அது பாட்டில் போய் கொண்டிருக்கும் வாழ்வில் தன பாட்டில் வருவது காதல். காதலை அடையும் முயற்சியில் வரும் இம்சைகள்தான் எத்தனை அப்படியான சந்தர்ப்பங்களில் ஊரில் எத்தனையோ பெண்கள் இருக்கையில் ஏன் இவளைக் காதலித்தோம் எனத் தோன்றுமல்லவா? அப்படி ஒரு மலையாள கிறித்தவ குடும்பத்தில் பிறந்த ஜெஸ்சியை காதலிக்கும் ஹிந்து இளைஞன் கார்த்திக் தனக்குத்தானே கேட்டுக் கொள்ளும் கேள்விதான் படமே

ம்ம் படத்தின் கதை ரொம்ப சிம்பிள் உங்களனைவருக்கும் தெரிந்ததுதான் வழமையான கெளதம் படங்களை போன்றே த்ரிஷாவை முதன் முதலாய் பார்க்கும் சந்தர்ப்பத்திலேயே காதலில் விழுகிறார் சிம்பு. சில பல முயற்சிகளின் பின் முதலில் மறுத்த த்ரிஷா பின் கௌதமின் சரித்திர பிரசித்திப் பெற்ற " I Think I'm in love with you" சொல்கிறார். பின் வீட்டார் எதிர்க்க கதை கெளதம் மேனனின் இஷ்ட Location அமெரிக்காவுக்கு எல்லாம் பயணித்து கடைசியில் சேர்ந்தார்களா? இல்லையா என்பது கிளைமாக்ஸ்.
சிம்புவைப் பார்க்க ஆச்சரியம் எல்லாம் எழவில்லை. அவர் திறமையாளர் என்பது தெரிந்ததுதான். ஆனால் இந்த படம் தரப்போகும் வெற்றியின் மிதப்பில் பழைய குருடி கதவைத் திறடி என விரல் சுத்தாமல் இருக்க வேண்டும். முதன் முதலில் காதல் வயப்படும் போது காட்டும் பரவசம், த்ரிஷாவை impress செய்வதற்காக எடுக்கும் முயற்சிகள், முதன் முதலில் பேசும்போதுக் காட்டும் தயக்கம், அரிதாகத் தலைக்காட்டும் கோபம், மெல்லிய சோகம் அனைத்தையும் முகத்திலேயே கொண்டு வந்திருக்கிறார். இதுவெல்லாம் இல்லாமல் அநியாயத்திற்கு அழகாய் வேறு இருக்கிறார். அதிலும் கணேஷ் வீட்டில் இவர் த்ரிஷாவுடன் பேசும் காட்சியில் கொஞ்சம் தாடி வளர்ந்திருக்கும். அப்படியே அவர் அப்பாவைப் போல் அத்தனை அழகு
த்ரிஷா ம்ம் ஓகே. எனக்கு ரொம்பவும் பிடித்த நடிகையில்லை. இந்தப் படத்திலும் பிடிக்குமளவு ஏதும் செய்து விடவில்லை. ஆனால் கொடுத்த வேலையைக் குறைவில்லாமல் செய்திருக்கிறார். ரொம்பவும் மெலிந்து கண்ணுக்கு கீழான கன்ன எலும்புகள் காலர் எலும்புகள் எல்லாம் தெரிய அதற்கு கீழும் ஏது சொல்லிக் கொள்ளும் படி பெரிதாய் இல்லை. இதனால்தானோ என்னவோ கௌதமும் நான் அவள் Front ஐப் பார்த்ததை விட back ஐப் பார்த்ததுதான் அதிகம் என வசனம் வேறு வைத்திருக்கிறார்.
இவர்கள் தவிர படத்தில் சொல்லும்படியான பாத்திரம் சிம்புவின் வயதான நண்பராக வரும் கணேஷ் என்றப் பாத்திரம். இவரை காக்க காக்கப் படத்தின் கமராமேன் என்கிறார்கள். எனக்குத் தெரிந்து காக்க காக்க படத்தின் கமராமேன் R . D . ராஜசேகர். படத்தில் timing ஆக இவர் அடிக்கும் comment க்கள் சிறப்பை உள்ளன. சிம்புவும் இவரும் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் போது சிம்பு அடிக்கடி கேட்கும் கேள்வியை இவரே சிம்புவிடம் " இவ்ளோ பொண்ணுங்க இருக்கும் போது நீ ஏண்டா ஜெஸ்ஸிய லவ் பண்ணுன? " எனக் கேட்கும் போது அரங்கமே சிரித்தது.
கமரா மனோஜ் பரமஹம்சா இப்போதுதான் இவர் பெயரை கேள்விப் படுகிறேன். கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் எனும் அளவுக்கு காட்சிகள் அவ்வளவு அழகு. என்ன close up காட்சிகளில் த்ரிஷாவை கொஞ்சமேனும் மெனக்கெட்டு இளமையாய் காட்டியிருக்கலாம். எடிட்டிங் வழமைப் போல அன்டனி. குறையேதும் எனக்குத் தெரியவில்லை. நிறையப் பார்வையாளர்கள் இரண்டாம் பாதியில் சத்தமிட்டாலும் எதையும் வெட்டத் தேவையில்லை என்பது என் கருத்து.


காதலில் விழுந்த கணத்தின் பரவசம் ஒரு கொண்டாட்டமான துள்ளாட்டமாக ஹோசன்னவில் ஆரம்பிக்க அவள் அழகை பிரமிக்கும் ஓமனப் பெண்ணே ஒரு கனவை போல் மிதக்கச் செய்கிறது. காதலியை உடன்பட வைக்கும் போராட்டம் தட தட என கண்ணில் கண்ணை பாட்டில். அடுத்து ஸ்ரேயா கோஷலும் இசைப்புயலும் பிரிவையும் ஏக்கத்தையும் உணர்த்தும் மன்னிப்பாயாவில் உருக பின் சர்ச் கல்யாணங்களில் வரும் இசை, நாதஸ்வர இசை எல்லாம் கோர்த்த ஒரு கல்யாண பரவசம் அன்பில் அவன் பாடலில். பாடல்களைத் தவிர்த்து விட்டு படம் எடுக்கலாமே என்ற வாதத்தை எல்லாம் தவிடு பொடியாக்கியிருக்கிறார் இசைப் புயல். படம் பார்த்தவர்கள் மனதை விட்டு சொல்லுங்கள் இவரைத் தவிர்த்து இன்னுமொருவர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்க முடியுமா?
படத்தில் குறைகள் பெரிதாய் இல்லை. என்ன சிம்பு படத்தில் சண்டை வேண்டுமென்பதற்காகவோ என்னவோ த்ரிஷாவின் அண்ணன் கூட்டி வரும் நான்கு ரௌடிகளுடன் சண்டையிடுகிறார். வாரணம் ஆயிரத்தில் கதையைக் கொண்டு செல்ல திடீரென சூர்யாவுக்கு ராணுவத்தில் சேரும் ஆசை வந்தது போல யதார்த்தமான படத்தில் சிம்பு பத்து பேரை அடிப்பதை ஞாயப்படுத்த அவர் boxer என்று சொல்வது (லாஜிக்காமாம் ) மட்டும் கொஞ்சமாய் இடித்தது. கேரளாவில் நாலு நாளாய் சுற்றிய பின் கொஞ்சம் மூளையைப் பாவித்துதான் சர்ச்சில் த்ரிஷாவைக் காண்கிறார். ஆனால் அமெரிக்காவில் படம் எடுக்கப் போனவர் அங்கு அவரை சந்திப்பதை Just coincident என ஒத்துக் கொள்ள முடியவில்லை.
படம் கட்டாயம் பார்க்கலாம். எனக்குப் பிடித்தது. மனதை என்னவோ செய்தது. காரணம் அது என் கதை. கெளதம் மேனன் End card போடும் போது அது தன்னுடைய கதை என்பது போல முடிக்கிறார். படம் பார்த்த என் நண்பர்கள் பலர் தம் கதை என்கிறார்கள். so படத்தைப் பாருங்கள் இது உங்கள் கதையாகவும் இருக்கலாம்.