பேட்டியளித்திருந்தார். ஆனால் இங்கே திரைக்கதை அத்தனை நேர்த்தியாய் இல்லை. சில வேளை இவர் நினைத்ததைப் படமாக்க சிரமமாய் இருந்திருக்கலாம். படத்தில் இவர்கள் பட்ட சிரமம் ஒவ்வொருக் காட்சியிலும் தெரிகிறது. தான் ஆத்ம நண்பர்கள் யுவன்,அர்விந்த் கிருஷ்ணா உடனான பிரிவு,சோனியாவுடன் விவாகரத்து இத்தனைக்கிடையிலும் இந்தப் படத்தோடு அவர் நடாத்தியிருக்கும் போராட்டம் ம்ம் கலையைக் காதலிப்பவனால் மட்டுமே அது முடியும். ஆக சில குறைகள் இருந்தாலும் தமிழின் புதிய முயற்சி என்ற வகையில் இதற்கு கொடுக்கப்படும் ஆதரவு அவரை மேலும் ஊக்கப்படுத்தும் என நம்புகிறேன்.


படத்தின் இடைவேளையில் அடடா என ரசிகர்கள் கொஞ்சம் பரவசமான மூடில் இருந்தார்கள். எனினும் கிளைமாக்ஸ் நெருங்கும் போது "எப்பையா முடியும்?" என்ற நிலைமைக்கு கொண்டுப் போயிருக்க வேண்டாமே. படத்தில் எதையோ ஞாபகப்படுத்தும் விதமான சில அரசியல் உள்குத்துக்கள் உண்டு. படம் பார்த்தோருக்குப் புரிந்திருக்கும். அதை இங்கே விளக்கினால் சுவாரசியம் கேட்டு விடுமென்பதால் விட்டு விடுகிறேன். நான் மேலே சொன்ன கதை சுருக்கத்தை வைத்து நீங்கள் ஒரு கதையை ஊகித்திருப்பினும் இடைவேளைக்குப் பின் வரும் ட்விஸ்ட் நான் சற்றும் எதிர்பாராதது. உங்களுக்கும் அப்படியே இருக்கும். சோ தயவு செய்து தியேட்டரில் போய்ப் பார்த்து இந்தப் புதிய முயற்சிக்கு ஆதரவு கொடுங்கள். போகும் போது குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு போதல் நலம். என்னை கேட்டால் 14 வயதுக்கு மேலுள்ளோர் பார்க்கலாம் என்பேன்.

ஆயிரத்தில் ஒருவன் - ஆயிரத்தில் ஒரு படம்





தல போல் நடக்கும் தளபதி



நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.




அடுத்தடுத்து தான் ஆடிய பத்தாவது இறுதிப் போட்டியிலும் தோற்றிருக்கிறது இந்தியா. முதலில் 150 ஓட்டங்களுக்கு சுருட்டி விடலாம் என நினைத்தாலும் ரைனாவின் அபாரமான ஆட்டத் திறமையால் 246 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி எப்போது சொதப்புவார்கள் எனத் தெரியாததால் மிகுந்த அவநம்பிக்கையுடன்தான் டிவி முன் அமர்ந்தேன். நல்லவேளை சங்கக்கார அன் கோ என்னை ஏமாற்றவில்லை. ஆனாலும் 48 ஆவது ஓவர் வரை கடும் போட்டியைக் கொடுத்த இந்திய அணியை பாராட்டத்தான் வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் போட்டியைக் கைவிட வில்லை இந்தியா. இந்திய அணியின் பழைய போட்டிகளை நினைத்துப் பார்த்தேன். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் அவர்களது Body Language ஏ எதிரணியினருக்கு உதிரி உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்து விடும். தோனியின் தலைமையில் ஏற்பட்ட நல்லதொரு முன்னேற்றம் இது. இலங்கையைப் பொறுத்தவரை புதுமுகங்களுடனான அணியின் வெற்றி இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு நல்லதொரு அறிகுறி. வாசுக்கு சொல்லாமலே கல்தா கொடுத்தாயிற்று. சனத்,முரளி போன்ற ஏனைய கிழடுக் கட்டைகள் கௌரவமாய் ஓய்வுப் பெறுதல் உத்தமம்.

ஜனாதிபதித் தேர்தல் நாளொரு கொலையும் பொழுதொரு சச்சரவுமாய் உச்சக் கட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியின் பிரச்சாரம் சப்பென இருக்கிறது. போர் வெற்றி ஒன்றைத் தவிர வேறெதுவும் சொல்ல முடியாத நிலை அவர்களுக்கு. இதில் ஆளுங்கட்சி தொ(கு)ண்டர்கள் பாவம் பிரியாணிக்கும் அன்றைக்குத் தரப்போகும் காசுக்கும் ஆசைப்பட்டு ஐதேகவின் பிரச்சாரத்திற்கு போகவென வண்டியேறிய ஐந்துப் பிள்ளைகளின் ஏழைத் தாயை போட்டுத் தள்ளியிருக்கிறார்கள். முன்பு ஐதேக ஆட்சியில் இருந்தக் காலத்தில் தேர்தல் வன்முறைகள் அதிகமாகவே இருக்கும். பின் சந்திரிக்கா அரசில் ஒப்பிட்டளவில் வன்முறைகள் குறைந்தாலும் மகிந்த மீண்டும் பழைய கலாசாரத்தை கொண்டு வர முயல்கிறார். மகிந்தவின் பிரசாரம் வேடிக்கையாக இருக்கிறது. போரை வென்ற நன்றிக் கடனாக அவருக்கு வாக்களிக்கவாம். பிரித்தானியாவில் உலகப் போரை வென்ற சர்ச்சிலுக்கே அடுத்த தேர்தலில் கிடைத்தது தோல்விதான். ஜெனரலின் விளம்பரம் ஒன்றில் முதலில் வீரத்தளபதி (அப்படித்தான் போடுகிறார்கள்) சீருடையில் வருகிறார் பின் தேசிய உடைக்கு மாறுகிறார். நடக்கிறார் நடக்கிறார் விளம்பரம் முடியும் வரையில் நடக்கிறார். தளபதி தலயின் படம் ஏதும் பார்த்தாரோ தெரியாது.


நல்லப் பாடல்கள் எல்லாம் வெளியாகி இருக்கின்றன. சந்தேகமில்லாமல் முதலிடம் விண்ணைத் தாண்டி வருவாயாவுக்குத்தான். "ஹோசானா" பச்சக் என மனதில் ஒட்டிக் கொண்டு போக மறுப்பதில் மற்ற பாடல்களை அடிக்கடி கேட்க முடியவில்லை. "மன்னிப்பாயா" பாடலில் ஸ்ரேயா கோஷலின்(இன்னுமொரு முன்பே வா ஸ்ரேயாவுக்கு) குரல் இனிமை. கூடவே ஈடு கொடுத்திருக்கிறார் இசைப்புயல்.
கோவாவில் ஏழேழுத் தலைமுறைக்கும் பாடல் கேட்டப் போது பழைய ஈஸ்ட்மன் கலரும் தொடர்ந்து மக்கள் நாயகன் ராமராஜன், கௌண்டமணி,செந்தில் என டைட்டில் போடுவதுமாக எல்லாம் ஒரு பிரமை. அதில் எனக்குப் பிடித்தது "இதுவரை" பாடல் அன்றியாவின் குரலில்.


ம்ம் இதை இப்போது பதிவிட்டப் பின் ஆயிரத்தில் ஒருவன் பார்க்கப் போவதாய் ஒரு ஐடியா. போய் பார்த்து விட்டு மாலை என் கருத்துக்களைப் பதிவிடுகிறேன்.

வெள்ளி, 8 ஜனவரி, 2010

ஜனாதிபதி தேர்தலும் சிறும்பான்மை வாக்குகளும்

நன்றி வந்தியத்தேவன்

சென்ற வருடத்தில் தாம் படித்த பதிவுகளில் பிடித்த ஒன்றாக என் பதிவையும் குறிப்பிட்டிருக்கிறார். பதிவர் வந்தியத்தேவன் அவருக்கு எனது நன்றிகள். ஆனால் கொஞ்சம் அதிகமாகவே ஆணி பிடுங்க வேண்டியிருப்பதால் இந்த வருடம் எத்தனை பதிவுகள் இட முடியுமென்பது சந்தேகம்தான். ஆனால் நேரத்தை சரியாக முகாமைப் படுத்த முடிந்தால் நிறைய பதிவிடல் சாத்தியமே. முயற்சிப்போம்.

தீர்க்கமான கட்டத்தை எட்டியிருக்கிறது இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் சச்சி,யோகராஜை தொடர்ந்து மூத்த அரசியல்வாதி எம்.எஸ்.செல்லச்சாமியும் சரத் பொன்சேகாவை ஆதரிக்கத் தயாராகி விட்டார். எனக்குத் தெரிய இப்போது CWC இல் ஜூனியர் தொண்டாவுடன் முத்து சிவலிங்கம் மட்டுமே இருக்கிறார் என நினைக்கிறேன். மலையக வாக்குகள் அதிகமாக எந்தப் பக்கம் போகும் என்பது தொடர்பில் இப்போது ஒரு முடிவுக்கு வரக்கூடியதாகவே உள்ளது.

சமாதனம் பேசிய காலத்தில்

யாழ் வன்னி வாக்குகளும் தமிழ் கூட்டமைப்பின் முடிவின் படியே இடப்படும் என நினைக்கிறேன். கிழக்கு தமிழ் வாக்குகள் மட்டுமே மற்றப் பக்கம் போகும் வாய்ப்புண்டு. மட்டக்களப்பு மேயர் சிவகீதாவின் மாற்றம் ஏதும் தாக்கம் விளைவிக்குமா என்பது தெரியவில்லை.


முஸ்லிம் மக்களின் வாக்குகள் தொடர்பில் என்னால் எதிர்வு கூற முடியவில்லை. வடக்கு கிழக்கு பிரிந்ததில் பெரும் பங்காற்றிய ஜேவிபி மற்றும் இத்தீர்ப்பை வழங்கிய சரத் என் சில்வா போன்றோர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிப்பது, முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் எவ்வித முன்னேற்றங்களும் இன்மை என்பன எவ்வாறானத் தாக்கங்களை உருவாக்கும் என்பது தெரியவில்லை.
சிங்களர்களில் நகர்புறத்தினர் மாற்றம் ஒன்றை எதிர்ப்பார்க்கினும் கிராம மக்கள் இன்னமும் ஜனாதிபதியை ராஜாதி ராஜனாகவே பார்க்கின்றனர். எப்படியோ தேர்தல் மிகுந்த பரபரப்பான ஒன்றாக இருக்கும்.

வியாழன், 31 டிசம்பர், 2009

2009 வலிகளும் சந்தோஷங்களும்


2009 ம் வருடம் கடந்து செல்ல இன்னும் சில மணித்துளிகளே இருக்கும் நிலையில் இந்த வருடத்தின் என் கடைசிப் பதிவு. எப்போதும் போல இந்த 2009 உம் எதிர்ப்பார்ப்போடுதான் ஆரம்பித்தது. தனிப்பட்ட முறையில் என் மகிழ்வுக்கு காரணம் நான் வலைப்பதிவு ஆரம்பித்து எழுத ஆரம்பித்தது. எழுதி குவித்த விட வேண்டுமென ஆசையுடன் ஆரம்பித்து சென்று கொண்டிருந்தாலும் மே மாதமளவில் ஒரு பெருந் தேக்கம். இத்தேக்க நிலைமை எனக்கு மட்டுமல்ல கிட்டத்தட்ட இலங்கையில் இருந்து பதிவிடும் அனைவருக்குமே இருந்தது. இதற்கான காரணம் பரகசியம். பதிவெழுதுவதற்கான மனநிலையை இழந்திருந்தோம். அந்த மே மாதத்திற்கு பிறகு நான் மீண்டும் எழுத வந்ததே ஆகஸ்ட்டில்தான். ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் சில இழப்புகள் தாங்கவொண்ணா மனத்துயரை ஏற்படுத்தி விடுகின்றன.


ஆரம்பத்தில் ஏற்க மறுத்து சாட்டு சொல்லிய மனம் பின் ஏற்றுக்கொண்டாலும் இன்னமும் சில வீராவேச வலைப்பதிவுகளில் சொல்லப்படும் விடயங்கள் உண்மையாகிவிடாதா என்ற நப்பாசையும் மனதின் மூலையில் தொக்கி நிற்கிறது. இது சென்ற வருடத்தின் மனதில் தோன்றிய பெரும் வலி இன்னமும் மாறா வலி. மூன்றரை லட்சம் பேரின் கதி என்ன என இதற்கு காரணமான பங்குதாரர்களைக் கேட்டால் 84 இல் ஆலமரம் கதை சொன்னவர்களின் வாரிசுகள் இதற்கும் அழகான உவமைகள் சொல்லக் கூடும்.


இந்த மாபெரும் இழப்பைத் தவிர்த்து என்னை பாதித்த மற்றைய இரு இழப்புகள். ஒன்று மைக்கேல் ஜக்சனுடையது மற்றையது நாகேஷுடையது.
மைக்கேல் ஜாக்சனின் தனிப்பட்ட வாழ்கையை விட்டு விடுவோம். அவரது சாகா வரம் பெற்ற பாடல்களும் நடனமும்மறக்க இயலாதவை . எல்லோரும் வாழ்க்கையில் கடக்கும் காதல் தோல்வி என்னை கடந்த போது அந்தப் பிரிவை அவரின் "You are not alone" பாடலின் துணைக் கொண்டே தவிர்த்தேன்.


நாகேஷ் அவரது பழைய சில படங்களில் அவரும் சில சேட்டைகள் செய்திருக்கிறார். ஆனால் அதையும் தாண்டி அவர் நடிகர் திலகத்தை எல்லாம் தாண்டிய அற்புத நடிகர் (என் கருத்தில்). கமலிடமே அவரின் பாதிப்பு இருப்பதாய் எனக்கு படும்.


ஆகா என மனதுக்கு உவகை ஊட்டிய செய்திகள் எனப் பார்த்தால் முதன்மையானது இசைப்புயல் கண்டம் கடந்து வீசியது. அந்த ஆஸ்கார் கணங்கள் மறக்க முடியாதவை. எவ்வளவு யோசித்து பார்த்தாலும் சந்தோஷக் கணங்கள் வேறெதுவும் ஞாபகம் வரவே இல்லை.


கிரிக்கெட்டில் என்னை சந்தோஷப் படுத்தியது டில்ஷானின் விஸ்வரூபம், வருத்தம் முரளியின் முன்கூட்டிய ஒய்வு அறிவிப்பு. டில்ஷான் அடுத்த வருடம் இன்னும் கலக்குவார் என நம்புவோம்.


சினிமாவை பொறுத்தவரை போன வருடம் சப்பென இருந்தது. பதிவர்களுக்கு நல்லத் தீனிப் போட்ட படங்கள் பாலாவின் நான் கடவுள், கமலின் உன்னைப் போல் ஒருவன், ஜனநாதனின் பேராண்மை மூன்றும் என நினைக்கிறேன். இம்மூன்று படங்களிலும் பாராட்டவோ தூற்றவோ ஏதோ இருந்தன. ஆனால் அப்படி இல்லாமல் வருகைக்கு முன் இருந்தே பட்டையைக் கிளப்பிய படம் சந்தேகமில்லாமல் வேட்டைக்காரன்.

மணமகளை கொஞ்சுவதைப் பார்த்தாலே தெரியுது.

பரபரப்பாய் தேடி தேடி படிக்க வைத்தவர்கள் நடுவில் தேவநாதனும் வருட இறுதியில் என்.டி. திவாரியும். அதாவது சென்டிமென்ட்டும் அக்க்ஷனும் நிரம்பிய சென்ற வருடத்தின் கிளுகிளுப்புக்கள். அதிலும் திவாரி கல்யாணத்தை தள்ளிப் போடாதே என சொன்ன நண்பர்கள் மத்தியில் இன்னும் அறுபது வருடங்களுக்கு வேண்டுமானாலும் தள்ளிப் போடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய மகான்.
சென்ற வருட ஆச்சரியம் பராக் ஒபாமாவும் அவருக்கு கிடைத்த நோபெல் பரிசும். பார்ப்போம் 2010 என்னென்ன ஆச்சரியங்களை தன்னுள் ஒளித்து வைத்திருக்கிறதென.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.






Related Posts with Thumbnails